கண்ணாடிக்குள் இருந்தவன்

காலத்துகள்

(மற்றுமொரு காலத்துகள் சிறுகதை. போகிற போக்கைப் பார்த்தால் புத்தம் புதிய காப்பி காத்திரமான இலக்கியத் தளமாகி விடும் போலிருக்கிறது, சீக்கிரம் எதுவாவது செய்ய வேண்டும்)

என் பிம்பத்தை பார்த்து கத்திக் கொண்டிருந்தேன். இது பலரும் செய்வதுதான் என்றாலும், நான் கண்ணாடிக்குள்ளும் என் பிம்பம் வெளியே இருப்பதும்தான் இங்கு  விஷயமே. இதை கனவு  என்று இறுதியில் சொல்லி முடிக்கப்போவதில்லை நான்.   கண்ணாடிக்குள் நான் அடைப்பட்டிருப்பது நிஜம் தான். நான் சிக்கிக்கொண்டிருப்பது  மிக விசித்திரமான சூழலாக இப்போது தோன்றினாலும்,  நான் இங்கு வந்தடையும்  வரை அது மிக இயல்பான ஒன்றாகவே எனக்குத் தெரிந்தது.

பழங்காலப் பொருட்கள் விற்கும் கடையிலிருந்துதான் அந்த ஆளுயரக் கண்ணாடியை வாங்கி வந்தேன். கண்ணாடியின் முன் நின்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வது போல் பேசுவது, என் ஆசைகளை, அச்சங்களை பகிர்ந்து கொள்வது என என்   பிம்பத்துடன் ஒருதலையாக நான் உரையாடல் நடத்துவது சிறு வயதிலிருந்து எனக்குள்ள பழக்கம். அப்படி பேசிக்கொண்டிருந்த போது ஒரு நாள், நான் சொன்னதைக் கேட்டு என் பிம்பம் புன்சிரிப்பது போல் தோன்றியது. முதலில் நான் தான் சிரித்தேன் என்று நினைத்தாலும், பின்பு  அப்படியில்லை என்று உணர்ந்தேன். பழைய தமிழ் திரைப்படம்   ஒன்றில், ஒரே போல் இருக்கும்  இரு பாத்திரங்களில் ஒருவர் கண்ணாடி மேஜையின்  முன் நிற்க, அங்கு கண்ணாடிக்கு பதிலாக அவர் போலவே  இருக்கும் இன்னொருவர்   சூழலை சமாளிக்கும் நகைச்சுவை காட்சி நினைவுக்கு வர, அது போல ஏதோ ஒன்று நடக்கிறதா என்று விளையாட்டாகவோ, வெறும் மனப்பிரமை  என்றோ தாண்டிச் செல்ல  முடியவில்லை.  என் அசைவுகள், பேச்சுக்களுக்கான எதிர்வினைகளோடு  என் பிம்பம்  தன்னிச்சையாக செயல்படுவதை உண்மை என்று நம்பவேண்டியதாக  இருந்தது .   அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்நிகழ்வு என் உளநிலையை சந்தேகிக்க வைத்திருக்க வேண்டும்,  அல்லது கண்ணாடியை வாங்கிய இடத்திலேயே மீண்டும் விற்க வைத்திருக்க வேண்டும். நான் இவை எதையும் செய்யாததற்கு   சிறு வயதிலிருந்தே அறிவெல்லையை மீறிய  விஷயங்கள் மீதான எனது ஆர்வம் தான் காரணமாக  இருந்திருக்க வேண்டும்.

