மூன்று கதைகள்

அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘சுட்டுக்குறிப்புக்கு அப்பால்‘ என்ற கதையை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. பொதுவாய் நமக்கு படிக்கக் கிடைக்கும் மொழிபெயர்ப்புக் கதைகளைப் போல் அல்லாமல் இது வாசிப்பதற்கு சௌகரியமாகவே இருக்கிறது. படிக்க வேண்டிய கதையும்கூட- வழக்கமாக, கதை என்றால் அடுத்தடுத்து ஒன்று மாற்றி ஒன்று நடந்து கொண்டே இருப்பது வழக்கம், அது போல் எதுவும் இல்லாமல் ஒன்றுமே நடக்காத கதை. ஆனால் அண்டார்க்டிக், ஆர்க்டிக் வட்டாரங்களில் பனிப்பாறை ஒன்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரைவது தெரியாமல் கரைந்து காணாமல் போவது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் சமிக்ஞை அல்லது அறிகுறியாக இருப்பது போல், கதையின் மேற்பரப்பில் இருக்கும் அமைதிக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அவலம் எப்போதோ நடந்து முடிந்து விட்டதைப் போன்ற உணர்வை அளிக்கும் கதை. முன்னரே சொன்னது போல் வாசிக்க சௌகரியமான கதை, இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த மைத்ரேயனுக்கு பாராட்டுகள்.

ஆங்கிலத்தில் இந்தக் கதையின் பெயர், “Referential”. சரி, ஆங்கிலத்தில் என்னதான் எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில், ‘lorrie moore re’ என்று அடிக்க ஆரம்பித்தவுடன் கூகுள் ‘lorrie moore referential nabakov’ என்று போட்டுக் கொடுக்கிறது (நண்பர் ஒருவர் நபகோவ் கதையைச் சுட்டியபின், ‘சரி யாராவது இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா,’ என்று தேடப்போய்தான் இதைக் கண்டுபிடித்தேன். நபகோவ் கதையின் பெயர், ‘Signs and Symbols’. 1948ல் எழுதியது. லோரி மூர் கதை, ‘Referential’ 2012ல் எழுதப்பட்டது. இரண்டுமே நியூ யார்க்கரில் வந்த கதைகள்.

ஒவ்வொரு வாரமும்நி யூ யார்க்கர் இதழில் இடம் பெறும் கதையுடன் அதை எழுதியவரின் பேட்டியும் வருவது வழக்கம் (இங்கேயும் அது போல் செய்யலாம். ஆனால் நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர்கள் ரொம்பவும் வெட்கப்படுகிறார்கள்). இந்தக் கதையை எழுதிய லோரி மூர் உடனான பேட்டியை  இப்படி ஆரம்பிக்கிறார் டேபோரா ட்ரிஸ்மன் (இவர் ஆலிஸ் மன்ரோ கதைகளை எடிட் செய்பவர் என்பது புத்தம் புதிய காப்பி தளத்தின் வாசகர்களுக்கு புதிய செய்தியாக இருக்காது):

ட்ரிஸ்மன் : ‘இந்த வாரம் உங்கள் கதை, ‘Referential’ வந்திருக்கிறது. அது, விளாடிமிர் நபகோவ்வின் ‘Signs and Symbols’ கதைக்கு ஒருவகையில் மரியாதை செலுத்துகிறது. அதிலும் ஆளுமைச் சேதத்துக்கு உட்பட்ட மகனைப் பார்க்க மனநல மருத்துவமனை செல்வதாக எழுதப்பட்டுள்ளது (அதுவும் நியூ யார்க்கரில் 1948ஆம் ஆண்டு வந்தது). இந்த இரு கதைகளுக்கும் பொதுவான பிற கூறுகள் எவை?

லோரி மூர்: ஜாம் பாட்டில்கள் இருக்கின்றன, அப்புறம் புகைப்படங்கள், சீட்டுக்கட்டுகள், இந்த உலகை விட்டுத் தப்பிச்செல்ல குழந்தை விரும்புவது, கதையின் முடிவில் தொலைபேசி ஒலிப்பது, ஆணின் உறக்கமின்மை. அது தவிர, குழந்தைக்கு தொடர்புறுத்திப் பார்ப்பதில் உள்ள பித்து மனநிலை. இது அம்மாவுக்கும் தொற்றிக் கொள்கிறது, என் கதையும் அதைத் தழுவிக் கொள்கிறது. நபகோவ் கதை குற்றம் குறையற்ற ஒன்று, நான் அதைச் சுற்றி வருவது என்பது ஒரு மரியாதை செலுத்துவது போன்றது. எந்த வகையிலும் அதற்கு வேறு உருவம் அளிப்பதோ அதற்கு அவமரியாதை செய்வதோ நோக்கமாக இருக்கவில்லை.”

