அமரத்துவம் – காலத்துகள் குறுங்கதை

அண்மையில் நண்பர் காலத்துகள் ஒரு கதை எழுதியிருப்பதாகச் சொன்னார். “அனுப்புங்க ஸார்,” என்று சொன்னேன். அனுப்பினார். கதையைப் படித்து முடித்ததும் கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டுக் சிறிது நேரம் யோசிக்க வேண்டியிருந்தது.

“கதை கொஞ்சம் இடியோசின்க்ரெட்டிக்கா இருக்கு ஸார், ஆனா அது பரவாயில்லை, என் கவலை வேற. இந்தக் கதை தமிழ் சமூகத்துக்கோ அல்லது இலக்கியத்துக்கோ இதுவரை இல்லாத எதையாவது புதிதாய் அளிக்கிறதா?” என்று கேட்டேன்.

“அப்படியெல்லாம் எதுவும் இருக்காது ஸார், இது எனக்காக எழுதிக்கிட்டது” என்றார் நண்பர்.

“நமக்குன்னு சொல்லுங்க ஸார், இந்த மாதிரி கதைதான் புத்தம் புதிய காப்பிக்கு செட் ஆகும்,” என்று இந்தப்பக்கம் தள்ளிக் கொண்டு வந்துவிட்டேன்.

பயப்படாமல் படித்துப் பாருங்கள், இதெல்லாம் தமிழ் இலக்கியத்தை ஒன்றும் செய்யாது.

oOo

அமரத்துவம்
– காலத்துகள்

திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வீட்டில் உள்ளவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் அறைக்குத் திரும்பியவர் கதவு மற்றும் ஜன்னல்களைத் தாழிட்டுவிட்டு, ரகசிய காமிராக் கண்கள் எதுவும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கணினியை ஆன் செய்து தன் வாழ்நாள் விருப்பத்தை நிறைவு செய்ய ஆரம்பித்தார்.

பலரைப் போல் ராணி காமிக்ஸ், பூந்தளிர் என்று குற்றம் குறை சொல்ல முடியாத குழந்தைமையின் கதை கேட்கும் ஆர்வமாய் ஆரம்பித்த அவரது வாசிப்பு பிறகு அவரை இலக்கியத்திற்குள் கொண்டு செல்ல, மெல்ல மெல்ல ரேடிகலைஸ் ஆகி அவருக்கு எழுத்தார்வமும் உண்டாகியிருந்தது. வாசிப்பையே பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில், எழுத ஆரம்பித்தால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் காலம் கழித்தவர் பணி ஓய்வும் பெற்று விட்டிருந்தார். ‘இந்த வயசுல என்ன எழுத வேண்டியிருக்கு,’ என்ற பேச்சு வருமா என்ற கூச்சமும் சேர்ந்து கொள்ள, தன் ஆர்வத்தை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தவர் இன்று ஏதோ உந்துதலில் எழுத உட்கார்ந்து விட்டார்.

மனதில் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் எழுதி எழுதி வோர்ட் பைலில் சேவ் செய்து கொண்டே வந்தவர் திடீரென்று மேஜை மீது சில சொற்கள் சிதறி கிடப்பதை பார்த்து திகைத்தார். ஏதோ தோன்ற, கணினியின் நினைவகத்தின் இருப்பு நிலை பார்த்து, தான் இப்போது எழுதி வரும் சொற்கள் அத்தனை இடத்தையும் நிறைத்து விட்டதைப் புரிந்து கொண்டார். எனினும், இப்போது விட்டால் படைப்பூக்கம் இனி எப்போதும் கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து டைப் அடித்துக்கொண்டிருக்க, அறை சொற்களால் நிரம்ப ஆரம்பிக்கிறது. கால்களை சுற்றிப் படர்ந்த சொற்கள் அடுத்து உயர்ந்து உடலெங்கும் பரவுவதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டே வந்தவர், தான் இதுவரை அறிந்திராத அமைதியை உணர்ந்து, தன்னை அன்புடன் அழைக்கும் வெளிச்சத்திற்குள் முதலடி எடுத்து வைத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s