இலக்கியத்தில் பருவநிலை மாற்றம்

அமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தேன். மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவர் அளித்த பேட்டிகளிலும், நாவலை வாசித்தவர்களின் மிகை புகழ்ச்சியிலும் மயங்கி வழக்கத்துக்கு மாறாய் புத்தகம் வெளிவந்த வாரமே விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். ஆனால் ஏமாற்றத்தின் காரணம் அதுவல்ல.

பருவநிலை மாற்றத்தை நவீன புனைவிலக்கியம் பேச வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் கோஷும்கூட அதை எப்படி பேச வேண்டும் என்பது குறித்த சரியான பார்வையை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. வழக்கத்துக்கு மாறான வெயில் அடிக்கிறது, காற்று வீசுகிறது, பஞ்சம் வந்து விட்டது என்றெல்லாம் காலம்தோறும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல், காடுகளையும் இயற்கை வளங்களையும் அழிப்பது பற்றியும்கூட உணர்வுபூர்வமான படைப்புகள் இருக்கின்றன. இப்போது என்ன மாறி விட்டது?

Los Angeles Review of Books என்ற தளத்தில் இன்று ஒரு அருமையான நேர்முகம் போட்டிருக்கிறார்கள்- தலைப்பே புதுசா என்ன இருக்கு என்பதை உணர்த்துகிறது- “Everything We Still Take for Granted: Talking to David Wallace-Wells“. அண்மையில் மிகவும் அச்சுறுத்தலான கட்டுரை  எழுதி கவனம் பெற்ற வாலஸ்-வெல்ஸ் ஆதாரபூர்வமான கூடுதல் தகவல்களுடன் அதை இன்னும் விரிவாக்கி, ‘The Uninhabitable Earth’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். நான் வாசித்தவரை பருவநிலை மாற்றம் பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களில் இவரே கொஞ்சம் அலார்மிஸ்ட்டாக எழுதினாலும் மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

ஒரு வருஷம் மழை பொய்க்கிறது அல்லது அளவுக்கு மீறி கொட்டுகிறது என்றால் அடுத்த வருஷம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே போல் ஒரு வருஷம் தாங்க முடியாத வெயில், அனல் காற்று வீசுகிறது என்றால், சரி போகட்டும், மே மாதம் ஆச்சு, ஜூன், ஜூலை அப்புறம் கவலையில்லை என்று தேற்றிக் கொள்ளலாம். ஆனால், இனி வரும் காலங்களில் பெய்தால் கனமழை, இல்லாவிட்டால் வறட்சி என்று நிலைமை நாளுக்கு நாள் மேலும் மோசமாகப் போகிறது என்றால், அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? நமக்கும் சரி, எழுத்தாளர்களுக்கும் சரி, பருவநிலை மாற்றத்தை உள்வாங்கிக் கொள்வதில் இந்த மாற்றம்தான் இன்னும் பிடிபடவில்லை என்று நினைக்கிறேன்.

அசாதாரண மழை, வெயில், பனிப்பொழிவு, வறட்சி என்பதெல்லாம் செய்தியில்லை. இது நாம் வாழும் நினைவில்கூட எதிர்கொள்ளாத விஷயமில்லை. ஆனால், இதைப் பாருங்கள் – முப்பது வயதுக்குக் குறைந்தவர்கள் சாதாரண பருவநிலை என்றால் என்ன என்பதை அனுபவித்ததே கிடையாது, சூடேறிய உலகை மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள்-

இனி முப்பதாண்டுகளுக்கு முன்னிருந்த உலகுக்கு திரும்பிப் போக முடியாது. இப்போது இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், -சென்ற ஆண்டு துவங்கி அடுத்த இருபதாண்டுகளுக்குள் மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும், அரசுகள் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், நிதியாதார அமைப்புகள் தங்கள் முதலீடுகளின் இழப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், புதிய பொருளாதார அமைப்பு உருவாக வேண்டும். இதெல்லாம் நடக்கும் என்று நம்ப முடிகிறதா?

சென்ற ஆண்டு என் தந்தைக்கு பிராஸ்டேட் வீக்கம் இருப்பதாக கண்டறிந்தார்கள். அப்போதே அவர் வீட்டுக்கு வந்து கூகுள் செய்து பார்த்துவிட்டு கான்சரா இருக்குமோ, என்று கவலைப்பட்டார். அதெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் வரும் என்று அவசியமில்லை, என்று சொன்னேன். மருத்துவர்களும் அதையே சொன்னார்கள். இந்த ஆண்டில் ஒரு சில அசௌகரியங்களுக்குப் பின் கான்சர்தான் என்று உறுதியானது. ஆபரேஷன் அது இது என்று நிலைமை இப்போது பரவாயில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் முன்னிருந்த நிலைமை ரொம்பவே மாறி விட்டது.

