புனைவுத் தருணம்

– காலத்துகள் – 

அந்த மனிதர் எதிர்வீட்டின் முன் தன் பைக்கை நிறுத்துவதைப் பார்த்ததும் ‘கரெக்டா வந்துட்டான்’ என்ற எண்ணம் வழக்கம் போல் வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த என் மனதில் ஓடியது.

எதிர்வீட்டில், 40களின் மத்தியில் இருக்கும் ஒருவர், அவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்தார்கள். அவர் ஏதோ அரசு உத்தியோகத்தில் இருக்க, பிள்ளைகளில் ஒருவன் பாலிடெக்னிக்கிலும் பெண் கல்லூரியில் முதலாண்டும் படித்துக் கொண்டிருந்தாள். கணவர் வேலைக்குச் சென்ற சில மணி நேரம் கழித்து அந்த மனிதர் வருவார். அந்தப் பெண்மணி சகஜமாக அவரை வரவேற்க, அப்பெண்ணிடமும் பிள்ளைகளுடன் வெளியே அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பார். சில நேரம் உள்ளே செல்வார். பதினொன்றாம் வகுப்பு தொடங்கி நாங்கள் அந்த வீட்டில் குடியிருந்த மூன்று வருடங்களில் கணவரும் அவர் வீட்டிற்கு வரும் மற்றொருவரும் ஒரே நேரத்தில் அவ்வீட்டில் இருந்ததைப் பார்த்த நினைவில்லை.

இது அக்கம்பக்கத்தில் எந்த மாதிரியான வம்புகளை உருவாக்கி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்த பதின்ம வயதிலும் எனக்கு இது குறித்த பாலியல் கிளர்ச்சியோ கற்பனையோ ஏற்படவில்லை. மற்றொரு ஆசாமி தன் வீட்டிற்கு வந்து போவது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்ன நினைக்கிறார் என யோசிப்பேன். ஆனால் அதிகமும் அந்தப் பிள்ளைகள் குறித்து, அவர்கள் அந்த தொடர் நிகழ்வை, அது குறித்து தெருவில் உலவிய புரளிகளை எதிர்கொண்ட விதம்- கண்டிப்பாக அவை அவர்கள் காதுகளையும் சென்றடைந்திருக்கும்-, அது அவர்கள் மனநிலையை, அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான் நான் யோசித்துக்கொண்டிருப்பேன். அந்தப் பெண்மணி குறித்தோ, வீட்டிற்கு வருபவர் குறித்தோ பெரிதாக யோசித்ததில்லை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.

அந்த வீட்டுப் பையனை வழியில் சந்திக்கும்போது புன்சிரிப்பை பரிமாறிக்கொள்வது, ஓரிரு நிமிடங்கள் பேசுவது என்றளவில் எங்களுக்குள் தொடர்பிருந்தது. அதை வைத்தும், பொதுவாக அந்தப் பிள்ளைகளை கவனித்ததை வைத்தும் அவர்கள் பெரும் துயரிலோ மன அழுத்தத்திலோ இல்லையென்றே தோன்றியது. வீட்டிற்கு வருபவரிடமும் அவர்கள் சகஜமாகவே பேசுவதை பார்த்திருக்கிறேன்.

இப்படிச் சில வருடங்கள் நான் அந்தக் குடும்பத்தை கவனித்துக் கொண்டே இருந்தேன். நாங்கள் வேறு வீட்டிற்கு குடி சென்ற பிறகு ஒரு நாள் பேருந்து நிலையத்தில் அந்தக் கணவரை பார்க்க நேரிட்டது. “எப்படி இருக்கப்பா,” என்று அவர் என்னிடம் கேட்டதும்தான் அவர் என்னை கவனித்திருக்கிறார், ஞாபகம் வைத்திருக்கிறார் என்பது தெரிந்து ஆச்சர்யம் அளித்தது. புதியவர்களுடன் பேசும்போது இயல்பாக என் முகத்தில் தோன்றும் அசட்டு இளிப்புடன் அவருக்கு ஏதோ பதில் அளித்து வைத்தேன். அதுதான் எங்களுக்கிடையேயான முதலும் இறுதியான நேரடி தொடர்பு. பிறகு அவரைப் பார்த்த ஞாபகம்கூட இல்லை.