ஒன்றிரண்டு நாட்களிலேயே என் பிம்பத்தோடு  பேசிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகிப் போனது.வீட்டிலுள்ளவர்கள் பார்த்தால் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள் என்பதால்   யாருக்கும் தெரியாமல் இதைச் செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக எதைப் பேசினோம் என்று இப்போது ஞாபகம்  இல்லை,  பரவச மனநிலையில் இருந்தேன் என்று மட்டும் சொல்ல முடியும்.  ஒரு நாள் “என் உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு ஆர்வமாக இல்லையா” என்று என் பிம்பம் என்னிடம் கேட்டது.ஆர்வம் உள்ளது என நான் சொல்ல, என்னை கண்ணாடிக்குள் அழைத்துச் செல்ல முடியுமென்றும், நான் அங்கு இருக்கும் வரை, என்னுடைய இடத்தில்தான்  வெளியே இருப்பேன்    என்றும் அவன்  சொன்னான். அப்போது என் மனதில்  எழுந்த குதூகலத்தை அதே கணம் தோன்றிய இன்னொரு எண்ணம் குலைக்க,  அது என்னவென்று அறிந்து என் பிம்பம் புன்னகைத்தது. கண்ணாடியிலிருந்து  எரிச்சலுடன் விலகினேன்.  அன்றிரவு முயக்கத்தில் என் வேகத்தைப் பற்றி மனைவி குறிப்பிட்டபோது அதற்கான காரணத்தை யோசிக்க விரும்பாமல் தவிர்த்தேன்.

அடுத்த நாள்  எப்போதும் போல் என் கட்டுப்பாட்டில் இருப்பவனே கண்ணாடியில் தோன்றினான். தனியுள்ளம் கொண்ட என் பிம்பம்   வரவில்லை. என் பிம்பத்தின் உலகிலும் என் மனைவி, குடும்பம் இருந்தாக வேண்டுமே, மேலும் என் பிம்பம் அங்கிருப்பது நானிருப்பது போலத்தான் அல்லவா என்றெல்லாம் யோசிக்க  ஆரம்பித்திருந்தேன். உண்மையில் இந்த எண்ணங்கள் எல்லாம் என் ஆழ்மன ஆசைகள்  தான் என்பதையும் அவை வலுப்பெறுகின்றன என்பதையும் புணர்ச்சியில் என் வேகம் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துக் கொண்டே இருப்பதை என் மனைவி குறிப்பிடும் போது உணர்ந்து  கொண்டேன். இறுதியில்  கண்ணாடியினுள் நுழைய முடிவு செய்து அதன் முன்பு நின்ற போது அவன் மீண்டும் தோன்றினான். தன் வலக்கையை அவன் நீட்ட, நானும் அதையே செய்தேன். கண்ணாடியின் மேற்பரப்பில் அவை தொட்டுக்கொண்ட நொடியில், நாங்கள் இடம் மாறி விட்டோம்.  அப்போதே நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை தெரிந்து கொண்டேன்.

2.

நானிருந்த இடத்தை எப்படி விவரிப்பதென்று  தெரியவில்லை. மேலே பாதரச நிறத்தில் உள்ளதை வானம் என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை. திசைகளோ, வழிகளோ இல்லை. நடக்க ஆரம்பித்தால் கால் போன போக்கில் எங்கும் இடிபடாமல்   நடக்கிறேன், நடக்கின்றேனா அல்லது ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது போல் ஒரே இடத்தில் நடந்து கொண்டிருக்கிறேனா என்பதும்  புரியவில்லை.  சிறிது நேரம் கழித்து மீண்டும் கண்ணாடியின் முன் – அல்லது பின்- வந்து விடுவேன். ‘சிறிது நேரம்’ என்று நான் சொல்வது கூடத் தவறாக இருக்கலாம், காலம் என்று ஒன்று இங்கிருக்கிறதா, அப்படி இருந்தால் அது நம் உலகின் காலத்தைப் போலத் தான் இருக்குமா என்ற சந்தேகம்  எழுந்தது. புராணக் கதைகளில் தேவலோகத்திற்கு ஒரு நாள் சென்று வந்தால் ,பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள்கடந்திருப்பதை போல் இங்கும் ஏதேனும் நடக்கிறதோ என்று குழம்பிக் கிடந்தேன்.

மனைவி   கண்ணாடி முன் வரும் போது தாளவியலாத துயரமெழும். பிரயோஜனமில்லை என்று தெரிந்தும் அவளை உரக்க அழைத்துக்  கொண்டிருப்பேன், குழந்தைகளை கொண்டு வந்து காட்டுமாறு கதறுவேன். என் பிம்பமோ என் இருப்பை அறியாதவன் போல் நடந்து கொண்டான், என்ன அழைத்தாலும் கவனிப்பதில்லை. அவன் நடிக்கின்றானா அல்லது அவன் தன்னுடைய ‘பிம்பத்தை’ கண்ணாடியில் பார்க்கிறானா என்பதும் புரியாமல்  இருந்தது.

