மறைந்தார் மகாத்மா (ராஜ்மோகன் காந்தி எழுதிய படேல் சரிதையின் சிறு பகுதி)

(இருள் சூழும் இவ்வேளையில் இந்த மனிதர்களை நினைத்துப் பார்ப்பது எதிர்காலம் குறித்த நம்பிக்கையொளி பாய்ச்சுகிறது.)

மறைந்தார் மகாத்மா
(ராஜ்மோகன் காந்தி எழுதிய படேல் சரிதையிலிருந்து ஒரு பகுதி)

அரசிலிருந்து தான் வெளியேற வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வல்லப்பாய்தான் 1947ன் இறுதி வாரத்திலும் 1948ன் முதல் இரு வாரங்களிலும் கத்தியவார் இணைப்புக்கு திட்டமிட்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் பதவி விலகிவிட்டார். மகாத்மாவின் அனுமதி மட்டுமே தேவைப்பட்டது, அது கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையும் படேலுக்கு இருந்தது. ஜவஹர்லாலும் ஆசாத்தும் அவர் விலக வேண்டுமென்று விரும்பினார்கள் என்றும் தனக்கு எதிராக மகாத்மாவின் செவிகளில் நஞ்சு பாய்ச்சப்படுகிறது என்றும் அவர் தீர்மானமாக நம்பினார். காந்தி, நேரு, ஆசாத் மற்றும் முஸ்லிம்கள் ஐவர் கொண்ட டிசம்பர் 24 சந்திப்பில் அந்த நஞ்சின் நெடி தனக்கு கிட்டிவிட்டது என்று நினைத்தார் அவர். மகாத்மாவைப் பொறுத்தவரை, எதற்காக இல்லாவிட்டாலும் தில்லி நிர்வாகத்தில் மாற்றம் நிகழ வல்லப்பாய் பதவி விலக வேண்டும் என்பதை அவரும் கடைசியில் ஒப்புக்கொண்டு விட்டதாகவே தோன்றியது. டிசம்பர் 24 சந்திப்பில் பங்கேற்றிருந்த நேரு, ஆசாத் மற்றும் பிற முஸ்லிம்கள் ரந்தாவா இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். “நீங்களே ஏன் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடாது? என்னால் இது போல் பணியாற்ற முடியாது,” என்று படேல் பதிலளித்திருந்தார். தில்லி காவல்துறையில் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினர் ஹிந்து அல்லது சீக்கிய பஞ்சாபியர்களாக இருந்தனர். இவர்களில், தம் நெருங்கிய சுற்றங்களை பாகிஸ்தானில் இழந்திருந்த அகதிகளும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். முஸ்லிம்களை புரிந்துணர்வுடன் அணுகுவது இவர்களுக்கு கடினமாக இருந்தது. புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சர்தாரும் அவர்களை வற்புறுத்தவில்லை. “தாள முடியாத அழுத்தம் அளித்து அவர்கள் விசுவாசத்தை இழக்க,” அவர் தயாராக இல்லை.

காந்தி இதை அறிந்திருந்தார். ஆனால், ஓரளவுக்கு மேல் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தில்லி முஸ்லிம்களிடம் சொல்வது அவருக்கும் கடினமாக இருந்தது. வல்லப்பாய் பதவி விலகுவது என்பது ஆபத்தானதாக இருந்தாலும், சாத்தியப்படும் தீர்வாக தோன்றியது. டிசம்பர் முடிவில், அல்லது ஜனவரி துவக்கத்தில்- பெரும்பாலும், டிசம்பர் 29 அல்லது 30ஆக இருக்கலாம்- படேலிடம், “ஒன்று நீங்கள் நிர்வாகம் செய்ய வேண்டும், அல்லது ஜவஹர்லால் செய்ய வேண்டும்,” என்று காந்தி கூறியிருந்தார். “எனக்கு உடலில் சக்தி இல்லை. என்னை விட அவர் வயதில் இளையவர். அவரே எல்லாவற்றையும் செய்யட்டும். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நான் வெளியிலிருந்து உதவி செய்கிறேன்,” என்று படேல் பதில் சொல்லியிருந்தார். அப்போது மகாத்மா முடிவு சொல்லவில்லை.

அதிகாரம் செலுத்துவதை படேல் விரும்பினார். தான் அதில் வல்லவர் என்று நினைத்தார். நேருவுக்கும், மந்திரிசபைக்கும், ஏன் இந்தியாவுக்கே தான் தேவையாக இருப்பதாகவும் நினைத்தார். ஆனால் தில்லி நிர்வாகத்தில் ஆசாத் குறுக்கிடுவதை ஏற்றுக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது உள்துறை அமைச்சகத்தின் வேலை. இதில் பிரதமரின் அதிகாரம் என்ன என்பது குறித்து நேருவின் புரிதலை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. அதைவிட விலகுவதே சரி.

காஷ்மீர் பொறுப்பை கோபாலசுவாமி ஏற்றுக் கொண்டது ஒன்று மட்டும்தான் தனது சுயமரியாதை அல்லது தகைமை மீதான தாக்குதல் என எடுத்துக் கொள்ள முடியாது என்று படேல் நினைத்தார். மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஆஜ்மீர் பிரதேச கலவரங்களைத் தொடர்ந்து, தனது முதன்மை தனிக் காரியதரசியான ஹெச்.வி.ஆர். ஐயங்காரை டிசம்பர் மூன்றாவது வாரம் ஆஜ்மீருக்கு அனுப்பியிருந்தார் ஜவஹர்லால். நேருவே போவதாக இருந்தது, ஆனால் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணம் அதற்கு தடையாக அமைந்து விட்டது. ஐயங்கார் பயணம் பற்றி படேலும் சரி உள்துறை அமைச்சக அதிகாரி எவரும் சரி கலந்தாலோசிக்கப்படவில்லை, அவர்களுக்கு தகவல் அளிக்கப்படவும் இல்லை. மாறாய், ஆஜ்மீரின் தலைமை கமிஷனர் ஷங்கர் பிரசாத்தை தொலைபேசியில் அழைத்த ஐயங்கார், “என்ன நடந்தது என்று பார்க்க,” தான் வரப்போவதாகச் சொன்னார்.

ஆஜ்மீர் வந்ததும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்தார் ஐயங்கார், சேதங்களைப் பார்வையிட்டார், பல்வேறு குழுக்களிடம் குறை கேட்டார். ஷங்கர் பிரசாத் தன் மீது, “குற்ற விசாரணை” நடத்தப்படுவதாக வல்லப்பாயிடம் முறையிட்டார் என்றால் படேல் இன்னும் கடுமையான எதிர்வினையாற்றினார். ஐயங்கார் ஆஜ்மீர் வருவதற்கு முந்தைய தினம்தான் படேல் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதன் பின்னணியில் ஐயங்காரின் வருகை, ஆஜ்மீர் அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் தான் அளித்த தரவுகள் மீது நேரு கண்காணிப்பில் நடத்தப்படும் விசாரணையாய் புரிந்து கொள்ளப்படும் என்று வல்லப்பாய் நினைத்தார். “என் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க என் கீழுள்ள அதிகாரி ஒருவரை அனுப்புகிறார்கள்,” என்ற எண்ணம் படேல் மனதில் எழுந்தது. அரசு பணியாளர்கள் அனைவரும் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்ததால், ஒவ்வொரு அதிகாரியும் தன் கட்டுப்பாட்டில் உள்ளவர் என்ற கருத்து கொண்டிருந்தார் வல்லப்பாய்.

படேலின் செயல்பாட்டையோ ஷங்கர் பிரசாத்தின் செயல்பாட்டையோ விசாரிப்பது அல்ல நேருவின் நோக்கம். தான் ஆஜ்மீர் போக முடியாத நிலையில், “பிரதமரின் வருத்தங்களை தெரிவிக்கவும் பிரதமரின் கண்களாகவும் காதுகளாகவும்,” தன் காரியதரசியை அனுப்பியிருந்தார் அவர். ஆனால் நோக்கங்கள் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. சந்தேகங்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன. பிரசாத்தின் பணியை ஆய்வு செய்ய ஐயங்கார் வந்திருப்பதாக ஆஜ்மீரில் உள்ள பலர் நினைத்தார்கள்; ஐயங்கார் ஆஜ்மீர் சென்றது தில்லியில் உள்ள சிலருக்கு சர்தாரின் மீது நேரு நம்பிக்கை இழந்து விட்டார் என்பதற்கான சான்றாக அமைந்தது. தான் ஐயங்காரை அனுப்ப நினைப்பதாக வல்லப்பாயிடம் நேரு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும், அது நிலைமையை தலைகீழாக மாற்றியிருக்கும். ஆனால் கோபாலசுவாமி விவகாரத்தில் நாம் பார்த்தது போல், டிசம்பர் 1947ல் இல்லாத ஒன்று குழுவினரிடையே ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுதான். ஐயங்கார் ஆஜ்மீருக்கு அனுப்பப்பட்டது குறித்து படேல் தன் “அதிர்ச்சி”யை நேருவிடம் வெளிப்படுத்தியபோது, அவர் அதை ஒரு கடிதமாகத்தான் எழுதினார், நேருக்கு நேராகவோ, தொலைபேசி அழைப்பிலோ அதைச் சொல்லவில்லை. இது ஒருங்கிணைப்பு சிதைந்து விட்டது என்பதற்கு இன்னொரு ஆதாரமாக இருக்கிறது. “என் தனிப் பிரதிநிதியை எந்த இடத்துக்கும் அனுப்பும் உரிமை எனக்கு இல்லையா? அப்படியிருந்தால் நான் ஒரு கைதி என்று பொருள்,” என்று நேரு பதில் கடிதம் எழுதினார். இதற்கு வல்லப்பாய் நல்லதொரு பதில் அளித்தார்: “இப்படியொரு நடவடிக்கை எடுக்கும் உரிமை பிரதமருக்கு உண்டா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாய், அவரது நடவடிக்கை அறிவுறுத்தத்தக்கதல்ல என்பதை ஒரு அமைச்சர் என்ற வகையில் நான் சுட்டிக் காட்டியதில் தவறுண்டா என்பதைப் பார்க்க வேண்டும்.”

