ஒரு சிறு வருத்தம்

ஒத்திசைவு ராமசாமி அவர்களை கூர்மையான சிந்தனையாளர் என்று மதிக்கிறேன். ஆனால் நண்பர் செந்தில்நாதனின் மொழிபெயர்ப்பு ஒன்றை விமரிசித்து அவர் மிகக் கடுமையாக எழுதியிருப்பது  மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே இது என் மன உளைச்சலுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. எனவே, எனக்கான சமாதானமாக இதை எழுதுகிறேன். செந்தில்நாதனை நியாயப்படுத்தவோ, ஒத்திசைவு ராமசாமி மற்றும் என். கல்யாணராமன் ஆகிய இருவரையும் எதிர்மறையாக விமரிசிக்கவோ இதைச் செய்யவில்லை. உண்மையில், கல்யாணராமனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியத்தை பிற இந்தியரும் உலகத்தவரும் அறிய உதவும் மிக முக்கியமான ஆக்கங்கள் என்று மதிக்கிறேன்.

ஆனால் சில சமயம், நாம் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதை வெளியே சொல்லாமல் இருப்பது ஒரு பெரிய தொல்லையாக இருக்கிறது. கோழைத்தனம், அறச்சீற்றம் என்ற அளவுக்கு எல்லாம் போகவில்லை, நம் ஆற்றாமையை நாலு பேர் அறிய வெளிப்படுத்தாவிட்டால் மனம் அமைதியடைவதில்லை.

1. செந்தில்நாதனின் மொழிபெயர்ப்பை எந்த அளவுக்கும் விமரிசிக்கும் உரிமை ஒத்திசைவு ராமசாமிக்கு உண்டு. அவர் செய்திருப்பதில் பெரும்பாலானவை நியாயமான விமரிசனங்களும்கூட. ஆனால், நானறிந்தவரை, செந்தில்நாதன் கணிசமான அளவு தன் நேரத்தையும் ஆற்றலையும் இதற்காகச் செலவிடுகிறார். ஏனோதானோ என்று எதையாவது எழுதி வைப்பவர் அல்ல அவர். செந்தில்நாதன் செய்திருக்கும் மொழிபெயர்ப்பின் குறைகள் இலக்கியத்தரம் சார்ந்தவை. அவரது தனிப்பட்ட, ஆளுமை சார்ந்த குறைகளாக அவற்றை அணுகியிருப்பது வருத்தமளிக்கிறது.

2. ஒத்திசைவு ராமசாமி கட்டுரையில் ஆங்காங்கே விரவியிருக்கும் திராவிட/ தமிழ்ச் சாடல்கள் துணுக்குறச் செய்கின்றன – ‘இதுதாண்டா தமிழ் இளைஞன்!’, ‘தமிழர் பண்பாடு’, ‘தமிழர்களாகிய நாம்…’ என்பன அவர் தன் கட்டுரைக்கு அளித்திருக்கும் சில tagகள். மொழி மற்றும் இனம் சார்ந்த நம் பெருமிதங்களைச் சுட்டிக்காட்டி, யதார்த்த நிலையை உணர்த்துவதுதான் அவரது நோக்கம் என்று நினைக்கிறேன். அவரை ஒரு இனவாதியாகவோ மொழி விரோதியாகவோ நான் நினைத்தால் அது அபத்தம். ஆனால் அரசியல் பேசும்போது அவர் இப்படிச் செய்தால் பரவாயில்லை, செந்தில்நாதன் போன்ற ஒரு தனிமனிதரின் மொழிபெயர்ப்பை எழுதும்போது அவரை தமிழ், திராவிடச் சூழலில் பொருத்திப் பேசுவது essentialismஐ ஆபத்தான அளவுக்கு நெருங்குகிறது.

3. செந்தில்நாதனிடம் காட்டிய கடுமையை ஒத்திசைவு ராமசாமி என். கல்யாண்ராமனிடம் காட்டத் தவறிவிட்டார் என்று கருதுகிறேன். குறிப்பாக, அவரது தமிழாக்கத்தின் கடைசி இரண்டு வரிகளை ஆங்கில மூலத்துடன் அவர் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் (பிறவற்றையும் ஒப்பிட வேண்டும், ஆனால் இதை மட்டுமாவது செய்ய வேண்டும்). எழுதியது என். கல்யாணராமனாக இல்லாமல் செந்தில்நாதனாக இருந்திருந்தால் அவர் இந்த அளவு சலுகை காட்டியிருப்பாரா? விமரிசிப்பதானால் கல்யாணராமன் மொழிபெயர்ப்பையும் வார்த்தை வார்த்தையாகப் பிரித்து விமரிசிக்கலாம். ஆனால், அதைச் செய்பவன், மந்திரங்களை ஜெபிப்பதுதான் ஆன்மீகம் என்று நினைக்கும் பார்ப்பனிய மனோபாவம்தான் கல்யாணராமன் முன்வைக்கும் நெறிமுறைகளுக்கும் அவருக்கு சாத்தியப்பட்டிருக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியில் புலப்படுகிறது என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமாக இருக்கும்? அது போன்றதுதான் செந்தில்நாதனைப் பேசும்போது திராவிட/ தமிழ்ச்சூழல் குறித்த சாடலையும் சேர்த்துக் கொள்வது.

இதற்காக ஒத்திசைவு ராமசாமி அவர்கள் வருத்தப்படலாம். கோபப்படலாம். இது நியாயமற்ற எதிர்வினை என்றும்கூட நினைக்கலாம் (அப்படி நினைப்பது சரியாகவும் இருக்கலாம்). ஆனால், செந்தில்நாதன் மொழிபெயர்ப்புக்கு என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பை எதிர்நிறுத்துவதானால், இரண்டையும் சம அளவு கடுமை அல்லது கனிவுடன் அணுகியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியிருப்பதைக் காணும்போது வருத்தமும் ஏமாற்றமும்தான் மிஞ்சுகிறது.

ஒரு நண்பருக்கு எழுதும்போது, “Those who ought to care are reckless, and that is disappointing,” என்று எழுதினேன். ஒத்திசைவு ராமசாமியின் கட்டுரை விஷயத்தில் இதைத்தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.