முற்றிலும் சோர்வடைந்திருந்த   நேரத்தில், என்னருகில் யாரோ இருப்பதை உணர்ந்தேன். முதியவர். என்னை  பார்த்துக்கொண்டிருந்தார்.  இவர் தான் நான் சிக்கி இருப்பதற்கு காரணம் என்று என்  உள்ளுணர்வில் தோன்றியது, தனக்குத் தெரியும் என்பது  போல்  “ஹ்ம், ஆமாம்” என சொன்னார். அவர் மேல் கோபம் எழுவதற்கு பதிலாக இங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவே நான் அப்போது விரும்பினேன். அவர் விவரித்தார்.

கிழவர் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற  அவசியமில்லை. பெற்றோர்  காலமாக,  திருமணம்     செய்து கொள்ளாமல் சுகவாசியாக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தார். வாசிப்பில் ஆர்வமுடைய அவர் மௌனியின்,“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்ற வரியில் சிக்கிக் கொண்டாராம். கண்ணாடியில் தெரியும் பிம்பமும் நிழல் போலத்தானே என்று இரண்டையும் இணைத்துப் பார்த்திருக்கிறார் மனிதர். அரைகுறை வாசிப்பு, புரிதல் இருந்தால்  இப்படித்தான் நடக்கும் என்றும் அவர் சொன்னார். மௌனியின் வரியை மந்திரம் போல் கண்ணாடி முன்னின்று ஜபம் பண்ணிக்கொண்டிருப்பாராம். அப்படி செய்யச் செய்ய தன் பிம்பம் தனியே உயிர் கொள்ள ஆரம்பித்தது என்றார். என்னைப் போலவே அவரும் கண்ணாடியினுள் நுழைந்திருக்கிறார், சில நாட்கள்  அதனுள்,சில நாட்கள் வெளியே என பொழுதைக்  கழித்திருக்கிறார். காலம் செல்லச் செல்ல, தன் பிம்பம் தன்னை விட வலுவாக மாற ஆரம்பித்ததாகவும், இறுதியில் தன்னை நிரந்தரமாக கண்ணாடியில் இருக்கச் செய்ததாகவும் கூறினார்.

பின் என்ன நடந்து என்று கேட்டேன். சில காலத்திற்குப் பின் தன் வாழ்க்கையில்  சலிப்படைந்த   கிழவரின் பிம்பம் புதிய திட்டம்  தீட்டியது. அதன் படி கண்ணாடியை விற்க வேண்டியது, தானும் கண்ணாடிக்குள் நுழைந்து கொள்ள வேண்டியது. அதை வாங்குபவரின் பிம்பமாக மாறி, அவரை உள்ளே வரவழைத்து அந்த வாழ்க்கையை அது சலிப்புறும் வரை  வாழ வேண்டியது. பின்னர் கண்ணாடியை மீண்டும் விற்று, உள்ளே இருப்பவரை விடுவிக்க வேண்டியது. மீண்டும் அதே சுழற்சி.   எப்படி ஒரு மனிதரும், அவர் பிம்பமும் ஒரே நேரத்தில் கண்ணாடியினுள் இருக்க முடியும், இதெல்லாம் நம்ப முடியவில்லை என்ற சொல்ல நினைத்தாலும், நானே கண்ணாடியில் சிக்கிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்து அமைதியாக இருந்தேன்.

எத்தனை  காலமாக இது நடந்து வருகிறது, உங்களுக்கு எப்போது மூப்பு வந்தது, இங்கு காலம் உண்டா, எத்தனை பேர் இப்படி சிக்கி மீண்டிருக்கிறார்கள், கண்ணாடியிலிருந்து மீண்டவர்கள் என்ன ஆனார்கள்,  நீங்கள் ஏன் இப்படி சிக்கி இருக்கிறீர்கள், உங்கள் பிம்பத்தை கட்டுப்படுத்த முயலவில்லையா என்று நான் கேட்ட கேள்விகளுக்கு   கிழவர் சரியாக பதில்  கூறவில்லை. அவற்றை  தவிர்க்க விரும்புகிறார் என்பது புரிந்தது.  கண்ணாடியில் முகம் பார்க்கும் அனைவருக்கும் இவ்வுலகத்தில்   நுழைவது   சாத்தியம்  இல்லை என்று மட்டும் சொன்னார்.  அப்போது தான் எனக்கு உறைத்தது. இந்த  உலகில் ‘பிம்பம்’ என்பது நம் ஆசைகளின் வெளிப்பாடு தான், அதீத ஆசைகள் கொண்டவர்களே இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.  கிழம் பலே ஆள் தான்.   தான் செய்ய நினைப்பதையெல்லாம் தன் பிம்பத்தின் மூலமாகச் செய்விக்கிறார்.