இந்த வாத பிரதிவாதங்களில் பெரும்பாலானவை படேலும் ஜவஹர்லாலும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட கடிதங்களில் இடம் பெற்றன. அல்லது, தனித்தனியாக அவர்கள் மகாத்மாவுக்கு அளித்த குறிப்புகளில் இடம் பெற்றன. இவ்வகையில் வல்லப்பாயும் நேருவும் மீண்டுமொரு முறை காந்தியிடம் வந்தனர், ஆனால் குருவாக இல்லாமல் நடுவராக. மகாத்மாவுக்கு நேரு எழுதிய குறிப்பு ஜனவரி 6 தேதியிடப்பட்டது, வல்லப்பாயின் குறிப்பு ஜனவரி 12 தேதியிடப்பட்டது. இந்தக் கடிதங்களும் குறிப்புகளும் கோபாலசுவாமி மற்றும் ஆஜ்மீர் நிகழ்வுகளைப் பேசுகின்றன, பிரதமர் பதவியின் தலைமை அதிகார எல்லைகளை விவாதிக்கின்றன. தானுணர்ந்தவாறு பிரதமரின் பணி மதிக்கப்படவில்லை என்றால், “ஒரே மாற்று தீர்வு நான் அல்லது சர்தார் படேல் மந்திரிசபையை விட்டு விலகுவதாகத்தான் இருக்கும்,” என்று எழுதினார் நேரு. மேலும், “யாராவது ஒருவர் வெளியேற வேண்டுமென்றால், நான் விலக விரும்புகிறேன்,” என்றும் குறிப்பிட்டார் அவர். படேல்- நேரு உறவில் சந்தேகமும் கூருணர்வும் இருந்த அளவே மேன்மையும் இருந்ததை சர்தாரின் எதிர்வினை வெளிப்படுத்துகிறது:

“யாராவது விலகியாக வேண்டுமென்றால், அது நானாகத்தான் இருக்க வேண்டும். தீவிர பணியாற்றும் வயதை நான் கடந்து வெகு காலமாகி விட்டது. பிரதமர் இந்த தேசத்தின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர், ஒப்பீட்டளவில் இளம் வயதினர். எனக்கும் அவருக்குமிடையே தேர்ந்தெடுப்பதானால் அவருக்குச் சாதகமாகவே தீர்வாக வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அவர் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.”

அடுத்த நடவடிக்கையை மகாத்மா எடுத்தாக வேண்டும் என்ற நிலை இப்போது உருவானது. குறிப்புகளில் உள்ள விஷயங்கள் குறித்து அவர் யோசித்து, இந்தியாவின் இரட்டைத் தலைவர்களோடு உரையாடி, யார் விலக வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அது தானாகத்தான் இருக்கும் என்று வல்லப்பாய் திடமாக நம்பினார். ஆனால் களைத்திருந்த, கடும் தாக்குதலுக்குட்பட்ட அந்த முதிய போராளி, மாபெரும் உச்சம் தொட்டு வெளியேற தீர்மானித்தார். தான் விலகுவதற்கு முன் காந்தியின் நீண்ட கால விருப்பமொன்றை நிறைவேற்றித் தர முடிவு செய்தார். அவர் கத்தியவார் மாகாணத்தை ஒருங்கிணைப்பார். தன்னைவிட “கவர்ச்சிகரமான ஜவஹருக்கு” எப்போதும் முக்கியத்துவம் அளித்த, இப்போதும் அளிக்கப்போகும் ஒருவருக்கு, தான் பிரிந்து செல்லும் தருணத்தில் அளிக்கப்போகும் பரிசாக இருக்கும் அது. ஜனவரி 12 அன்று தான் காந்திக்கு எழுதிய குறிப்பின் நகலை நேருவுக்கு அனுப்பினார். அதன் முகப்புக் கடிதத்தில், “உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு நேரத்தில் பாபுவுடன் நீங்கள் இது குறித்து விவாதிக்கலாம். நான் ஜனவரி பதினைந்து அன்று காலை பவநகர் மற்றும் பம்பாய் செல்லவிருக்கிறேன்,” என்று எழுதினார்.

அவர் ஏற்கனவே, டிசம்பர் 23ஆம் தேதி தன் ராஜினாமா கடிதத்தை ஜவஹர்லாலுக்கு அளித்திருந்தார். அதன் பின் அவர் தன் நண்பர்களையும் இந்திய மண்ணையும் இந்திய மக்களையும் சுற்றி ஒரு நெருப்பு வளையம் எழுப்புவது போல் பெரும் நிலப்பரப்பில் பயணித்திருந்தார், பல கூட்டங்களில் உரையாற்றியிருந்தார். டிசம்பர் 28 அன்று அவர் ஜாம்சாஹேப்புடன் அவரது விமானத்தில் ஜம்மு சென்றார். அங்கு மகாராஜாவுடனும் மகாராணியுடனும் மூன்று மணி நேரம் கழித்தார். படேல் ஜம்மு செல்கிறார் என்பதோ தன்னுடன் ஜாம்சாஹேப்பை அழைத்துச் செல்கிறார் என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை, என்று காந்தியிடம் ஜவஹர்லால் குற்றம் சொல்ல இது காரணமாயிற்று. தில்லி திரும்பிய வல்லப்பாய், மெஹ்ராலியில் கூடியிருந்த பெருந்திரள் மக்களிடம், காஷ்மீரின் ஒரு அங்குலம்கூட விட்டுத் தர முடியாது, என்றார். அதே சமயம், “தில்லியிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ள படுகொலைகள் மக்களுக்கு அவமானமாக அமைந்து விட்டன,” என்றும் சொன்னார். ஜனவரி 2ஆம் தேதியன்று ஷில்லாங் கூட்டத்தில், அந்த மாகாணத்தின் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதை அஸாம் மக்கள் மறந்து மன்னித்து விட்டது குறித்து தான் மகிழ்ச்சி கொள்வதாகச் சொன்னார். ஆனால் அதே சமயம், பாகிஸ்தானுடன் போர் நிகழுமென்றால், அப்போது முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் இது உருவாக்கியுள்ளதைச் சுட்டிக் காட்டினார். அஸாம் பிரதமர் பர்தொலோய் மற்றும் அதன் ஆளுநர் அக்பர் ஹைதாரி இருவரும் அண்மைய மாதங்களில் அவருக்கு நெருக்கமானவர்களாக மாறியிருந்தனர், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

அடுத்து அவர் கல்கத்தா சென்றார். அங்கு அவர் மேற்கு வங்க ஆளுநர் சி.ஆர். உடன் சிறிது நேரம் செலவிட்டார், மற்றுமொரு பெருந்திரள் கூட்டத்தில் உரையாற்றினார். தான் விலகப் போவது குறித்த எதிர்பார்ப்பு அவரது பேச்சில் அப்போது வெளிப்பட்டது: “முதியவர்களாகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டோம்.” குறிப்பிடத்தக்க வேறு இரு விஷயங்களையும் அவர் அப்போது கூறினார். ஒன்று இடது/ வலது குறித்த விவாதம், அது வேறு எங்கு இருப்பதையும்விட கல்கத்தாவில் சூடாக இருந்தது: “நான் அரசர்கள், முதலாளிகள் மற்றும் ஜமீன்தார்களின் நண்பன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் உழைப்பாளர்கள் மற்றும் ஏழைகளின் தோழன் என்பதைச் சொல்ல வேண்டும். காந்திஜியைப் பின்பற்ற முடிவெடுத்த கணம் முதல், சொத்து சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனக்கென்று எந்தச் சொத்தும் கிடையாது… ஆனால் அரசர்களையும் முதலாளிகளையும் வசை பாடி தலைமைப் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்வது, அல்லது, தலைவன் போல் தோற்றம் கொடுப்பது என்ற பரவலான போக்குக்கு நான் பலியாக மாட்டேன்.”

அவர் பேசிய மற்ற விஷயம், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த சொத்துக்களில் பாகிஸ்தானின் பங்கைப் பிரித்துக் கொடுப்பது பற்றியது. பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி அளிக்கப்பட வேண்டும் என்று நவம்பர் மாதம் இரு தேசங்களும் உடன்பட்டிருந்தன. ஒப்பந்தம் முடிவான இரண்டு மணி நேரங்களுக்குள், படேலின் வலியுறுத்தலின் விளைவாய், காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு காண்பதையொட்டியே இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும், என்று இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது. இந்த நிபந்தனைக்கு பாகிஸ்தான் மௌனத்தையே பதிலாய் அளித்தது: காஷ்மீருக்கும் ரொக்கத் தொகைக்கும் தொடர்பு ஏற்படுத்துவதை அதனால் ஏற்க முடியாது, ஆனால் இது குறித்து விவாதிப்பது இந்தியாவின் நிலைப்பாட்டை இன்னும் கடுமையானதாக மாற்றும். கல்கத்தா உரையில் வல்லப்பாய் 55 கோடி தொகை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது தெளிவாய் புலப்பட்டது:

“சொத்து பிரிப்பதில் நாம் பாகிஸ்தானுடன் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சுடுவதற்கான தோட்டாக்கள் செய்வதற்காக ஒரு பைசா செலவு செய்வதைக்கூட நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சொத்து பிரிப்பது என்பது ஒப்புதல் ஆணை போன்றது. தீர்வாகாத அத்தனை விஷயங்களும் திருப்திகரமான முடிவுக்கு வந்த பின்னரே அந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படும்”.

