சாட்சிபூதம்

கச்சிமேடு செல்லும் பாதையில் தன் குதிரையோடு ஆரோகணித்துக் கொண்டிருந்தான் ஞானம். பழுவேட்டையரின் வெட்டுண்ட தலையின் நகைப்பொலி அடங்காமல் அவன் கண் முன் தோன்றி அவனைக் கொந்தளிக்கச் செய்தது. அப்போது வந்த ஆத்திரத்தில் தன் குறுவாளை எடுத்து காற்றில் ஒரு சீவு சீவினான். குதிரை மெலிதாகக் கமறி அவனை ஆமோதித்தது.

ஹா! கபாலன் சொன்ன விஷயம்! குதிரையைத் திருப்பிக் கொண்டுபோய் மறுபடியும் ஒரு முறை பழுவேட்டையரைப் போட்டுத் தள்ள அவருக்கு பத்து தலைகள் இல்லையே என்று வருந்தினான் ஞானம். பழுவேட்டையா! கிராதகா!

அங்கே சாலையோரம் சென்று கொண்டிருந்த கழிவுநீர் வாய்க்கால் மெலிதாகச் சலச்சலத்தது. ஒன்றிரண்டு கோழிகள் புழுக்களை விரட்டிக் கொண்டு ஓடின. பூனையொன்று சல்லாபச் சோம்பல் முறித்தது. ஏதோ ஒரு பறவை குகுகுகுத்துவிட்டுப் பறந்து சென்றதில் ஒரு இலை மெல்ல மெல்ல தரையிறங்கியது. நண்பகல் உறக்கம் தழுவிக் கொள்ளவா என்று ஞானத்தைக் குசலம் விசாரித்தது. குதிரைகூட நின்று விட்டது.

அப்போது திடீரென்று ஒரு இடி இடித்து மின்னல் வெட்டில் வானம் இருண்டது. ஞானம் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். இது கனவா நனவா?

அவன் முன் ஒரு பிரம்மராட்சதன் நின்று கொண்டிருந்தான். ஞானம் அவசர அவசரமாக குதிரையின் விலாவைத் பாதத்தால் கெல்லினான். அது ரெண்டு எட்டு பின்னோக்கி நகர்ந்ததே தவிர ஞானத்துக்கு உதவும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

“அடேய் மானுடப் பதரே,” என்று அழைத்தான் பிரம்மராட்சதன். “என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டுப் போ”

“நீ உண்மை என்று நான் ஏன் நம்ப வேண்டும்?” என்று கேட்டான் ஞானம். “இது என் மனப்பிரமையாக இருக்கலாம் அல்லவா?”

“அடேய் அறிவு கெட்ட முண்டம்!” என்று வைதான் பிரம்மராட்சதன். “பழுவேட்டையரை வெட்டி அவன் குருதியால் இந்த மண்ணைக் குளிர வைத்தாயே, அப்போது எங்கே போனது இந்த புத்தி?”

“பழுவேட்டையரோடு நான் நீண்ட நெடுங்காலம் பழகியிருக்கிறேன்,” என்று விறைப்பாக பதிலளித்தான் ஞானம். “உன்னைப்போல் அல்ல அவர். அவரது உள்வெளிகள் அத்தனையும் எனக்குத் தெரியும்”.

“அப்புறம் ஏனடா அவரைப் போட்டுத் தள்ள இத்தனை நாள் ஆனது?”

என்ன இருந்தாலும் ஞானம் சட்டத்தை மதிப்பவன். அவன் தாதாவோ அடியாளோ ஆகும் ஆசைகள் எதுவும் இல்லாதவன். தர்மமே என்றாலும் அதைக் காக்க அதுவரை இருந்த சட்டப் புத்தகங்களைக் கிழித்துப் போடுவதில் ஒப்புதல் இல்லாதவன். சட்டங்களை மீறித்தான் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அவை யாரைக் காப்பாற்ற இத்தனை நாட்களாக இருக்கின்றன என்ற கேள்வியை எதிர்நோக்க அவன் எப்போதும் மறுத்து வந்தான்.

“நீ சிந்தித்துச் சீரழிந்தது போதும்!” என்று கர்ஜித்தான் பிரம்மராட்சதன். “எங்கேடா உன் சுயபுத்தி?”

பழுவேட்டையரின் வெட்டுண்ட தலை அவனைப் பார்த்து நகைத்தது.

“பிரம்மராட்சதா, அரசாங்க விவகாரங்களை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. அது மர்மங்கள் நிறைந்தது, அதன் மர்மங்கள் உன்னை மூழ்கடித்து விடும். அதில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க விருப்பு வெறுப்பின்றி முடிவெடுக்கும் தீர்க்கமான பார்வையும் போதுமான தகவல்களும் தேவை.”

