நெகிழ்ச்சி

ஜெகனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அவர் அவனது அலுவலகத்தில் மிக முக்கியமான நபராக இருந்தார். தினமும் அவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவித்துக் கொள்ள ஒரு நான்கு பேராவது வருவார்கள்.

அவர் ரிடையர் ஆகி ஒரு எட்டு, பத்து வருடம் இருக்கும். அவ்வப்போது, வருஷத்துக்கு இரண்டு மூன்று முறை போனில் பேசிக் கொள்வது உண்டு. இப்படியிருக்கும்போது நண்பர் நேற்று மாலை அவனுக்கு போன் செய்து, “பேசி ரொம்ப நாள் ஆச்சே, அதான் கூப்பிட்டேன், நீங்க நல்லா இருக்கீங்களா, உங்க மிஸஸ் நல்லா இருக்காங்களா, சன் நல்லா படிக்கறாரா, பாதர் உங்ககூடதான் இருக்காரா, மதர் உடம்புக்கு எப்படி இருக்காங்க,” என்றெல்லாம் கேட்டு அவனை நலம் விசாரித்தபோது அவனுக்கு அப்போதே நெகிழ்ச்சியாக இருந்தது. “உங்களைப் பாக்க நாளைக்கு வீட்டுக்கு வரட்டுமா, ஸார்?” என்று உடனே கேட்டுவிட்டான். நீங்க எப்ப வேணா வரலாம், என்று அவர் பதில் சொன்னது சந்தோஷமாக இருந்தது. “ஓகே ஸார், நாளைக்கு லஞ்ச் அவர்ல வரேன், பன்னண்டரைக்கு மேல, பன்னண்டே முக்காலுக்குள்ள வந்திடறேன்,” என்று சந்திப்பு நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டிருந்தான்.

ஆனால் இங்கே வந்தாலோ அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. எப்போதும் இப்படிதான் ஆகி விடுகிறது, என்று நினைத்துக் கொண்டான். முகர்ந்து பார்த்து விலகும் காதல் என்று ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு சமயம் எழுதியிருந்தார். எப்படி நம் எல்லாருக்கும் ஐ லவ் யூ என்ற மூன்று சொற்கள் தனித்தனியாக அர்த்தப்படாமல் ஒரே உணர்வாக இருக்கறதோ, அது போலவே மீண்டும் மீண்டும் உருட்டிப் பார்த்ததில் முகர்ந்து பார்த்து விலகும் காதலும் நான்கு வார்த்தைகளாக இல்லாமல் அவனுக்கு ஒரே உணர்வாக ஆகிவிட்டிருந்தது. அதை ஏற்க முடியாவிட்டாலும் அதில் இருந்த ஏதோ ஒரு உண்மையின் நிழலாட்டம் அவனை உறுத்திக் கொண்டிருந்தது.

நண்பரின் மனைவி ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்திருந்த ஓமப்போடியை யோசித்துக் கொண்டே கொறித்து முடித்திருப்பான், போல. தட்டில் ஒட்டிக் கொண்டிருந்த ஓரிரு துகள்களை விரல்களால் ஒற்றியெடுத்துக் கொண்டே, “ஸார், முழங்கால் வலின்னு சொன்னீங்களே, அது இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டான். இவன் சாப்பிட்டு முடித்துவிட்டதைக் கவனித்த அவரது மனைவி, ஒரு பெரிய டபரா டம்ளரில் டீ கொண்டு வந்து வைத்தார். அதிலிருந்த இஞ்சி மணம் வீசியது. கொஞ்ச நேரம் போகட்டும், உடனே எடுத்துக் குடித்தால் நன்றாக இருக்காது, என்று ஜெகன் நினைத்துக் கொண்டான்.

“இப்ப பரவாயில்லை, ஸார்,” என்றார் நண்பர். “மூணு நாள் முன்னால இசபெல்லா போய் ஒரு ஊசி போட்டுக்கிட்டேன், ட்ரிப்ஸ்லதான் போட்டாங்க. அது நல்ல ரிலீப் தரும்ன்னு சொல்றாங்க”.

“எவ்வளவு நாளைக்காம்?”, என்று கேட்டான் ஜெகன்.

“அது தெரியல ஸார். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதான்னு நிறைய பாத்தாச்சு. என்னோட கசின் சொன்னான்னு டச் தெரபிகூட போயாச்சு. அக்குபஞ்சர் பண்ற ஒருத்தர்கூட சின்னச் சின்ன ஊசியா குத்திப் பாத்தார், எதுக்கும் சரியாகல. ரொம்ப தாங்க முடியாம போயிடுச்சு, இப்ப இந்த ஊசிக்கு நல்லா கேக்குது”

“பரவாயில்லை ஸார், நமக்கு உக்காந்து எழுந்து நடமாட முடிஞ்சா சரி,” என்று சொன்னான் அவன்.

“இதைக் கேளுங்க ஸார்,” என்று இடைமறித்தார் நண்பரின் மனைவி. “இந்த ஊசி போட்டுக்கிட்டா சில பேருக்கு மூணு நாள் காச்சல் வருமாம். இவருக்கு நேத்து நல்ல காச்சல், மாத்திரை போட்டு இன்னிக்குதான் சரியாச்சு”.

“எனக்கு காலைலயே சரியாயிடுச்சு ஸார். நான் இவளை ஆபிஸ் போகச் சொன்னேன், லீவு போடுறேன்னுட்டா,” என்றார் நண்பர். “காச்சல் வந்தா போட்டுக்குங்க அப்படின்னு டாக்டர் மருந்து கொடுத்திருந்தார். அதுவும் நல்லாவே வேலை செய்யுது”.

“அதெப்படி ஸார் இவரை வீட்டில் தனியா விட்டுட்டு நான் ஆபிஸ் போக முடியும்? இவர் வெள்ளிக்கிழமை ஊசி போட்டிருக்கணும், நேத்து ஊசி போட்டுக்கிட்டிருக்கார், மதியத்துக்கு மேல நல்ல சுரம். காலைல சரியா போச்சுன்னு இவர் சொன்னா அதுக்காக எப்படி ஸார் இவரை தனியா விட்டுட்டு நான் ஆபிஸ் போக முடியும்?”, என்று கேட்டார் நண்பரின் மனைவி. “இவர்தான் வெள்ளிக்கிழமை ஊசி போட்டுக்கிட்டு இருக்கணும்”

நண்பரைப் பார்த்தான். அவர் ஜெகனைப் பார்த்துச் சிரித்தார். “ஆகா, காய்ச்சல் அதிகமாக இருந்தபோதுதானா எனக்கு போன் செய்து விசாரிச்சிருக்கார்?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான் ஜெகன். “நாம் ஒன்றும் அவருக்கு அவ்வளவு நெருக்கம் இல்லையே…”

நண்பர் அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார். நண்பரின் மனைவி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அது எதுவும் அவன் காதில் விழவில்லை. “உடன் வேலை செய்யும்போதுகூட அவ்வளவு நெருங்கிப் பழகியதில்லையே, என்னை ஏன் அவ்வளவு காய்ச்சலில் கூப்பிட்டுப் பேசினார்…” என்று தன் நினைவுகளில் ஆழ்ந்த ஜெகன், காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது அவனைக் கூப்பிட்டு நலம் விசாரிக்க வைத்த அவரது மனநிலை அந்த சமயம் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். இந்த உலகம் நம்மோடு மிக அதிகம் இருக்கிறது. அவனுக்கு அந்த நினைவே மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

Advertisements

2 thoughts on “நெகிழ்ச்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s