அடுத்து அவர் பேசிய இடம் லக்னோ. அது பாகிஸ்தான் பிரிவினையாளர்கள் பலர் செழித்த இடமாக இருந்தது. இவர்கள் தவிர, முடிவெடுக்காத முஸ்லிம்கள் மற்றும் போர்க்குணம் கொண்ட இந்துக்களும் அங்கிருந்தனர். முதல் தரப்பினரை படேல் ஏளனம் செய்தார், இரண்டாம் தரப்பினரை நேரடியாக அணுகினார், மூன்றாம் தரப்பினரிடம் வெளிப்படையாக உரையாடினார்:

“முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் மகாத்மா காந்திதான் முதல் எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது காந்தியை தங்கள் நண்பராக நினைக்கிறார்கள், அவர் இடத்தில் என்னை வைத்து விட்டார்கள். ஏனென்றால், நான் உண்மை பேசுகிறேன். தங்களுக்கு பாகிஸ்தான் கிடைத்தால் முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் குறித்து அவர்கள் எப்போதாவது புரிந்துணர்வுடன் நினைத்துப் பார்த்தார்களா?

“இந்திய முஸ்லிம்களுக்கு என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை குறித்து நீங்கள் ஏன் வாயே திறக்கவில்லை? நீங்கள் ஏன் பாகிஸ்தானின் செயலைக் கண்டிக்கவில்லை? இப்போது உங்கள் கடமை ஒரே படகில்தான் பயணித்தாக வேண்டும், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது. வெளிப்படையாகவே உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இரட்டைக் குதிரை சவாரி செய்ய முடியாது. பாகிஸ்தான் போக விரும்புபவர்கள் அங்கே போய் நிம்மதியாக வாழலாம்.

“ஹிந்து மகாசபையினர் காங்கிரசில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… நீங்கள் மட்டுமே இந்து மதத்தின் ஒரே பாதுகாவலர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களானால், பிழை செய்கிறீர்கள். இந்து மதம் பரந்த பார்வை கொள்ள போதிக்கிறது. அவசரப்பட வேண்டாம், விவேகமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ்சைக் கேட்டுக் கொள்கிறேன். தீவிரமாக நடந்து கொள்ள வேண்டாம்.”

ஜனவரி 7 அன்று சர்தார் தில்லி திரும்பியதும் அமைச்சரவை 55 கோடிகள் குறித்த பாகிஸ்தான் அணுகுமுறையை விவாதித்தது. வல்லப்பாய், “தன் நிலைப்பாட்டை தீவிரமாக வெளிப்படுத்தினார்”. “பாகிஸ்தான் நிதிநிலை மிக மோசமாக இருக்கிறது என்று நம்பத்தகுந்த தகவல்கள்” அவருக்கு கிடைத்திருந்தன, அவருக்கு “ரொக்கத்தொகை இந்தியாவுக்கு எதிரான போர் ஆயுதங்களாக மாற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை”. “ஒரு பைசா” கூட தரப்படக்கூடாது, என்பதில் அவர் தெளிவாக இருந்தார். முகர்ஜி, கட்ஜில், மற்றும் அம்பேத்கர் அவரை ஆதரித்தனர். நேருவும்கூட, “பூரண இணக்கம்,” கொண்டிருந்தார். பணம் தர வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது. ஜனவரி 12ஆம் தேதியன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், “பிற பிரச்சினைகளிலிருந்துப் பிரித்து நிதியாதார பிரச்சினைகளை முடிவு செய்ய முடியாது, அனைத்தும் ஒன்றாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன் வல்லப்பாய் பிர்லா ஹவுஸ் சென்றார். அன்று காந்தி மௌன விரதம் இருக்கும் தினம். அதற்கு முந்தைய நாள், தில்லியின் தேசீயவாத மௌலானா ஒருவர் மகாத்மாவிடம், “என்னைப் போன்றவர்கள் பாகிஸ்தான் போக முடியாது: அப்படியொன்று உருவாகக் கூடாது என்று நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம். ஆனால் அதே சமயம், இந்துக்கள் தலைநகரில் வாழ எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். நாங்கள் வெளியேற ஒரு வழி உருவாக்கி எங்களை ஏன் இங்கிலாந்து அனுப்பக் கூடாது?” என்று கேட்டிருந்தார். தன் இயலாமை குறித்து பல நாட்கள் சிந்தனையிலிருந்த காந்திதான் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டியிருந்தது. சிந்து மாகாணம் மற்றும் மேற்கு பஞ்சாப் சென்று அங்குள்ள இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுமென்று அவர் நிலை கொள்ளாமல் தவித்தார். ஆனால் தில்லியில் முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது பாகிஸ்தான் செல்லும் தார்மீக உரிமையைப் பறித்திருந்தது. தலைநகரில் படுகொலைகள் முடிவுக்கு வந்திருந்தாலும், முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள், காவல் துறையினரும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. தேசீயவாத மௌலானாவின் இரும்பு கூரம்பு காந்தியின் இதயத்தைத் துளைத்தது, நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவெடுக்க காரணமாயிற்று. ஜனவரி ஒன்றாம் தேதி முதலே அவர் உண்ணாமை குறித்து யோசித்துக் கொண்டுதான் இருந்தார். இந்தக் கூரம்பு அத்தனை குழப்பங்களையும் போக்கிற்று. ஜனவரி 12 மதியம் தன்னைச் சந்திக்க வந்த படேலிடம் இந்த முடிவு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. உண்மையில், காந்தி அதுவரை யாரிடமும் ஒன்றும் சொல்லியிருக்கவில்லை. அன்று மாலை நிகழவிருக்கும் வழிபாட்டு உரையில்தான் அதை அறிவிப்பதாக இருந்தார்.

இரவு ஏழேகால் மணியளவில், மகாத்மாவின் மருத்துவரும் உதவியாளருமான சுஷீலா நாயர், 1, ஔரங்கஜீப் சாலை இல்லத்துக்கு விரைந்து வந்தார். மறுநாள் காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காந்தி அறிவித்து விட்டார் என்று சர்தாரிடம் தகவல் தெரிவித்தார். வல்லப்பாய், “மிகவும் மனம் குலைந்தார்”, ஆனால், தான் செய்யக்கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், என்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் காலை அவர் பிர்லா ஹவுஸ் சென்றார். அங்கு மகாத்மா, பாகிஸ்தானுக்கு 55 கோடி தராமல் இருப்பது அறமற்ற செயலாகத் தெரிகிறது என்று கூறினார். “யார் இப்படிச் சொன்னது?” என்று கேட்டார் படேல். “மவுண்ட்பேட்டன்,” என்று பதிலளித்தார் காந்தி. முந்தைய நாள் காலை, உண்ணா நோன்பு தீர்மானத்தை அறிவித்தபின் மகாத்மா மவுண்ட்பேட்டனைச் சந்திக்கச் சென்றிருந்தார். அவரிடம், 55 கோடி நிலுவையில் வைப்பது பற்றிய முடிவு குறித்து கருத்து கேட்டார். ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதற்கு மாறாய் பணம் தராமல் இருப்பது, “சிறந்த ஆட்சியாளர்களுக்கு அழகல்ல, அது அறிவீனம்,” என்ற தன் கருத்தை மவுண்ட்பேட்டன் சொன்னார். மேலும், அது இந்தியாவின், “முதல் கௌரவக்கேடான செயலாக,” இருக்கும் என்றும் கூறினார்.

இதைக் கேட்டதும் படேல் நேராக மவுண்ட்பேட்டனைச் சந்திக்கச் சென்றார். “அரசியலமைப்புச் சட்டப்படி கவர்னர்-ஜெனரலாக உள்ள நீங்கள் எப்படி என் முதுகுக்குப் பின் இப்படியொரு காரியத்தை செய்யலாம்? உண்மை உங்களுக்குத் தெரியுமா? இனி மக்கள் இந்த உண்ணா நோன்பை 55 கோடியுடன்தான் தொடர்புபடுத்தப் போகிறார்கள்”. மேலும், மவுண்ட்பேட்டனிடம் அமைச்சரவை முடிவு குறித்தும் வல்லப்பாய் நினைவுறுத்தினார்- “சொத்து குறித்து ஒப்பந்தம் செய்த இரண்டு மணி நேரத்துக்குள், அதை நடைமுறைப்படுத்துவது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதையொட்டியே இருக்கும் என்ற வகையில் இரண்டு பிரச்சினைகளையும் இணைக்கப்போவதை பாகிஸ்தானுக்கு தெளிவாகவே தெரிவித்தாயிற்று”. “கௌரவக்கேடான செயல்,” என்று தான் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மவுண்ட்பேட்டன் சொன்னார், ஆனால் பிற அடைமொழிகளை விலக்கிக் கொள்ள மறுத்து விட்டார். தன் கருத்தில் ஏற்பட்ட மாற்றத்தை காந்திக்கும் அவர் அனுப்பினார். மவுண்ட்பேட்டனைச் சந்தித்து திரும்பிய படேல் காந்தியிடம் சென்று, 55 கோடி பற்றி ஜவஹர்லாலிடம் பேசியாயிற்றா, என்று கேட்டார். “அது அமைச்சரவை தீர்மானம் தெரியுமா,” என்றும் சொன்னார் வல்லப்பாய். அப்போதுதான் ஜவஹர்லாலிடம் பேசியதாக பதிலளித்தார் மகாத்மா. “ஆமாம், அப்படியொரு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் நம் தரப்பு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது சட்டங்களின் மொழியில் நிகழ்த்தப்படும் சொல்விளையாட்டு,” என்று சொல்லிவிட்டார் நேரு.

14ஆம் தேதி காலை, படேல், நேரு, நிதியமைச்சர் சண்முகம் செட்டி, மற்றும் மத்தாய் 55 கோடி பற்றி காந்தியுடன் விவாதித்தார்கள். மகாத்மாவின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. சர்தார், அவரே அதைப் பின்னர் ஒப்புக் கொள்வார், “மிகவும் கோபமான சொற்கள்” பேசினார். எனினும் அன்று மதியம், 55 கோடி கொடுக்கப்பட்டுவிடும் என்று அமைச்சரவை முடிவு செய்தது. இந்தச் சந்திப்பில் மனமுடைந்த வல்லப்பாய், தேம்பியழுதார். “நாம் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்,” என்றார் அவர், “ஆனால் அதை இப்போது பிரதமர் சட்ட வார்த்தை விளையாட்டு என்று சொல்கிறார். இதுதான் என் கடைசி சந்திப்பு.” ஆனால், பணம் கொடுப்பது என்ற முடிவுக்கு அவரும் ஒப்புதல் அளித்தார்.