“தீர்க்கமான பார்வை, ஹ!- உன் பவித்திர மாதாஜி நீ பிறக்கும்போதே உன் கண் இமைகளைத் தைத்து விட்டாளா? ஏனடா பழுவேட்டையரைக் கொன்றாய்?” என்று கேட்டான் பிரம்மராட்சதன்.

“கபாலன் மூலம் இன்றுதான் அவர் சோழமண்டலத்தின் உளவாளி என்று அறிய வந்தேன்,” என்றான் ஞானம். “நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்”.

“பாடாதே, பல்லிலேயே போடுவேன்,” என்று உறுமினான் பிரம்மராட்சதன். “இத்தனை நாள் உனக்கு அந்தச் சந்தேகம் இல்லையோ?”

“இருந்தது, ஆனால் உறுதிப்படவில்லை”

“ஓகோ, ஐயா உறுதிப்பட்டால் தலையைச் சீவி விடுவாரோ?”

“இதோ பார் எனக்காக பாண்டிய மன்னன் வீரகேசரி காத்துக் கொண்டிருக்கிறான். வழி விடு, நான் போக வேண்டும்,” என்று மீண்டும் குதிரையை ரகசியமாய் எத்தினான் ஞானம். ம்ஹூம்.

“சரி கேள்வி கேட்டுத் தொலை”

“உண்மையின் இயல்பு என்ன?”

“என்னடா இது இழவா போச்சு,” என்று தலையில் அடித்துக் கொண்டான் ஞானம். “அதுவா இப்போ முக்கியம்? மழை வேறு வரப் போகிறது, வானம் இருட்டிக் கொண்டு வருகிறது. தெருவோர உண்டிமாந்தர் கடையைக் கட்டிவிட்டால் ராப்போஜனம் நீராகாரம்தான்”

“முதலில் உன் உளறலை நிறுத்தி விட்டு நான் சொல்வதைக் கேள். அன்றைக்கு பழுவேட்டையர் ராஜவிசுவாசி என்று நம்பினாய், இன்றைக்கு அவர் துரோகி என்று நம்புகிறாய். அன்றைக்கு எந்த அறிவு அவர் தியாகசீலர் என்று சொன்னதோ அதே அறிவுதான் இன்றைக்கு அவர் ஒரு உளவாளி என்றும் சொல்கிறது. எந்த நம்பிக்கையில் நீ உன் கேடுகெட்ட அறிவை நம்பி அவர் தலையைத் துண்டமாக்கினாய்? அவர் விசுவாசி என்ற நம்பிக்கை இன்று பொய்த்தது போலவே அவர் துரோகி என்ற நம்பிக்கையும் நாளை பொய்க்கலாம் அல்லவா?”

“கபாலன் அளித்த ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி பழுவேட்டையரின் துரோகங்களை நிரூபிக்கின்றன”

“அடேய், கபாலன் என்ன இன்று வந்தவனா? மணிவர்மன் சொல்லாத உண்மையா, சிந்துபுஜங்கன் பேசாத ஆதாரமா, அசுவகோஷ் அவன் அம்மாவின் தலையில் அடித்து சத்தியம் செய்தானே- அப்போதெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தாய்?”

“கபாலன் அளித்த கூடுதல் தகவல்கள். அதைத் தவிர அவன் என் நம்பிக்கைக்கு உரியவன்”, என்றான் ஞானம். “அவன் என் ஆன்ம சகோதரன். டோப்பல்காங்கர் என்று யவனர்கள் சொல்வார்கள்”

“ஷாடன்ப்ராய்ட் என்றும் சொல்வார்கள், எல்லாம் எனக்குத் தெரியும் போடா. இந்த பிரம்மராட்சதன் இதுபோன்ற காலிச் சுட்டான்களுக்கு அஞ்ச மாட்டான்.”

“பேச்சை வளர்க்காதே, எனக்கு நேரமாகிறது, வழி விடு”

“சரி. இதைச் சொல். உன் அறிவை நம்ப முடியாது, அது இன்றைக்கு ஒன்று சொல்லும் நாளைக்கு ஒன்று சொல்லும். தகவல்களையும் நம்ப முடியாது. இன்று நீ அறிந்த உண்மையைப் பொய்ப்பிக்கும் தகவல் நாளை வரலாம். எந்த நம்பிக்கையில் நீ ஒரு உண்மையை ஏற்றுக் கொள்கிறாய்?”

“எந்த நம்பிக்கையில் உன்னை எல்லாம் ஒரு ஆளாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறேனோ, அந்த நம்பிக்கையில்தான்,” என்று சொல்லிய ஞானம் ஒரு கண்சிமிட்டலில் பிரம்மராட்சதனை மறைவித்தான்.

பழுவேட்டையரின் வெட்டுண்ட தலை நகைப்பதை அவனால் கேட்க முடிந்தது.

Advertisements

2 thoughts on “சாட்சிபூதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s