பிம்பம் என்னை விடுவிக்க காத்திருக்காமல், நானே வெளியேற  வழி உள்ளதாக எனக்குத்  தோன்றியது. ஆசையை அடக்க வேண்டும் என்று தானே அனைவரும்  சொல்கிறார்கள், அதை அடக்கி வெளியேற முடியும். அதன் பின் கண்ணாடியை உடைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல் முற்றிலும் ஆசையை அடக்குவது மிகச் சிலருக்கே வாய்க்கும்  என்றார்.  எனக்கு அது சாத்தியம் என்றே  அப்போது  நம்பினேன்.  எனவே கிழம் சொல்வதை கண்டுகொள்ளாமல், கண்ணாடியின் முன்(பின்) நின்று என் சித்தத்தை அடக்கும் முயற்சியை ஆரம்பித்தேன்.

3

முதலில் என் பிம்பம் எப்போதும் போல் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அதன் கண்களில் தோன்றிய சலனத்தை பார்த்தவுடன், நான் வென்று விடுவேன் என்பது உறுதியாகத் தெரிந்தது. அதே போல் ஒரு கட்டத்தில் பிம்பத்தை  கண்ணாடியின் முன் வரவழைத்து, உள்ளே நுழைந்ததைப் போலவே கைகள் தொட்டு வெளியேறி விட்டேன்.

நான் பயந்ததைப்  போல் அதிகம்  காலம் ஒன்றும் கடந்திருக்கவில்லை. 8 நாட்கள் தான் ஆகியிருந்தன. அந்த நாட்களில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருப்பவையாக, நான் அனுபவித்தவையாக  இருந்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. என் மனைவியைப் பார்க்கும் போது மட்டும் அடிவயிற்றில் உருவாகும் சங்கடமும் சில நாட்களில் நீங்கியது.

அன்றாட வாழ்க்கையில் இயல்பாக மீண்டும் பொருந்திக் கொண்டேன் என்றாலும்  சில  காலத்திற்குப் பின் ஆசையை முற்றிலும் வெல்வது குறித்து  கிழவர் சொன்னது உண்மையென்று உணர்ந்தேன். கிழவரையும் அவர் பிம்பத்தையும் வெளியேற்றி கண்ணாடியை முற்றிலும் எனதாக்கிக் கொள்ள வேண்டும், பல வாழ்க்கைகளை வாழ வேண்டும் என்ற ஆசை அதிகரித்துக்கொண்டே போனது. மனமெங்கும் பரவிக்கொண்டிருந்த அந்த தித்திப்பான நஞ்சு அதை முற்றிலும் ஆக்கிரமிக்கும் போது ,   எங்கே கொண்டுச் செல்லும் என்றறியாத -இந்த வாழ்கைக்கு   திரும்பவே முடியாத, குடும்பத்தை இழக்க வேண்டிய –  தவிர்க்க முடியாத  பயணத்தை நான் தொடங்குவேன் என்பதை ஆர்வத்துடனும் அச்சத்துடனும் எதிர்பார்த்துக்கொண்டே  நாட்கள் கழிகின்றன.

 

4 thoughts on “கண்ணாடிக்குள் இருந்தவன்

  1. Oru அருமையான magical realism சிறுகதை.மனிதனின் எண்ணங்களும் தீர்க்கமுடியா ஆசைகளும் எப்படி கதை யயை ooru கொண்டது….சூப்பர்.கதையின் நீட்ஸ்யிங்க மனிதனின் ஆசைகளையும் தொடர செய்வது அருமை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s