ஒன்றுபட்ட கத்தியவார் உருவாக்கும் பணி நிமித்தம் அவர் அடுத்த நாள் காலை சீக்கிரமே பவநகர் மற்றும் ராஜ்கோட் செல்வதாக இருந்தார். மகாத்மாவுக்கு அவர் அளிக்கவிருந்த பரிசு இது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். கத்தியவார் சந்திப்புகளை தள்ளி வைக்க அவர் விரும்பவில்லை. காந்தியும், சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டாம், என்று வலியுறுத்தினார். கிளம்புமுன் அவர் தன் துயரை வெளிப்படுத்தி காந்திக்கு ஒரு மடல் வரைந்தார்:

“இன்று காலை ஏழு மணிக்கு நான் கத்தியவார் செல்ல வேண்டியதாகி விட்டது. இந்த வேளையில் செல்வதென்பது எனக்கு தாள முடியாத வேதனையாக இருக்கிறது… நேற்று உங்களிடம் நான் கண்ட துயரம் என்னை ஆற்றொண்ணா நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. இது குறித்து நான் மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டியதாயிற்று. என் பணிச்சுமை மிகவும் கனமானதாக இருக்கிறது, அதன் எடை என்னை நசுக்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

“என்னைவிட ஜவஹர்லாலின் சுமை அதிகம். அவரது இதயம் துயரால் கனத்திருக்கிறது. ஒரு வேளை நான் வயது காரணமாய் சுகவீனமாகியிருக்கலாம். அவருடன் இணைந்து நின்று அவரது சுமையைப் பகிர்ந்து சகாவாய் துணை நிற்கும் நிலைக்கு தகுதியற்றவனாக இருக்கிறேன். நான் செய்வது மௌலானாவுக்கும் பிடித்தமாக இல்லை. மீண்டும் மீண்டும் நீங்கள்தான் எனக்காக போராட வேண்டியிருக்கிறது. இதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“என்னைப் போக விட்டால் அது எனக்கும் இந்த தேசத்துக்கும் நன்மை செய்வதாக இருக்கக்கூடும். நான் என் போக்கில்தான் செல்ல முடியும். நான் என் வாழ்நாள் எல்லாம் சகாக்களாய் இருந்தவர்களுக்கு ஒரு சுமையாகிப் போனால், நீங்கள் வருந்துவதற்கு ஒரு காரணமாகிறேன் என்றால், அப்போதும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது என்பது பதவி வெறி என் கண்களை மறைக்க நான் அனுமதித்து விட்டேன் என்று பொருள்படும்.

“தயவு செய்து நீங்கள் உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கேள்விக்கும் நீங்கள் சீக்கிரம் விடை தந்தாக வேண்டும். ஒரு வேளை, நீங்கள் உண்ணா நோன்பிருப்பதற்கான காரணங்கள் அகலவும் அந்த பதில் உதவலாம்.”

இந்தக் கடிதத்தை எழுதும்போது படேல் ஒரு உண்மையை அறிந்திருக்கவில்லை. வல்லப்பாய், நேரு இருவருமே பதவி விலகக் கூடாது என்று காந்தி அப்போதுதான் தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார். உண்ணா நோன்பு இருப்பது என்று முடிவெடுத்தபின் அது குறித்து யோசிக்கும்போது இந்தக் கேள்விக்கான விடை மகாத்மாவின் மனதில் தெளிவாகக் கிடைத்து விட்டது. மேலும், படேல் இந்த உண்மையையும் அப்போது அறிந்திருக்கவில்லை- ஜனவரி 12ஆம் தேதி மாலை காந்தியைச் சந்தித்த மவுண்ட்பேட்டன், வல்லப்பாய் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கடுமையாக வாதம் செய்திருந்தார்.

முதுகுக்குப் பின் பேசும் மவுண்ட்பேட்டனாலும் வாக்கு தவறிய ஜவஹர்லாலாலும் காயப்பட்ட, 55 கோடி விஷயத்தில் காந்தியின் நிலைப்பாட்டால் கசந்த, படேல், காந்தி உண்ணா நோன்பிருக்கத் தேர்ந்தெடுத்த தருணமும் “முழுக்க முழுக்க தவறானது,” என்று நினைத்தார். இந்த ஒவ்வொரு உணர்வும் ஆழமானது. ஆனால், வல்லப்பாய் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இரண்டு விஷயங்களை மட்டுமே நினைவில் கொண்டார் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்: ஒன்று, காந்தியின் வேதனை, இரண்டு, கத்தியவார் விஷயத்தின் தன் கடமை. கத்தியவார் கிளம்புவதற்கு முன் அவர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அளித்தார்:

“அமைதி நிலவும் சூழல் உருவாகவும் அவநம்பிக்கையும் கசப்புணர்வும் நீங்கவும் நாமெல்லாரும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வது மட்டுமே காந்திஜியின் மனம் மற்றும் உடல் வேதனையைத் தணிக்கக்கூடிய ஒரே விஷயமாக இருக்கும்… உலகின் தலைச்சிறந்த மனிதரின் தலைமைக்கு நாம் தகுதியற்றவர்களாக இருந்தோம் என்று சொல்லப்படக் கூடாது.”

கத்தியவார் யூனியன் உருவானதைப் பேசியபோது, ஜனவரி 15 அன்று பவநகரிலும் ராஜ்கோட்டிலும் படேல் என்ன செய்தார், என்ன சொன்னார் என்பதைப் பார்த்தோம். ஜனவரி 16ஆம் தேதிக்குப்பின் அவர் பம்பாயில், பிர்லா ஹவுஸில் தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க விரும்பியவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தனர், அடுத்தடுத்து சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் காலையிலும் மாலையிலும் அவர் தில்லிக்குப் போன் செய்து காந்தி எப்படியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டார், அதே போல், ராஜ்கோட்டுக்கு போன் செய்து அரசர்களுடன் மேனன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் அறிந்து கொண்டார். மகாத்மா குறித்து மட்டுமல்ல, நேரு விஷயத்திலும் நேரம் செல்லச் செல்ல அவர் மனம் கனிந்தது. “கடந்த சில மாதங்களில் ஜவஹர்லாலுக்கு பத்து வயது கூடி விட்டது,” என்று அவர் ஜனவரி 16ஆம் தேதி சொன்னார். “காந்திஜியின் மன வேதனை தீருமானால் 55 கோடி ரூபாய் கொடுப்பதற்கு நாம் ஏன் அற்பத்தனமாக நடந்து கொள்ள வேண்டும்?” என்றும் அன்று கேள்வியெழுப்பினார். “நாம் குறுகிய பார்வை கொண்டவர்களாய் இருக்கிறோம், அவரோ தொலைநோக்கு பார்வை கொண்டவர்.”

“முஸ்லிம்களுக்கு எதிராய் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு,” காந்திஜியின் உண்ணா நோன்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ஜனவரி 17 அன்று வல்லப்பாய் தன் கருத்தை வெளிப்படுத்தினார். உண்ணா நோன்பு அறிவித்தபின் காந்திஜி உரையாடியிருந்த முதல் நபர், மவுண்ட்பேட்டன், இந்த உண்ணா விரதம், “பண்டிட் நேருவையும் சர்தார் படேலையும் மீண்டும் ஒன்று சேர்ப்பதை நோக்கமாய் கொண்டது என்பதில் சந்தேகமில்லை,” என்று கருதினார். பாகிஸ்தானுக்கு 55 கோடி அளிக்கப்பட வேண்டும் என்று மகாத்மா கேட்டுக் கொண்டிருந்தாலும், அதை நிலுவையில் வைத்தது அவர் உண்ணா நோன்பிருக்கக் காரணமல்ல; அதுதான் காரணமென்றால், ஜனவரி 14 அன்று, அமைச்சரவை அந்த முடிவை ரத்து செய்தபோதே அவர் உண்ணா நோன்பைக் கைவிட்டிருக்க வேண்டும். தில்லியிலிருந்து கிளம்புவதற்கு முன், படேல் காந்திக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வாக்கியம் சுட்டுவது போல், உண்ணா விரதம் தன் மீது அழுத்தம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாமோ என்ற ஐயம் படேலுக்கு இருந்தது. வேறு சிலருக்கும் அந்த சந்தேகம் இருந்தது, அது உண்மைதானா என்று காந்தியிடமே கேட்டார்கள். ஜனவரி 15 அன்று அவர் பதிலளித்தார்:

“அப்படியொரு எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை. சர்தார் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கு கொண்டவர் என்று சொல்லப்படுவது குறித்து பல முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் குறை கூறியிருக்கிறார்கள். நான் எந்த விளக்கமும் அளிக்காமல் ஓரளவுக்கு என் வேதனையைத் தாங்கிக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். என் மீது நானே பூட்டிக்கொண்ட தளைகளிலிருந்து உண்ணா விரதம் என்னை விடுவித்திருக்கிறது. இன்று எங்களை எந்த நியாயமுமில்லாமல் வானளாவ உயர்த்தி சர்தாரை விமரிசிப்பவர்களிடம், பண்டிட் நேருவிடமிருந்தும் என்னிடமிருந்தும் சர்தாரைத் தனிமைப்படுத்துவது தவறு என்று என்னால் இப்போது கூற முடிந்திருக்கிறது.

“சர்தார் நேரடியாக பேசக்கூடியவர். அனைவருக்கும் தன் இதயத்தில் இடம் கொடுக்குமளவு அவருக்கு பரந்த உள்ளம் இருந்தாலும், காயப்படுத்தும் நோக்கமில்லாதபோதும், சில சமயம் அவரது பேச்சு பிறரைக் காயப்படுத்தி விடுகிறது. அவரது பின்னணியை அறிந்த எவரும் என் உண்ணா நோன்பு உள்துறை அமைச்சக கொள்கையைக் கண்டனம் செய்வது என்று சொல்ல முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் இருப்பாரென்றால், என்னையோ சர்தாரையோ அல்ல, அவர் தன்னையே கீழ்மைப்படுத்தி காயப்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்வேன்.”