அதன் பின் நான் வேலையில் சேர்ந்து ஊரை விட்டு நீங்கி பத்து, பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது அந்தக் குடும்பம் பற்றிய நினைவு எழும். வாட்ஸாப் புண்ணியத்தில் என் பாட்ச் மாணவர்கள் பலருடன் தொடர்பு ஏற்பட்டு, என் ஊரில் சந்திப்பிற்கு ஏற்பாடானது. பல்லாண்டுகள் கழித்து ஒரு சனியன்று இருபது இருபத்து ஐந்து பேர் சந்தித்தோம். அன்றைய தினத்தை மகிழ்வோடு கழித்து விட்டு இரவு ஒரு விடுதியில் தங்கினேன். அடுத்த நாள் அவ்வூரில் நான் குடி இருந்த இடங்களை, சுற்றிய தெருக்களை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

ஊர் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தது என்று சொல்வது வழமையான ஒன்றாக, அனைத்து ஊர்களுக்கும் பொருந்தும் வகையில், இருந்தது என்றாலும் அது தரும் வியப்பை விலக்க முடியவில்லை. தெருக்களெல்லாம் சுருங்கி விட்டது போல், நெரிசல் அதிகமானது போல் தோற்றமளித்தது. நான் என் நினைவுகளில் உருவாக்கியுள்ள ஊருடன் ஒப்பிடுவதால்தானா அல்லது பத்திருபது வருடங்கள் முன்பும் குறுக்கலாகத்தான் இந்தத் தெருக்கள் இருந்தனவா என்று சந்தேகமாகவே இருந்தது.

ஒவ்வொரு இடமாய் பார்த்துக்கொண்டே, நான் குடியிருந்த தெருவுக்குச் சென்றபோது முதலில் குறிப்பிட்ட வீட்டில் அந்தப் பையன் – இப்போது நாற்பதுகளில் இருப்பவர்- வெளியே அமர்ந்திருந்தான். அருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன் (பொதுவாக இது போல் செய்யக்கூடியவன் இல்லைதான் என்றாலும், முந்தைய தினம் நண்பர்களை சந்தித்ததால் உண்டான உற்சாகம், அதன் இன்னும் வடியாத அட்ரினலின் வெள்ளம், என்னை உந்தி இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த பையன் என்னை ஒருவாறு அடையாளம் தெரிந்து கொண்டான்). பரஸ்பர குசல விசாரிப்புக்களுக்குப் பின் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, “உங்க பேமிலி ப்ரெண்ட் எப்படி இருக்கார்,” என்று யோசிக்கும் முன்பே கேட்டு விட்டேன். இல்லை நான் சொல்வது பொய். உண்மையில் நான் அவனிடம் பேச விரும்பியதே இதைக் குறித்துதான் என்பது அந்தக் கணம்தான் எனக்கே தெரிந்தது. அவனோ மிக இயல்பாக “… வரார், ரொம்ப க்ளோஸ் இல்லையா…” என்பது போல் சொன்னான்.

திரும்பி வரும்போது வெறுமையையும், எதிர்பார்த்த ஏதோ ஒன்று நடக்காதது போன்ற உணர்வையும் அடைந்திருந்தேன். உண்மையில் என் எதிர்பார்ப்பு என்ன, அவன் தன் குடும்பத்தைப் பற்றிய அனைத்து விவரத்தையும் என்னிடம் சொல்லி விடுவான் என்று நான் எண்ணியிருந்தேனா என்ன?