சொல்வனம் இதழில் வந்த லோரி மூர் கதையை நண்பர் ஒருவருக்குச் சுட்டிக் காட்டினேன். நண்பர் நல்ல நினைவாற்றல் கொண்டவர். சொல்வனம் கதையைப் படித்ததும் இது போன்ற இன்னொரு கதையைப் படித்திருக்கிறேன், என்று சொன்னவர், இந்தக் கதையைக் கொண்டு வந்தார் – ‘அழைத்தவன்’, இளங்கோ மெய்யப்பன். ரொம்ப அறக்கூச்சல் எதுவும் போடாமல், லோரி மூர் போலவே ‘… it is intended as an homage‘ என்று எடுத்துக் கொண்டு (உண்மையில் இந்த இரு கதைகளையும் படிக்காமல், அவற்றோடு தொடர்பு இல்லாமலேயே இது எழுதப்பட்டிருக்கலாம், அந்த சாத்தியம் இருப்பதையும் மறுக்கவில்லை).

நண்பர்கள் இருவரிடம் இந்த மூன்று கதைகளையும் படித்துப் பார்த்து கருத்து சொல்லச் சொல்லி கேட்டேன்.

oOo

ஒரு நண்பர் எழுதியது இது –

நபகோவ் கதையில் காற்றில் இருந்த ஈரத்தை மட்டுமல்ல, அந்தத் தாய் தன் மகனின் பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும்போது அவள் இதயத்தை அழுத்தும் நினைவுகளின் சுமையையும் உணர முடிந்த்சாது. வரலாறு முறித்துப் போட்ட வாழ்க்கைக்குரிய இந்தத் தம்பதியர் மனம் தளராமல் போராடுவதை வாசிக்கும்போது இதயமே வெடித்துவிடும்போல்தான் இருந்தது.

இப்படிச் சொல்வது மிகவும் எளிமைப்படுத்தும் கருத்தாக இருக்கலாம் – லோரி மூரின் கதையில் ‘தசையூட்டம்’ கொஞ்சம் அதிகம்தான்- மானுட தொடுகைக்கான ஏக்கத்தை தணித்துக் கொள்ள சோதனை செய்பவர்களின் தடவல்களைத் தேர்ந்தெடுப்பது ஏனோ ஒரு ஆண் செய்யக்கூடிய காரியமாகப்பட்டது, எனக்கு மட்டும்தான் இப்போது அப்படி தோன்றுகிறது என்பதாகவும் இருக்கலாம். நபகோவ் கதை அளவுக்கு லோரி மூர் கதை கச்சிதமாக இல்லை. கதையின் கடைசியில் வரும் தொலைபேசி அழைப்பு மட்டும்தான் இரு கதைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை என்பதில்லை.

“அவன் உண்மையில் இந்த உலகில் ஒரு துளையிட்டுத் தப்பித்துச் செல்லவே விரும்பினான்,” என்று எழுதுகிறார் நபகோவ். “சிறிது காலம் அவள் மகன் தன் கவனத்தைக் குலைக்கும் வலி வேண்டும் என்று மட்டும்தான் ஆசைப்பட்டிருந்தான், ஆனால் இறுதியில் அவன் தன்னிலேயே ஒரு துளையிட்டுத் தப்ப விரும்பினான்,” என்று எழுதுகிறார் லோரி மூர்.

ஆனால் லோரி மூர் தன் கதை தனித்து நிற்குமளவு நன்றாகவே எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இளங்கோ மெய்யப்பனின் கதை லோரி மூர் கதையைவிட நபகோவ் கதைக்கு நெருக்கமானது, ஒப்பீட்டளவில் லோரி மூர் கதையில் உள்ள தனித்தன்மை இதில் இல்லை. “மகிழ்ச்சியின் தேடலா வாழ்க்கை இருக்கக்கூடாது சொர்ணம். அர்த்தத்தின் தேடலா இருக்கணும். அவனை பாத்துக்கறது அர்த்தம் உள்ளதா தெரியுது,” என்ற வாக்கியம் போலித்தனமாக ஒலிக்கிறது. ஒரு நல்ல கதையை நாசம் செய்துவிடுகிறது என்றுகூட சொல்வேன். பொதுவாகவே உரையாடல்களில் ஒரு இயல்புத்தன்மை இல்லை (குடிப்பது பற்றி பேசுவதைச் சொல்லலாம்). இது போலெல்லாம் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லவில்லை, இது ஒரு கணவன் மனைவியருக்கிடையே நடக்கும் உரையாடல் என்ற உணர்வு வரவில்லை. ஒரு வேளை மற்ற இரு கதைகளிலும் உள்ளது போன்ற ஒரு பின்னணி இந்தக் கதைக்குத் தரப்படவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம், என்னால் இந்த இருவரையும் நிஜமான மனிதர்களாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. அம்மா சீக்கிரம் அங்கே போக வேண்டும் என்று சொல்வதையெல்லாம் ரசித்துப் படித்தேன். அவள் தன் மகனை வெறுக்கவில்லை என்பது தெரிகிறது, வீட்டில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. அவ்வளவுதான்.