காந்தியின் ஆதரவு வல்லப்பாயை பல்வகை உணர்ச்சிகளுக்கு ஆளாக்கியது. உண்ணா விரதம் தன்னை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது என்ற எண்ணம் அகல அது உதவியது. அதன் ஆணி வேர் எதுவாக இருந்தாலும், உண்ணா நோன்பு தனது சிறகுகளைத் துண்டித்து நேருவின் சிறகுகளுக்கு வலு சேர்க்கிறது என்ற உணர்வை அவரால் தவிர்க்க இயலவில்லை. மகாத்மா இம்முறையும் அவரது உதவிக்கு வருகிறார். அவரது ஒரு பகுதி இதைப் புரிந்து கொண்டது, ஆனால் மற்றொரு பகுதி, அதுவே தன்மானம் மிக்க சர்தாரின் அகம், மற்றொரு மனிதர் தன்னைப் பாதுகாப்பது குறித்து மகிழ்ச்சி கொள்ள மறுத்தது. ஒரு பொதுக் கூட்டத்தில், வல்லப்பாயின் இதயம், கசப்புணர்வும் காயப்பட்ட வலியும் இந்தியா மற்றும் காந்தி மீதான அக்கறையும் போராடிய இடம், வெளிப்பட்டது. ஜனவரி 16 அன்று, பம்பாய் மாநகராட்சி வரவேற்புரைக்கு பதிலளிக்கும்போது அவர் சொன்னார்:

“நான் பல முறை சிறை சென்றிருப்பதை மட்டும்தான் சொன்னீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையிடப்பட்டார்கள், அவர்களில் நானும் ஒருவன், அவ்வளவே… உண்மையைச் சொன்னால், நான் மத்திய அரசில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதைச் செய்த காரணத்தால் எனக்கு சிறை தண்டனை கிடைக்குமென்றால் அதனை வரவேற்பேன். ஏனென்றால், சிறைச்சாலை இன்னும் இனியது என்பதே என் அனுபவம்.

“விடுதலையடைந்த பின்னும்கூட, காந்திஜி இன்று நிஜமான இந்து- முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க உண்ணா விரதம் இருக்க வேண்டியிருக்கிறது என்றால், அது நம்மை நிரந்தரமாய் வெட்கப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

“முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சிலர் உரக்கச் சொல்வதை நாம் இப்போதுதான் கேட்டோம். இப்படிச் செய்பவர்கள் ஆத்திரத்தால் சித்தம் கலங்கி விட்டார்கள். நான் வெளிப்படையாக பேசுபவன். இந்துக்கள் முஸ்லிம்கள் இருவரிடமும்தான் கசப்பான சொற்கள் சொல்கிறேன். அதே சமயம் நான் முஸ்லிம்களின் நண்பன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

“அவர்களில் சிலர் காந்திஜியிடம் சென்று என் லக்னோ பேச்சு பற்றி குற்றம் சொல்லியிருக்கிறார்கள்… எனக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கட்டாயம் காந்திஜிக்கு ஏற்பட்டது. அதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. ஏனென்றால், என்ன சொன்னாலும், பிறர் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள வலுவற்ற மனிதனல்ல நான்.”

ஜனவரி 17 மாலை காந்தி வலுக்குன்றி, உடல் நலமும் உணர்வும் இழக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் ராஜேந்திர பிரசாத்தும் ஆசாத்தும் அதற்கு முந்தைய 24 மணி நேரங்களில் தில்லி குடிமக்களிடம் கையொப்பம் திரட்டியிருந்தார்கள். சீக்கிய, இந்து அகதிகளின் பிரதிநிதிகள், இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ், மற்றும் பிறர் இணைந்து முஸ்லிம் அல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மசூதிகள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும், முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பலவந்த ஆக்கிரமிப்பு நடக்காது, தில்லி திரும்ப விரும்பும் முஸ்லிம்கள் தலைநகர் திரும்பி முன் போல் நடமாடலாம் என்று உறுதிமொழி அளித்தனர். பழைய தில்லி முஸ்லிம்கள் காந்திஜியிடம் உண்ணா விரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆசாத், பிரசாத் மற்றும் பாகிஸ்தான் ஹை கமிஷனரும் அவ்வாறே செய்தார்கள். மதியம் 12.45 மணியளவில் காந்தி ஆசாத் கையால் ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறு அருந்தி தன் உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார். அங்கு அமைதியாக நின்றிருந்த நேருவின் கண்கள் கலங்கின; முந்தைய நாள் முதல் அவரும் உண்ணவில்லை. கடவுளுக்கு நன்றி கூறி, பம்பாயிலிருந்து படேல் ஒரு தந்திச் செய்தி அனுப்பினார்.

என்றாலும், எல்லா இதயங்களிலும் மாற்றம் நிகழவில்லை. ஜனவரி 20 அன்று அவரது பிரார்த்தனைச் சந்திப்பில் காந்தியைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலருக்கும் அதில் பங்கிருந்தது, ஆனால் சதித்திட்டம் நிறைவேறவில்லை. ஒரு எறிகுண்டு வீசப்பட்டது, சுவர் ஒன்று சேதமானது, என்றாலும் காந்திக்கோ வேறு எவருக்குமோ காயமேற்படவில்லை. குண்டு வீசிய மதன்லால் கைது செய்யப்பட்டார், ஆனால் மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். 21ஆம் தேதி காலை, வல்லப்பாய் பம்பாயிலிருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கு அவர் உடல்நலம் சீர்கெட்டிருந்த தனது நண்பர் டாக்டர் கனூங்காவைச் சந்தித்தார். பின் 23ஆம் தேதி தில்லி திரும்பினார். மதன்லால் அளித்த ஆதாரங்கள், தில்லியிலும் பம்பாயிலும் காவல்துறையினர் சேகரித்த தகவல்கள், இவற்றைக் கொண்டு மகாத்மாவைக் கொலை செய்ய ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பதையும் மதன்லால் தவிர பிற சதிகாரர்கள் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் அறிந்தார். பிர்லா ஹவுஸில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டார். சீருடை அணிந்த காவலர்கள் பத்தொன்பது பேர் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டனர், அவர்கள் தவிர சாதாரண உடுப்பணிந்த காவலர்கள் ஏழு பேர் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கைத்துப்பாக்கி இருந்தது. காந்தியின் பிரார்த்தனைச் சந்திப்பில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தன் “வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்” காவல் துறையினர் இருப்பதைக் கண்ட கோபத்தில், பிரிட்டிஷ் ராஜ்ஜிய வைஸ்ராய்கள் சிலருக்கு அளிக்கப்பட்ட மிதமிஞ்சிய பாதுகாப்பை காந்தி எதிர்த்ததை நினைவுகூர்ந்து, கன்ஷ்யாம்தாஸ் பிர்லா வல்லப்பாயிடம் முறையிட்டார். அதற்கு சர்தார் கோபத்துடன் பதிலளித்தார்:

“நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையென்ன? இதில் உங்களுக்கு ஒரு தொடர்புமில்லை. நான்தான் இதற்கு பொறுப்பேற்றாக வேண்டும். என்னைச் சுதந்திரமாய் விட்டால் பிர்லா ஹவுஸுக்கு வரும் ஒவ்வொருவரையும் சோதனை செய்ய விரும்புவேன், ஆனால் பாபு அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.”

ஜனவரி 23 அன்று மதியம் மகாத்மாவைச் சந்தித்த படேல், காந்தியைப் பார்க்க வரும் ஒவ்வொருவரையும், பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும், சோதனை செய்ய அனுமதி கேட்டார். ஆனால் மகாத்மா மறுத்து விட்டார். நேரு, படேல் இருவரில் யாரும் பதவி விலக வேண்டியதில்லை என்று தான் நினைப்பதாக அவர் வல்லப்பாயிடம் அப்போது கூறினார். இந்த விஷயத்தில் மவுண்ட்பேட்டன் தீர்மானமாக இருப்பதாகச் சொன்ன காந்தி, தானும் அவ்வாறே நினைப்பதாகவும் கூறினார். இது படேலின் இதயத்தில் கனத்த சுமையை இறக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் விவாதத்துக்குரிய விஷயங்கள் பற்றி பேச வேண்டியது முக்கியம் என்றார் அவர்: வெளிப்படையாக பேசித் தீர்க்க வேண்டிய சம்பவங்கள் நிறைய நடந்து விட்டன. 25 ஆம் தேதியன்று வல்லப்பாய் ஆக்ரா மற்றும் பாட்னா செல்லவிருப்பதாலும், 27ஆம் தேதிக்கு பின்னரே திரும்பப் போவதாலும், ஜனவரி 30 அன்று நிகழவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக இருவரும் சந்திக்க ஒப்புக் கொண்டனர். 25ஆம் தேதியன்று, ஆக்ரா செல்வதற்கு முன், சர்தார் தன் எண்ணங்களை கன்ஷ்யாம்தாஸிடம் பகிர்ந்து கொண்டார். அவர் காந்தியின் கண்ணீரை நினைவு கூர்ந்தார், தன் நாவில் எழுந்த கோபமான சொற்களை ஒப்புக் கொண்டார், அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அழுதது குறித்தும் சொன்னார். அருகில் அமர்ந்திருந்த மணிபென் நடந்த சம்பவங்களை அப்போதுதான் முதல்முறை அறிந்தார். ஆக்ராவில் படேல் மீண்டுமொரு முறை தாஜ் மகாலைக் கண்டார். அதன் வசீகரத்துக்கு மீண்டும் ஆட்பட்டார். தான் பதவி விலகப் போவதில்லை என்று கூறி உத்தர பிரதேச பிரதமர் பந்தின் கவலையை நீக்கினார். பாட்னாவில் பேசும்போது, ஜமீன்தார்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு மறுக்கப்பட வேண்டும் என்று கூறிய காங்கிரஸ்காரர்களைக் கண்டித்தார்:

“”முழு நம்பிக்கையின் பேரில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதென்பது” திருட்டை விட மோசமான செயல்.”

