என்னத்தச் சொல்ல!

இணையத்தில் எழுதப்படும் சிறுகதைகள் பேசப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் எழுத்து, நம் குறுகிய நட்பு வட்டத்துக்கு அப்பால் பேசப்படுவதில்லை என்பது பிறர் நமக்களிக்கும் மதிப்பீடுதான் என்று ஏற்றுக் கொண்டே அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டியிருக்கிறது.

ஆங்கில மொழியில் ஏராளமான இணைய இதழ்கள் இருக்கின்றன, அங்கு எழுதப்படுபவை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. அது தவிர, எழுத்தாள அடையாளம் இல்லாமல் இணைய தளங்களில் எழுதி அதன்மூலம் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். ஒரு உதாரணம், Fifty Shades of Grey. ஆங்கிலம் போலவே சீன மொழியிலும் இணையத்தில் புனைவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  ஆனால் தமிழிலோ, இன்று இணையத்தில் நிலவும் இலக்கிய நிலை குறித்து பேசும் பண்பாட்டு விமரிசகன் யாராவது இருந்திருந்தால், வயிற்றெரிச்சலில் அவன் வாய் வெந்திருக்கும்.

இந்நிலையில், இணையத்தில் எழுதப்படும் சிறுகதைகள் பக்கம் கவனம் கொஞ்சம் திரும்பியிருக்கிறது. இங்கு தனி நபர் தளங்கள் தவிர்த்து இணைய இதழ்கள் என்ற வகையில் சொல்வனம், பதாகை ஆகிய இரு தளங்களிலும் பதிப்பிக்கப்பட்ட சில சிறுகதைகள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைப் பார்க்க முடிகிறது. அது குறித்து மட்டும் ஒரு வார்த்தை.

சொல்வனம் பதிப்பாசிரிய குழுவில் இணைந்து செயல்பட்டவன் என்ற வகையில் ஒன்று சொல்ல முடியும். ஏறத்தாழ எல்லா படைப்புகளும் விவாதிக்கப்பட்டுதான் முடிவு எடுக்கப்படுகிறது. நாலு வரி கவிதைக்கு வாரக்கணக்காக அடித்துக் கொண்ட அனுபவமும் உண்டு. கதைகள் விஷயத்தில் மிக நுட்பமாக பேசக்கூடியவர்கள் அங்கிருக்கிறார்கள். எத்தனை வேண்டுமானாலும் பதிப்பிப்பது, எதை அனுப்பினாலும் பதிப்பிப்பது என்ற பிசினஸ் அங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், இரண்டு அல்லது மூன்று கதைகளுக்கு மேல் பதிப்பிப்பதை இடம் நிரப்பும் வேலையாகவே அங்கு பார்க்கிறார்கள்.

பதாகையைப் பொறுத்தவரை, அங்கு வரும் கதைகளில் பெரும்பாலானவை, யார் எழுதியது என்ற தகவல் இல்லாமல் மூன்று அல்லது நான்கு பேருக்குச் செல்கின்றன. இந்த மூன்று, நான்கு பேரும் பதாகையில் புனைவு எழுதுபவர்கள், அது பற்றி பேசுபவர்கள் என்பதால் அது ஒரு peer review மாதிரி என்று சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் அளிக்கும் கருத்துகள் கதை எழுதியவருக்கு தொகுத்து அளிக்கப்படுகின்றன- கருத்து தெரிவித்தவர்கள் யார் என்ற தகவல் இல்லாமல். சில கதைகள் விஷயத்தில் மட்டும், மனதைக் காயப்படுத்தும் வகையிலோ, ஊக்கத்தைக் கெடுக்கும் வகையிலோ யாராவது ஏதாவது சொன்னால் அது எழுத்தாளருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவான தகவல்களை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் யாரும் அறிமுகமில்லாதவர்கள் அல்ல.

எடிட்டிங் என்று பார்த்தால், பதிப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் குறித்து மட்டுமே பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன. அவற்றை ஏற்பதும் நிராகரிப்பதும் எழுத்தாளர் சுதந்தரம். இவர்களில் விமரிசனத்தை தாங்கிக் கொள்ள முடியாத எழுத்தாளர்களை இதுவரை பார்த்ததில்லை என்பதுதான் உண்மை. இன்று எழுதும் இளைஞர்கள் பலரும் பரந்த மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொல்வனம், பதாகை ஆகிய இரு இணைய தளங்கள் வழி கிடைத்த தொடர்புகளில் எந்த ஒரு எழுத்தாளரும் இதுவரை இந்த தளங்கள் மீதோ இதில் தொடர்புடையவர்கள் மீதோ பதில் பெற தாமதமானதைத் தவிர வேறு எதற்கும் கோபித்துக் கொண்டதில்லை. ஓரிருவர் கடுமையான விமரிசனங்கள் செய்திருக்கிறார்கள் – அதிலும்கூட அவர்கள் தரப்பு நியாயத்தை மறுக்க முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்கிறது. எழுத்தாளர்கள் என்றாலே சண்டைக்காரர்கள், விமரிசனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், பிடிக்காத ஏதாவது சொன்னால் எதிரியாக மாறி வருஷக்கணக்காக பகைமை பாராட்டுவார்கள், அவதூறு செய்வார்கள் என்ற பிம்பம் நாம் போக வேண்டிய தூரம் மிகத் தொலைவு என்ற இன்றுள்ள சூழலில் தேவையில்லை. இது ஒரு தொற்றாகி, குரங்குப்புண் ஆறாது என்பதற்கேற்ற சமூகமாய் நம்மைச் செய்து, நாம் ஒருவருக்கொருவர் எதிர் நின்று முரணிடச் செய்ய வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

முடிந்த அளவு முத்திரையிடுதலைத் தவிர்ப்பதே நல்லது. முத்திரைகள் நம் நண்பர்களின் ஆதரவை மட்டுமல்ல, மௌனத்தையும் கோருகின்றன. இது அவர்களைப் பிக்மிக்கள் ஆக்குகிறது என்பதோடு அவர்கள் இயங்கக்கூடிய வெளியை, நம் அனைவருக்கும் பொதுவாய் இருக்கக்கூடிய அறிவுச்சூழலை, சுவர்கள் எழுப்பிக் குறுக்கவும் செய்கிறது.

யதார்த்த நிலை என்ன என்று பார்த்தால், உலக இலக்கிய பரப்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் தமிழிலக்கியம் இருக்கிறது. இந்தியாவிலும்கூட பிறமொழி எழுத்தாளர்கள் பலரும் நம் மொழியின் முதன்மை எழுத்தாளர்களை பெயரளவில்கூட அறியவில்லை. நாம் போக வேண்டிய தொலைவு வெகு தூரம். இவ்வுலகே ஒரு பெரும் பரப்பாய் நம் முன் நிற்கையில் நாம் ஒரு தேநீர்க் கோப்பைதான் உலகு என்று சிறைப்பட்டிருக்கிறோம். இங்கு வீசும் புயல்களில்தான் உடைந்து கொண்டிருக்கிறோம், நம் கப்பல்கள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன.