ஒரு நாள்

புதிய இடம் என்பதால் ஜெகனுக்கு தூக்கம் வரவில்லை. அறைக்கதவுகள் இரண்டும் முழுதாக திறந்திருந்ததால் உள்ளே புழுக்கம் இல்லை, நண்பர் இரு பெஞ்சுகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன் மேல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். பேன்கள் வெகு உயரே, சத்தமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தன.

தான் கொண்டு வந்திருந்த போர்வையை விரித்துப் படுத்த ஜெகன், பாதி தூக்கம் பாதி விழிப்பு என்றிருந்தான்- யாரோ உள்ளே வந்தார்கள், எதையோ எடுத்துப் போனார்கள், வாசலில் இரு போலீஸ்காரர்கள் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலு மணிக்கு முழு விழிப்பு தட்டியபோது வெளியே மழை பெய்து ஓய்ந்திருந்தது. அது ஜெகனுக்கு தெரிந்திருக்கவில்லை, இத்தனைக்கும் அவன் ஒரு கணம்கூட மெய்ம்மறந்த தூக்கத்தில் இருந்திருந்தான் என்று சொல்ல முடியாது.

ஐந்து மணி அளவில் மூன்றாம் நண்பர், தன் மகள் வீட்டுக்குத் தூங்கப் போனவர், திரும்பி வந்தார். குளித்து ஆடை மாற்றிக் கொண்டு நெற்றியில் பெரிய விபூதித் தீற்றலுடன் புதுசாக வந்தார். ஜெகனைப் பார்த்து, “ஸார், நீங்க டீ குடிச்சுட்டு வாங்க, நான் பாத்துக்கறேன்,” என்றார். பல் தேய்த்து முகம் கழுவிக்கொண்டு, இரவு பெஞ்சின் மேல் தூங்கிக் கொண்டிருந்த நண்பரை துணை சேர்த்துக் கொண்டு ஜெகன் டீ குடிக்கப் போனபோது சாலையில் யாருமேயில்லை.

ஆங்காங்கே இருள் திட்டுத்திட்டாய் படிந்திருந்தது. எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. கால்மணி நேரம் போல் போனபின் ஒரு கடையில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது; அருகில் போனபோது அடுப்பில் எதுவோ கொதித்துக் கொண்டிருந்தது. தக்காளி, வெங்காயம், மிளகாய், ஏதோ ஒரு மாவு என்று நிறைய பார்க்க முடிந்தது.

திரும்பி வரும் வழியில் இருள் திட்டுக்களில் ஒன்றுக்கு அப்பால், சாலையோர விளக்குக் கம்பத்துக்கு கொஞ்சம் எட்டியிருந்த ஒரு சிறிய குடிசை போன்ற வீட்டு வாசலில் நைட்டி அணிந்த ஒரு பெண் குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. ஜெகனும் அவன் நண்பனும் வருவதை அறிந்ததும் எழுந்து நின்றவள், அவர்கள் தன்னைக் கடந்து செல்லும்வரை கோலம் போடுவதைத் தொடரவில்லை. அவளது கன்னக் கதுப்பில் டூத் பிரஷ் மேடிட்டிருந்ததை ஜெகன் உற்று நோக்கினான். அதன் பிடி சன்னமாய் அவள் வாயிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதை எடுக்கவோ, அதைக் கொண்டு பல் விளக்கவோ முயற்சிக்காமல் அவள் அவர்கள் இருவரும் போகக் காத்திருந்தாள்.

அப்புறம் ஆறு மணிக்கு ஆரம்பித்த பரபரப்பு அடங்கி ஜெகன் வீடு திரும்ப மணி பதினொன்றரை ஆகிவிட்டது. வண்டி எடுத்துப் போகவில்லை, இருந்தும் எப்படியோ ஜெகன் வந்துவிட்டது தெரிந்து, தட்டுவதற்கு முன்னரே, டிவி பார்த்துக் கொண்டிருந்த அவனது மகன் ஓடி வந்து கதவைத் திறந்து விட்டான். நான்கு தோசை வார்த்து வைத்து விட்டு அவன் மனைவி தூங்கப் போயிருந்தாள். ஆனால், சாப்பிட உட்காரும்போதுதான் தெரிந்தது, அவளும் தூங்கவில்லை என்று. என்ன ஆச்சு, என்று கேட்டுக்கொண்டே தூக்கம் கொஞ்சம்கூட இல்லாத கண்களுடன் அவள் வெளியே வந்தாள்.

Advertisements

4 thoughts on “ஒரு நாள்

  1. குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. ஜெகனும் அவன் நண்பனும் வருவதை அறிந்ததும் எழுந்து நின்றவள், அவர்கள் தன்னைக் கடந்து செல்லும்வரை கோலம் போடுவதைத் தொடரவில்லை. அவளது கன்னக் கதுப்பில் டூத் பிரஷ் மேடிட்டிருந்ததை ஜெகன் உற்று நோக்கினான். அதன் பிடி சன்னமாய் அவள் வாயிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதை எடுக்கவோ, அதைக் கொண்டு பல் விளக்கவோ முயற்சிக்காமல் அவள் அவர்கள் இருவரும் போகக் காத்திருந்தாள்.// இந்த மூன்று நிமிட சிறுகதையும் எழுத்தாளர் எழுதி கொண்டிருப்பது புரிந்தது. வாசகர் வாசிக்க ஆரம்பித்ததை அறிந்ததும் நின்ற கதையின் தருணங்கள் வாசித்து முடிக்கும் வரை தொடரவில்லை. எழுத்தாளரின் கைவண்ணம் சில இடங்களில் அனாயசமாக வெளிப்பட்டிருக்கிறதை வாசகன் உற்று நோக்க, எழுத்தாளர் யாருக்காகவோ காத்திருக்கிறார். எங்கே தொடங்கியதோ அங்கேயே கதை நின்று விட்டது. ஜெகனுக்கும் காவல்துறைக்கும் உள்ள பணி என்ன? ஒருவேளை சமீபத்திய வாக்குமையப் பணியாக இருந்திருந்தால் கதையில் நன்கு பொருந்தியிருக்கக் கூடும். அதைப் பற்றி ஒரு வரி குறிப்பிட்டு இருந்திருக்கலாம். மீண்டும் பாஸின் அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்!!!

    1. நன்றி வீரா – ஆனா இதெல்லாம் நெம்ப ஓவர் (அடிக்கடி எழுதாம இருக்கறதுல இப்படி ஒரு நன்மை இருக்கும் போல 🙂 )

  2. அருமையான கதை
    ஒரு நாள் இன்னுமொரு நாளாகாத போது ஏற்படுகின்ற மெல்லிய அதிர்வுகளை எளிமையாக உணரவைக்கிறது.
    முதல் வாசிப்பில் என்ன இடம் என்பது வினாவாக தொங்கிக்கொண்டிருந்தது.பின்னூட்டத்தைபடித்து வாக்குமையம் என்று மனசு அறிந்தவுடன் நோக்குமையம் மாறிவிட்டது

    1. நன்றி. “இவன் என்னவோ தப்பு பண்ணியிருக்கானோ,” அப்படின்னு நினைக்க வைக்கப் பார்த்தேன், நண்பர் நோக்குமையத்தை உடைத்து விட்டார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s