வெள்ளிக்கிழமை, ஜனவரி 30 அன்று, மாலை நான்கு மணிக்கு மகாத்மாவும் வல்லப்பாயும் பிர்லா ஹவுஸில் சந்தித்து வெளிப்படையாக பேசத் துவங்கினார்கள். அவர்களுக்கு அருகில், சற்று தள்ளி, மணிபென் அமர்ந்திருந்தார். முதலில் அவரது தந்தை பேசினார். காந்தி நூல் நூற்றுக் கொண்டே, படேல் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான்கரை மணியளவில் பால், காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு சுளைகள் கொண்டு வந்தார் மகாத்மாவின் பேத்தி மனு. அவையே காந்தியின் மாலையுணவு. அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வல்லப்பாய் தன் பேச்சைத் தொடர்ந்தார். 23ஆம் தேதியன்று தான் சொன்னதையே காந்தி மீண்டும் சொன்னார். அமைச்சரவையில் படேல் இடம் பெறுவது அவசியம், அதே போல் நேருவும் அவசியம். இதை ஜவஹர்லாலிடம் ஏற்கனவே சொல்லி விட்டதாய்க் கூறினார் காந்தி. வல்லப்பாய் மற்றும் நேருவிடையே பிளவு ஏற்படுவது பேரழிவு விளைவிக்கும். அன்று மாலை தான் வழங்கப்போகும் உரையில் இந்த விஷயத்தை வலியுறுத்தப் போவதாகச் சொன்னார். “காந்தி, படேல், நேரு, மூவரும் நாளை சந்திப்பது,” என்று தீர்மானிக்கப்பட்டது. கத்தியவார் விவகாரங்களும் பேசப்பட்டன. ஐந்து மணிக்கு, காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட நேரத்தில், அபா காந்தி, மகாத்மாவின் மற்றுமொரு உதவியாளர், அறைக்குள் வந்து கைக்கடிகாரத்தைக் காட்டி காந்தியின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் காந்தியும் படேலும் அவரைக் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப்பின் மணிபென், “மணி ஐந்து பத்தாகி விட்டது,” என்றார். அதைக் கேட்டதும் இருவரும் எழுந்தார்கள். வல்லப்பாய் வீடு திரும்பினார். காந்தி தான் தங்கியிருந்த வீட்டுத் தோட்டத்தின் புல் தரையில் நிகழவிருந்த பிரார்த்தனையை நோக்கி நடந்தார்.

மூன்று நிமிடங்களில் சர்தாரும் மணிபென்னும் 1, ஔரங்கஜீப் சாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீட்டுக்குள் நுழையும்போது, பார்வையற்ற ஒருவரை அழைத்து வந்திருந்த ஒரு பெண் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்தார். மணிபென் அவருடன் பேசுவதற்காக நின்றார். வல்லப்பாய் உள்ளே போனார், ஒரு செய்தித்தாளை எடுத்து, வாசிக்க அமர்ந்தார். மணிபென் வெளியே இருந்தார். அந்தப் பெண்ணிடம், நிவாரணப் பணித்துறை அமைச்சர் நியோகி அல்லது, சுகாதாரத்துறை அமைச்சர் அம்ரித் கௌரைச் சந்திக்கச் சொல்லிக் கொண்டிருந்தபோது டயர்கள் கிரீச்சிட்டு நிற்கும் சத்தம் கேட்டது. காந்தியின் சகாக்களில் ஒருவரான பிரிஜ் கிஷோர் உள்ளே வந்திருந்த காரிலிருந்து உரக்கச் சத்தமிட்டார்: “சர்தார் எங்கே? பாபுவை சுட்டு விட்டார்கள். பாபு இறந்து விட்டார்.” மணிபென் உள்ளே போய் தன் தந்தையிடம், “நாம் பிர்லா ஹவுஸ் போக வேண்டும். பிரிஜ் கிருஷ்ணா வந்திருக்கிறார். பாபுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று அவர் சொல்கிறார்,” என்றார். பிரிஜ் கிருஷ்ணா வந்திருந்த காரில் வல்லப்பாய் ஏறினார். மணிபென்னும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அனைவரும் பிர்லா ஹவுஸ் சென்றார்கள்.

அவர்கள் அங்கு வந்து சேர்த்தபோது, தரைவிரிப்பில் கிடந்த காந்தியின் உடலைச் சுற்றி கீதை சுலோக பாராயணம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மாவின் முகம், “அமைதியாகவும் சாந்தமாகவும்”, படேலை மன்னிப்பது போலவும் இருந்தது. மகாத்மாவின் மணிக்கட்டினை கையிலேந்திய படேல் ஒரு மெல்லிய நாடி துடித்தடங்குவது போல் உணர்ந்தார். மருத்துவர் ஒருவர் அந்தப் பிரமையைப் போக்கினார். அதன் பின் படேல் காந்தியின் காலடிக்குச் சென்று அவரது பாதங்களுக்கு அருகில் அமர்ந்தார். மணிபென் அவர் பின் நின்று கொண்டார். வல்லப்பாய் வந்த இரு நிமிடங்களில் ஜவஹர்லால் வந்தார், அவர் மண்டியிட்டு, தன் முகத்தை காந்தியின் முகத்தருகே வைத்து ஒரு குழந்தையாய் தேம்பியழுதார். அதன் பின் அவர் துக்கம் நிறைந்த தன் முகத்தை சர்தாரின் மடியில் புதைத்துக் கொண்டார். தேவதாஸ் உள்ளே நுழைந்து தன் தந்தையின் செவிகளில், “பாபுஜி, பேசுங்கள்,” என்று இறைஞ்சினார். மவுண்ட்பேட்டன், ராணுவ தளபதி ஜெனரல் ராய் புச்சர், வல்லப்பாயின் அமைச்சரவை சகாக்கள், தில்லிவாசிகள் என்று ஒவ்வொருவராய் வர அறை நிறைந்தது, பிர்லா ஹவுஸுக்கு வெளியே இருந்த இடங்களும் நிறைந்தன. “எஃகு உறுதியுடன் மனம் கலங்காது அனைவருக்கும் ஆறுதல்” அளித்தார் படேல். புச்சர் மற்றும் காவல் அதிகாரிகளிடம், “இந்தியா முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், காந்தியைக் கொன்றது ஒரு இந்து என்பதைச் சொல்ல தயங்க வேண்டாம்,” என்று உத்தரவிட்டார் அவர். நேருவுக்கும் படேலுக்கும் இடையில் பரிபூரண இணக்கத்தை உருவாக்குவதே என் உள்ளார்ந்த விருப்பம், என்று காந்தி தன்னிடம் கூறியதை மவுண்ட்பேட்டன் நினைவு கூர்ந்தார். அதைக் கேட்டவுடன், வல்லப்பாயும் நேருவும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

அன்றிரவு படேலும் ஜவஹர்லாலும் தேசத்தவருக்கு உரையாற்றினர், பின்னவர் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசினார், சர்தார் ஹிந்தியில் மட்டும் பேசினார். சர்தார் கூறியது:

“இப்போதுதான் என் இனிய சகோதரர் பண்டிட் ஜவஹர்லால் நேரு உங்களிடம் பேசியிருக்கிறார். எனது இதயம் வலிக்கிறது. நான் உங்களிடம் என்ன சொல்லட்டும்? என் நா எழ மறுக்கிறது. இது இந்தியாவுக்கு ஒரு துயர தினம், வெட்க தினம், வேதனை தினம். இன்று மாலை நான்கு மணி அளவில் நான் காந்தியைச் சந்திக்கச் சென்றேன், அவருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தேன்…

“நான் அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன், ஹிந்து இளைஞர் ஒருவர் காந்தியை பிரார்த்தனை மைதானத்தில் மூன்று முறை சுட்டுக் கொன்று விட்டார் என்ற பயங்கரச் செய்தியை ஒருவர் என்னிடம் சொன்னார். உடனே நான் பிர்லா ஹவுஸுக்கு விரைந்து சென்றேன், காந்தியின் அருகில் இருந்தேன். அவரது கண்கள் மூடியிருந்தன, ஆனால் அவரது முகம் எப்போதும் போல் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தது. உயிர்ப்பை இழந்து கொண்டிருந்த அவரது முகத்தில் கருணை மற்றும் மன்னிப்பின் ரேகையை என்னால் காண முடிந்தது…

“நண்பர்களே, இது கோபப்படுவதற்கான தருணமல்ல, நாம் அனைவரும் நேர்மையுடன் நம் இதய சுத்தியை கேள்விக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இப்போது ஆத்திரப்பட்டால் அதன் நியாயம் புரிந்து கொள்ளப்படக்கூடியதே, ஆனால் அது வெளிப்பட அனுமதித்தோமென்றால், அன்புக்குரிய நம் ஆசிரியரின் போதனைகளை அவர் இறந்தவுடன் வெகு விரைவில் மறந்து விட்டோம் என்றே பொருள்படும். இங்கு நான் இதையும் சொல்ல வேண்டும், அவரது வாழ்நாளில்கூட நாம் நம் ஆசிரியரை அரை மனதாய்த்தான் பின்தொடர்ந்திருக்கிறோம்.

“அண்மைக் காலத்தில் இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள சுமை மிகக் கடுமையானது. இந்த மகத்தான மனிதரின் ஆதரவு நமக்கு இருந்திருக்கவில்லை என்றால், அதன் கனம் தாளாது நம் முதுகு உடைந்திருக்கும். இப்போது அந்த ஆதரவை நாம் இழந்துவிட்டோம், ஆனால் காந்திஜி நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்… நாளை மாலை நான்கு மணிக்கு அவரது உடல் சாம்பலாகும், ஆனால் அழிவற்ற அவரது போதனைகள் எப்போதும் நம்மில் நீங்காது உறையும்.