சில நாட்களுக்கு முன் கேட் டேலர் (Kate Taylor) என்ற எழுத்தாளர் மணவுறவை மீறிய பந்தங்களைப் பற்றிய தன் புதிய நாவலைப் பேசும் பேட்டியொன்றில், ‘It’s an occasion for fiction‘ என்று அவ்வுறவுகளைப் பற்றி சொல்லியிருந்ததை அப்போது நினைவு கூர்ந்தேன். அவன் தன் குடும்பம் குறித்த புனைவுகளை உருவாக்கிக் கொள்ள உரிமை உடையவன்தானே, என்று என்னைச் சமாதானம் செய்து கொண்டேன். அதே நேரம், இப்படி மற்றவர்கள் குடும்ப உறவுகள் குறித்து யோசிப்பது, அவர்களுக்கு இடையிலுள்ள உறவின் இயல்பு குறித்து கற்பனை செய்து அவர்கள் அந்தரங்கத்தைப் புரிந்து கொள்ள முயல்வது ஒரு கட்டத்திற்கு மேல் அநாகரீமானது இல்லையா, அதுவும் நான் அவனிடம் நடந்து கொண்ட விதம் கீழ்மையானதுதானே என்று என்னை கேட்டுக்கொண்டேன். எல்லாம் ஓரிரு நாட்களுக்குத்தான்.

இதோ இன்று இவையனைத்தையும் எழுதி விட்டேன். முடிக்கும் நேரம் “..occasion for fiction” என்று கேட் சொல்வது, உறவுச் சிக்கல்களில் சிக்கி இருப்பவர்களை மட்டும் சுட்டவில்லையோ என்ற கேள்வி எழுந்தது. துல்லியமாக இருப்பதாக எண்ணியிருக்கும் பால்ய, பதின்ம நினைவுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பிக்கும் வயதில் இருக்கும் எனக்குள் இந்தக் கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான்.

நான் எழுதியுள்ளதை மீண்டும் படித்தேன். இது நானறிந்த, எனக்குத் தெரிந்த உண்மைதான் என்று அடித்துச் சொல்ல விருப்பம்தான். ஆனால் நிஜத்தில் எனக்குத் தெரிந்தது என்ன? ஒரு ஆள் ஒரு வீட்டிற்கு தொடர்ச்சியாக கணவன் இல்லாதபோது வருகிறார். அவர் அப்பெண்ணின் அண்ணனாகக்கூட இருக்கலாம், ஏதோ சண்டையினால் இருவரும் சந்திக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். அல்லது அவரது வேலை நேரம் அது போல் இருந்திருக்கலாம், எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். மேலும், இப்போது என் நினைவில் இருப்பதைப் போல் அவர் அடிக்கடி வரவில்லையோ என்ற சந்தேகமும் வருகிறது. கணவரும், அவரும் வீட்டில் ஒரே நேரத்தில் எப்போதுமே இருந்ததில்லை என்று உறுதியாக என்னால் சொல்ல முடியுமா என்றும் கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு உறவும், அதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அதன் இயல்பு குறித்த இடைவெளிகளை இட்டு நிரப்பும் கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு, கேட் குறிப்பிடும் ‘புனைவின் ஊற்றாக’ இருக்கக்கூடும் என்ற எண்ணம் இப்போது எழுகிறது.

4 thoughts on “புனைவுத் தருணம்

  1. இதுவும் ஜெ(க)ன் வாழ்க்கையின் ஒரு தருணம் என விளங்கிக் கொள்கிறேன். ஏனோ லா.ச.ரா நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை. கிறித்துவ காலத்திலிருந்தே பிறர் வாழ்க்கையினை நாம் முழுமையாக வாழ்ந்திராத நிலையில் (எவ்வகையிலும் சாத்தியமற்றது என்று உணர்ந்தாலும்) இடைப் பட்ட தருணங்களை நாம் கோடிட்ட இடங்களை நிரப்புவது போல் நிரப்புகிறோம். நம் வாழ்க்கையையோ பிறருக்காக அல்லாமல் நமக்கு நாமே குறுக்கு கோடிட்ட இடங்களாக மாற்றிக் கொள்கிறோம். மீள்வாசிப்புக்கேற்றது இல்லை என்றாலும் தவிர்க்க இயலாமல் சில வரிகள் அமைந்துள்ளன. மீண்டும் மீண்டும் வாசிப்பேன். மகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s