ஆனால் இந்த மூன்று கதைகளில் நபகோவ் கதைதான் சிறந்தது என்று நினைக்கிறேன். அது முதலில் எழுதப்பட்டது என்பதால் அல்ல, கதையமைப்பு, உரைநடை, எல்லாமே கச்சிதமாக, குற்றம் சொல்ல முடியாததாக இருக்கிறது.

இரண்டாம் நண்பர் எழுதியது இது :

லோரி மூர் கதையின் தலைப்பு, ‘Referential’ என்பது குறைந்தபட்சம் இந்த நான்கையும் சுட்டுகிறது என்று நினைக்கிறேன்-

அ. நபகோவ் கதை
ஆ. நபகோவ் கதையில் சொல்லப்படும் தொடர்புறுத்திப் பார்க்கும் பித்துநிலை
இ. லோரி மூர் கதையில் வரும் மகனின் குலைந்த மனநிலை, அவனுக்கும் தொடர்புறுத்தும் பித்து இருக்கலாம்
ஈ. நாம் அனுமானிக்கக்கூடிய சுட்டல்கள் அத்தனையும் இருந்தாலும், சுட்டல்கள் எல்லாம் எதைச் சுட்டுகின்றனவோ அதன் உண்மையான பொருள் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம் என்பதையும் லோரி மூர் கதை உணர்த்துகிறது. எனவேதான், இந்தக் கதை தனிமனித உறவுகள் எவ்வளவு வலுவற்றவையாக இருக்கின்றன என்பதையும் அவற்றின் சிக்கல்களையும் பேசும் கதையாகிறது.

எனக்கு லோரி மூர் கதை நபகோவ் கதையைவிட மேலானதாகப் படுகிறது.

என் கருத்து –

நபகோவ் கதை பற்றியோ லோரி மூர் கதை பற்றியோ நண்பர்கள் சொன்னதற்கு மாறாகவோ கூடுதலாகவோ எதுவும் சொல்வதற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இளங்கோ மெய்யப்பன் தன் கதையில் வரும் மகன் மனநிலை குன்றியவன் என்பதுபோல் எழுதியிருக்கிறார். தலைப்பும், ‘அழைத்தவன்’, என்று இருக்கிறது. இளங்கோ மெய்யப்பன் கதையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று கொடுக்கு நீக்கப்பட்டிருப்பதால் ‘அழைத்தவன்’ கதையைப் படிக்கும்போது நபகோவ் கதையில் ஓட்டை விழுந்து எஞ்சியிருப்பதைப் படிப்பது போலிருக்கிறது. ‘Signs and Symbols, ‘Referential,’ இரு கதைகளும் கதைக்கு அப்பால் உள்ள வேறொரு பெரிய விஷயத்தைப் பேசுகின்றன. அதற்கு மகனின் மனநிலை முக்கியமான ஒன்று, இந்தக் கதைகள் விவரிக்கும் உலகின் அச்சு என்றே சொல்லலாம். இந்த இரு கதைகளையும் படித்தபின், ‘வந்தவன்’ படிக்கும்போது, இளங்கோ ஓவியத்தின் சட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாரத்தை விட்டுவிட்டார் என்ற உணர்வுதான் வருகிறது. இது தமிழில் எழுதச் சரி வராது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் பொதுவாக எழுத்தில் வராத விஷயங்களைச் சொல்ல முயல்வதுதான் இது போன்ற கதைகளுக்கு முக்கியம் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இதை ஏன் செய்ய வேண்டும்?

நம் தொடுவானங்கள் இன்னும் தொலைவில் இருக்கலாம். இவ்வளவு கிட்டப்பார்வை, புதிய விஷயங்களைப் பார்க்க முடியாத ஒரு குருட்டுத்தனம் போன்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s