“அவரது உன்னத வாழ்நாள் லட்சியத்தை இதன் மூலம் அழித்துவிடலாம் என்று நினைத்திருந்தால், அவரைக் கொன்ற அந்த பைத்தியக்கார இளைஞன் தவறு செய்து விட்டான். ஒரு வேளை, காந்திஜியின் லட்சியம் அவரது மரணத்தின் மூலம் நிறைவேறி, செழிப்படைய வேண்டும் என்பது தெய்வச் சித்தமாய் இருக்கலாம்.”

வானொலி உரைகளுக்குப் பின் மறு நாளைய இறுதி ஊர்வலம் குறித்து வல்லப்பாயும் நேருவும் திட்டமிட்டார்கள். இரவு பதினொன்றரை மணிக்கு வீடு திரும்பிய படேல் பம்பாய் பிரதமர் கேருக்கு போன் செய்தார். மகாத்மாவைக் கொன்ற நாதுராம் கோட்சே கேரின் மாகாணத்தைச் சேர்ந்தவர். நள்ளிரவு முதல் காலை ஐந்து மணி வரை படேல் படுத்திருந்தார், ஆனால் அவரால் தூங்க முடியவில்லை. அவரை விழித்திருக்கச் செய்த எண்ணங்கள் எவை என்பதை நாம் அறியோம். ஆனால் அவை கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், முப்பதாண்டு காலமாய் மகாத்மாவுடன் அவருக்கு இருந்த உறவு, கொந்தளிப்பு மிக்க கடந்த சில வாரங்களால், அவற்றின் வலியால், அழித்து விட முடியாத, மகாத்மா மீது அவர் கொண்டிருந்த அன்பு, அண்மைய நாட்களின் ஆசுவாசம், அந்த இறுதி பிரார்த்தனை மணிக்கு முன் தான் அடைந்த ஆனந்தம், நிச்சயமற்ற விடியல் என்று பலவற்றை யோசித்துக் கொண்டிருந்திருக்கலாம். இருவரும் இணைந்து சாக வேண்டும் என்று காந்தியுடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தம் நினைவுக்கு வந்ததா? தன் மீது பகைமையை தருவித்துக் கொண்டதற்காக மகாத்மா மீது குறைபட்டுக் கொண்டாரா, அந்தப் பகைமையைத் தணிக்க முடியவில்லையே என்று தன்னை நொந்து கொண்டாரா?

மறுநாள், மகாத்மாவை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்ற வாகனத்தில், இறுக்கமானவராய், களைப்பு மிகுந்தவராய், படேல் அமர்ந்திருந்தார். ராஜ்காட்டில் எரியூட்டப்பட்ட கணத்தில் மனு காந்தி, “தன் முகத்தை சர்தாரின் மடியில் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்க அழுதார்.” அவர் நிமிர்ந்து பார்த்தபோது, சர்தார் திடீரென்று முதுமை கூடிய தோற்றம் கொண்டிருக்கக் கண்டார்.

“மகாத்மா காந்தி உயிரை தன் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்புத் துறை காப்பாற்றத் தவறியதற்கு பொறுப்பேற்று சர்தார் படேல் பதவி விலக வேண்டும். காந்திக்கு எதிராய் அதிருப்தி அதிகரித்து வருவது குறித்து போதுமான எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தன”. பிப்ரவரி 3 அன்று ஸ்டேட்ஸ்மேனில் பதிப்பிக்கப்பட்ட கடிதம் இவ்வாறு இருந்தது. அன்று, “மதவாதக் காழ்ப்பு அமைப்புகள் மற்றும் குறுங்குழுக்களைக் கட்டுப்படுத்தும் உறுதியும் ஆற்றலும்,” கொண்ட புதிய உள்துறை அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்று சோஷலிஸ்டுகளும் கோரிக்கை எழுப்பினர். “30 வயது இளைஞரும் சுமக்கத் திணறும் அமைச்சகங்களின் பொறுப்பு 74 வயது மனிதருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன,” என்றார் ஜெயபிரகாஷ். தனி உரையாடல்களில் மிருதுளாவும் அதையே சொன்னார். இதனால் காயப்பட்ட வல்லப்பாய் ராஜினாமா கடிதம் எழுதினார். தான் ஏற்கனவே ஒரு ராஜினாமா கடிதம் அளித்திருப்பதை ஜவஹர்லாலுக்கு நினைவு கூர்ந்த படேல், இப்படி எழுதினார்:

“ஸ்டேஸ்மேன் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதியவர் அரசியல் சட்ட அடிப்படையில் தன் நிலைப்பாட்டை நிறுவுகிறார். அவர் கூறுவது சரியென்றுதான் நானும் நினைக்கிறேன். நான் ராஜினாமா செய்வதற்கு இது ஒரு கூடுதல் காரணம்… மிக முக்கியமான இந்தக் கட்டத்தில் உங்களைச் சங்கடப்படுத்தும் எதையும் நான் செய்ய விரும்பவில்லை. ஆனால் ஒரு பொது கோரிக்கை, அல்லது நியாயமான கேள்வி எழுந்து விட்ட நிலையில், நான் ராஜினாமா செய்ய நீங்கள் உதவ வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.”

விழுமியங்களைக் கடைபிடிக்கும் அக்கறை மட்டுமல்ல, தன் நிலை குறித்த முன்முடிவுகளும் தனக்கு இருக்கக்கூடாது என்ற நோக்கமும் இந்தக் கடிதத்தின் பின்னணியில் இருந்தன. தான் அமைச்சரவையில் தொடர வேண்டும் என்ற விருப்பம் நேருவுக்கு இருந்ததா என்பது படேலுக்கு தெரியாது. மகாத்மாவின் உடலருகே இருவரும் தழுவிக் கொண்டார்கள், உண்மைதான். தேசத்தை நோக்கி இருவரும் உரையாற்றவும் செய்தார்கள், ஆனால் இதுவரை நேரடியான உரையாடல் நிகழவில்லை. மேலும், மிருதுளா நேருவுக்கு நெருக்கமானவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயபிரகாஷும்கூட அப்போது ஜவஹர்லாலுடன் அவரது இல்லத்தில்தான் தங்கியிருந்தார். ஜவஹர்லால் ஜெபியின் பார்வைக்கு இணக்கமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம் என்று நினைத்தார் வல்லப்பாய். எனினும் அவரது கடிதம் அனுப்பப்படவில்லை. அதை அனுப்பச் சொல்லி மணிபென் வித்யாஷங்கரிடம் கொடுத்தார், அவர் சர்தாரிடம் பேசி அனுப்பாதிருக்கச் செய்தார். விதியின் செயலுக்கு உள்துறை அமைச்சகம் பொறுப்பாக முடியாது என்று அவர் வாதிட்டார். இந்தக் கடிதம் சர்தாரின் எதிரிகள் கரங்களில் ஆயுதமாக மாறி, தேசத்துக்கு தேவையான இணை தலைமையை இல்லாது செய்யும். தனது அந்தரங்க காரியதரசியின் வாதங்களை படேல் ஒப்புக் கொண்டார்.

ஆனால் படேலும் ஷங்கரும் நேருவைத் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள். சர்தார் விலகுவதில் அவருக்கு உடன்பாடில்லை, அன்றே அவர் அதையும் மேலும் சிலவும் கூறினார்.

3.2.48 அன்று நேரு படேலுக்கு எழுதியது: “பாபு மறைந்துவிட்ட நிலையில் எல்லாம் மாறிவிட்டது. நாம் வேறொரு, மேலும் கடினமான உலகை எதிர்கொள்கிறோம்… நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி நம்மிருவரைப் பற்றி தொடர்ந்து வதந்திகளும் ரகசியச் சங்கதிகளும் பேசப்படுவது என்னை மிகவும் வருந்தச் செய்கிறது… இந்தக் கெடுநிலைக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும்.

“நாமிருவரும் சகாக்களாய் ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகத் துவங்கி கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது. பல புயல்களையும் பேரிடர்களையும் இணைந்தே எதிர்கொண்டிருக்கிறோம். இக்காலகட்டத்தில் உங்கள் மீது நான் கொண்ட நேசமும் மதிப்பும் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்வது முழு உண்மை. இனி என்ன நடந்தாலும் இது குறையாது என்று நினைக்கிறேன்.

“எப்படியானாலும், பாபுவின் மறைவுக்குப் பின் நாம் கடினமானதொரு காலகட்டத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். இது என் கடமை என்று நினைக்கிறேன், எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றால், உங்கள் கடமை என்றும் சொல்வேன்- நண்பர்களாகவும் சகாக்களாகவும் நாம் இருவரும் இக்காலகட்டத்தை இணைந்தே எதிர்கொண்டாக வேண்டும். வெறும் மேற்பூச்சாக அல்ல, ஒருவர் மீதொருவர் முழு நம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் முழு விசுவாசம் கொண்டவர்களாக நாம் செயல்பட வேண்டும். அவை என்னிடமிருந்து உங்களுக்குக் கிட்டும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

“உங்களிடம் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் அதற்கான நேரம் கிடைக்காத அழுத்தத்தில் இருக்கிறோம்… இடைப்பட்ட காலத்தில் நீங்கள் நாம் உரையாடும் வேளைக்காக காத்திருக்கக் கூடாது என்று இக்கடிதத்தை எழுதுகிறேன். இது என் அன்பையும் நட்பையும் தாங்கி உங்களிடம் வருகிறது.”

இந்த இனிய கடிதத்துக்கு வல்லப்பாயும் அதே உணர்வுடன் பதிலளித்தார்.

5.2.48 அன்று படேல் நேருவுக்கு எழுதியது:

“உங்கள் கடிதத்தில் புலப்பட்ட அன்பும் அரவணைப்பும் என்னை நெகிழச் செய்தன, நான் உணர்ச்சிவசப்படச் செய்தன. மிகுந்த நெகிழ்ச்சியுடன் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள பாசவுணர்வுகளை நானும் முழு மனதுடனும் இதயபூர்வமாகவும் பிரதிபலிக்கிறேன்.