எல்லாம் இப்போது இருக்கிறபடியே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனாலேயே திரும்பிப் போக முடியாத மாற்றங்கள் யாரோ ஒரு சிலரைத்தான் பாதிக்கும், நம்மை ஒன்றும் பண்ணாது என்றும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது எப்போதும் அப்படி இருக்க வேண்டியதில்லை. சில சமயம் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாததை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பதால் நடக்காது என்று ஒன்றும் ரூல்ஸ் இல்லை.

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் உறுதி. ஒன்று, மனித நடவடிக்கைகள் இதை மோசமாக்கி இருக்கின்றன. இரண்டு, மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தாலொழிய நாமறிந்த ‘நார்மல்’ பருவநிலை இனி திரும்பச் சாத்தியமில்லை, இன்னும் மோசமாகாமல் இருந்தால்தான் பெரிய விஷயம். ஒரு இடதுசாரி புரட்சிக்கார நண்பர் ஒருவர் சொல்லுக்கும் செயலுக்கு உள்ள இடைவெளி குறித்து தன் இதயத்தைக் காட்டிச் சொன்ன மாதிரி, “இதெல்லாம் மண்டையில் இருக்கிறது, இன்னும் உள்ளே இறங்கவில்லை.” பருவநிலை மாற்றம் குறித்த மேற்கண்ட விஷயங்கள் விஞ்ஞானிகளுக்கு நன்றாக தெரியும், அது குறித்து எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும், அதைத் தொடர்ந்து வாசிக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். ஆனால் எல்லாரும் அறிந்தும் அறியாமல் இருப்பதை தவிர்க்க முடியாத வகையில் இதயத்தில் இறக்க வேண்டியது புனைவெழுத்தாளனின் வேலை.

இன்றும்கூட, வாட்டியெடுக்கும் வெயிலில் போகும்போது வானத்தைப் பார்த்து, எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறோம், இந்த வெயிலுக்குக்கூட நாம் திரும்பப் போவதில்லை என்று நினைப்பதில்லை. மழை கொட்டும்போது, மழை நின்றதும் சகஜநிலை திரும்பிவிடும், நின்று போன வேலைகளைத் தொடரலாம் என்று நினைக்கிறோம். இந்த மழையைவிட கடுமையான மழைகள் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்று நினைப்பதில்லை, இனி வரும் காலத்தில் சகஜநிலை இதைவிட மோசமாக இருக்கப் போகிறது என்பதை அறிவதில்லை, நின்று போன வேலைகள் இருக்குமா என்பதே கேள்விக்குறி என்ற எண்ணம் வருவதில்லை.

ஒரு புனைவெழுத்தாளன் பருவநிலை மாற்றம் பற்றி எழுதுகிறான் என்றால்- இப்படி யோசித்து பாருங்கள்: இதையெல்லாம் உணர்வளவில் உள்வாங்கிக் கொண்ட வண்ணநிலவன் இன்று ‘எஸ்தர்’ எழுதுகிறார் என்றால் என்ன எழுதுவார்? சா. கந்தசாமி ‘சாயாவனம்’ இன்று எழுதினால் அது என்ன சொல்லும்? எந்த ஒரு இழப்பை எழுதும்போதும் சென்றதினி வாராது என்ற துயரம் இயல்பாகவே புனைவில் வெளிப்படுகிறது, நாஸ்டால்ஜியா கதை என்று கேலியும் செய்கிறோம். ஆனால் நாஸ்டால்ஜியாவில் நம் பின் ஒரு பொன்னுலகம் இருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் வெப்பமாகும், வெயிலும் வெள்ளமும் மாறி மாறித் தாக்கும் இன்றைய உலகம், நம் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் நாம் ஆண்டனுபவித்துச் சீரழித்த உலகம், இங்கு திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது? வருங்கால சந்ததியர் அனைவருக்கும் நாம் இன்றைக் காட்டிலும் கொடிய உலகை விட்டுச் செல்கிறோம், நல்லவை நம்மோடு போகும், அல்லவற்றை அவர்களுக்கு விட்டுச் செல்கிறோம்.

நாம் மட்டுமல்ல, புவி மொத்தமும் ‘இருக்கும் என்று நாம் இதுவரை எடுத்துக் கொண்டவை இனி என்றும் இல்லாது போகும்’ இழப்பை எதிர்கொள்கிறது. பருவநிலை மாற்றம் எப்போதும் நம்மோடிருந்திருக்கிறது அதை எப்போதும் இலக்கியத்தில் பதிவும் செய்திருக்கிறோம். ஆனால் சகஜநிலை திரும்பும் என்ற நினைப்பும் எப்போதும் உள்ளூர இருந்திருக்கிறது. இன்று தீர்மானமாகவே அந்த நம்பிக்கைக்கு இடமில்லை. வெயிலை எழுதும்போதும், மழையை எழுதும்போதும், புயலை எழுதும்போதும், கடல் உயர்ந்து ஊருக்குள் புகுவதை எழுதும்போதும் இன்றைய புனைவெழுத்தாளன் எதுவும் இயல்பு நிலைக்கு தானாய்த் திரும்பும் என்ற அனுமானத்துக்கு இடம் கொடுக்க முடியாது.

ஒளிப்பட உதவி : The Conversation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.