“இருவருக்கும் பொதுவான ஒரு லட்சியத்தில் நாம் வாழ்நாள் நெடுக சகாக்களாய் இருந்திருக்கிறோம். நம் தேச நலனே பிரதானம் என்ற அக்கறையும் பரஸ்பர அன்பும் மதிப்பும், நம் பார்வைக் கோணம் மற்றும் மனப்பாங்கின் காரணமாய் நமக்கிடையே நிலவக்கூடிய வேறுபாடுகளுக்கு அப்பால் நம்மை இணைத்து வந்திருக்கின்றன.

“பாபு மறைவதற்கு முன் ஒரு மணி நேரம் அவருடன் இறுதி முறை பேசும் இனிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது… அவரது கருத்தும் நம்மிருவரையும் இணைக்கிறது. என் பொறுப்புகளையும் கடமைகளையும் இதே உணர்வுடன் அணுக வேண்டும் என்பதில் நான் முழு தீர்மானமாய் இருப்பதை என்னால் உங்களிடம் உறுதியாய்ச் சொல்ல முடியும்.”

அதற்கு முந்தைய நாள், அரசியல் சட்ட வடிவமைப்புச் சபை காங்கிரஸ் கட்சியினரிடம் உரையாற்றும்போது, தான் ஜவஹர்லாலுடன் இணைந்து அவருக்கு விசுவாசமானவராய் செயல்படப் போவதை வெளிப்படையாய் அறிவித்தார் வல்லப்பாய். நேருவை முதல் முறையாக, “என் தலைவர்,” என்று அழைத்த படேல், “தேசீய பிரச்சினைகள் அனைத்திலும் நான் பிரதமருடன் உடன்படுகிறேன். கால் நூற்றாண்டுக்கு மேல் நாங்கள் இருவரும் எங்கள் ஆசிரியரின் பாதங்களின் கீழ் அமர்ந்து, இணைந்தே இந்திய விடுதலைக்கு போராடியிருக்கிறோம். இன்று மகாத்மா இல்லாத நிலையில், நாங்கள் இருவரும் மோதிக் கொள்வதை நினைத்தே பார்க்க முடியாது.”

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இந்தச் சந்திப்பில் வல்லப்பாய் பதிலளித்தார்:

“நான் மகாத்மாவுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டேன் என்று சோஷலிஸ்டுகள் சொல்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்… குண்டு வீச்சு சம்பவத்துக்குப்பின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அறையிலும் ஒரு காவல்துறை அதிகாரி இருந்தார். மகாத்மா காந்தி அதை விரும்பவில்லை என்பது எனக்கு தெரியும். அது குறித்து என்னிடம் பல முறை விவாதிக்கவும் செய்தார்… பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருபவர்களை ஒருபோதும் சோதனையிட அனுமதிக்கக்கூடாது என்று அவர் என்னிடம் கடுமையாக வலியுறுத்தினார்.

“கொலைகாரன் காந்தியின் முன் மண்டியிட்டு வணங்கி, எழும்போது ஒரு பிஸ்டலை உருவி யாரும் அவனைப் பிடிக்கும் முன் சுட்டு விட்டான். இது ஒரு மிகப்பெரிய துரதிருஷ்டம், இதற்கு எதிராய் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொண்டிருக்க முடியாது.”

எவ்விதமான குறுக்கீடுமில்லாமல் தங்கள் சோதனை முயற்சிகளை மேற்கொள்ள ஒரு மாகாணத்தை அவர்களுக்கு அளிப்பது என்ற உறுதிமொழி உட்பட சோஷலிஸ்டுகளின் ஒத்துழைப்பைப் பெற தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைப் பட்டியலிட்டபின், படேல் கூறினார்: “தேசத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துரதிருஷ்டம், பெருந்துயரை அவர்கள் தங்கள் கட்சி நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” இதைச் சொல்லும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு நிமிடத்துக்கு மேல் பேசப் போராடித் தோற்றார். பின் தன் குறிப்புகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார். கல்கத்தாவில் வல்லப்பாய்க்கு ஆதரவாய் பேசிய ராஜாஜி கூறினார்:

“இந்த நாற்பது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காந்திஜி மிகப் பெரிய ஆபத்துகளைச் சந்தித்த சம்பவங்கள் பலவும் உண்டல்லவா? அவரது உயிரை இந்திய அரசுதான் காப்பாற்றிக் கொண்டிருந்ததா? கடந்த சில ஆண்டுகளில் மிகக் கடுமையான கோபமும் தீவிர உணர்ச்சியும் அவருக்கு எதிராய் ஒரு புயல் போல் திரண்டபோதும், அவர் உயிரிழக்கவில்லைதானே? அவரது உயிரை இந்திய அரசுதான் காப்பாற்றிக் கொண்டிருந்ததா? கடவுள் அவரைக் கொண்டு சென்றுவிட்ட நிலையில் இந்திய அரசைக் குற்றம் சாட்டுவது முட்டாள்தனம்தானே?”

பிப்ரவரி மாதத்தின் துவக்க நாட்களில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பு குறித்த கணிப்பில் படேலுக்கும் ஜவஹர்லாலுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. நேரு அதை ஒரு பாசிஸ அமைப்பு என்று கருதினார், வல்லப்பாய் அது தேசபக்தி கொண்ட அமைப்பு, ஆனால் தவறான பாதையில் செல்கிறது என்று நம்பினார். சில இடங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் காந்தியின் படுகொலையைக் கொண்டாடினர் என்ற செய்தியறிக்கைகள் பெற்றபின் படேல், அது “ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது,” என்ற முடிவுக்கு வந்தார். ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஆர்எஸ்எஸ் குறித்த கணிப்பில் இருவருக்குமிடையே இருந்த கருத்து வேறுபாடு தொடர்ந்தது. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் நேரு வல்லப்பாயிடம், “பாபுவின் கொலை ஒற்றைச் சம்பவமல்ல, ஆர்எஸ்எஸ் முன்னின்று ஒருங்கிணைத்த, அதைக்காட்டிலும் பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதி,” என்ற தன் கருத்தைக் கூறினார். சர்தார் அதை ஏற்கவில்லை.

27.2.1948 அன்று படேல் நேருவுக்கு கடிதம் எழுதினார்: “நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பாபு படுகொலை வழக்கு விசாரணையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து அறிந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் மாலையில் வெகு நேரம் (உளவுத்துறை தலைவர், தில்லி காவல் துறை லெப்டினன்ட் ஜெனரல்) சஞ்சீவியுடன் அன்றைய தினத்தின் முன்னேற்றம் பற்றி பேசித் தெரிந்து கொண்டு, அடுத்து செய்ய வேண்டியது எதுவும் இருந்தால் அது குறித்து பரிந்துரைகள் செய்து வருகிறேன்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட, விரிவான வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்… ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்பது இந்த வாக்குமூலங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. ஹிந்து மகாசபையின் தீவிரவாத பிரிவு ஒன்றுதான் இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டி வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறது.”

ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் சிலரின் வெறுப்புப் பட்டியலில் வல்லப்பாயின் பெயரும்கூட இடம் பெற்றிருந்தது. காந்தி படுகொலைக்கு சில நாட்கள் முன் அதன் தலைவர்களில் ஒருவர் பீகாரில் உரையாற்றும்போது, படேல், நேரு, ஆசாத் மூவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. எப்படியிருப்பினும், ஹிந்து மகாசபா, ஆர்எஸ்எஸ், மற்றும் காந்தி கொலைகாரனின் சமூகமான பிராமணர்கள், இவர்களுக்கு எதிராய் மகராஷ்டிராவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை சகிக்க மறுத்த வல்லப்பாய், வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் மென்மையாய் நடந்து கொண்ட பம்பாய் அரசின் போக்கு குறித்து (பம்பாய் பிரதமர்) கேரைக் கண்டித்தார்.

காந்தி இறந்து ஐந்து வாரங்களில், மார்ச் 5 அன்று படேலின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது. அவர் மதிய உணவு உண்ண அமர்ந்திருந்தார். ஒரு ஸ்பூன் சூப் உட்கொண்டபின், மதியம் 1.10 மணி அளவில், அவர் தன் இதயத்தில் தாளவொண்ணா வலியை உணர்ந்தார். மேஜையில் அமர்ந்திருந்த பிறர், மணிபென், ஷங்கர், சுஷீலா நாயர் ஆகியோர், அவர் தன் இதயத்தின் மீது வலது கையை வைத்துக் கொண்டு மௌனமாக இருப்பதை கவனித்தனர். என்ன விஷயம் என்று சுஷீலா கேட்டபோது, தனக்கு வலிப்பதை வல்லப்பாய் ஒப்புக் கொண்டார். சுஷீலா படேலை படுக்கைக்குக் இட்டுச் சென்றார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தவராய் ஷங்கரிடம் மருத்துவர் தண்டாவைத் தருவிக்கச் சொன்னார், நேருவுக்கும் தகவல் தெரிவிக்கச் சொன்னார். பதினைந்து நிமிடங்களில் அங்கு வந்த தண்டா படேலுக்கு மார்ஃபின் ஊசி போட்டார். இந்திரா மற்றும் ஃபெரோஸுடன் மதியம் இரண்டேகால் மணியளவில் ஜவஹர்லால் வந்தார். அதற்குள் வல்லப்பாய் தனக்கு அளிக்கப்பட்ட மருந்தால் மயக்க நிலைக்குச் சென்றிருந்தார், அவருக்கு நிலை கொள்ளவில்லை. ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவர் கண் திறந்து பார்த்தார், மணியின் முகத்தைக் கண்டார், கண்களை மீண்டும் மூடிக் கொண்டார். சுஷீலாவும் அவரது படுக்கையருகில் இருந்தார். மாலை நான்கு மணியளவில் படேல் தன் கண்களை மீண்டுமொரு முறை திறந்து பார்த்தார், மாரடைப்புக்குப் பின் முதல் முறையாய் பேசினார்: “நானும் பாபுவுடன் போயிருக்க வேண்டியது. அவர் தனியாய்ப் போய் விட்டார்.” பேசும்போது கரகரவென்று அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.