செயல்வகையும் செல்லிடமும் – எம். கே. காந்தி

நியாயம் பேசும்போது ஏதோ ஒரு கட்டத்தில் தர்க்கத்தை நிறுத்தி விட்டு ஒழுக்கத்தில் நின்றுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதைச் செய்யத் தவறினால் நியாயமான காரணங்கள் நம்மை அராஜகமாக நடந்து கொள்ளச் செய்து விடும் என்று தோன்றுகிறது. அப்புறம் ஒரு வேளை அதன் விளைவுகள் நாம் நினைத்தது போல் நல்லதாகவே இருந்தாலும் அந்த அராஜகம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக ஆகி விடுமா? ஏன் கூடாது என்று கேட்டால், லோக்கல் விஷயங்களை விட்டு விடலாம்,

மிகையுதாரணங்களாக, ஸ்டாலின் மாவோ மற்றும் பலரை தங்கள் நல்நோக்கங்களை அடையத் தவறினார்கள் என்றுதான் குற்றம் சொல்ல முடியுமே தவிர அவர்கள் செய்ததை எப்படி தப்பு சொல்ல முடியும்? ஒரு வேளை அவர்கள் நினைத்தது போல் ஒரு நல்லுலகம் உருவாகியிருந்தால் அவர்கள் செய்தது எல்லாம் சரி என்று ஆகிவிடும், இல்லையா? என்ன இது, நாமோ வீட்டில் மனைவி மக்களோடு சண்டை போடுகிறவர்கள், நம்மளவில் நிறுத்திக் கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் ஹிட்லர்தானா என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் நாம் அவர்களைப் போல் நம் நியாயங்களை நிறுவ அதன் தர்க்க எல்லையின் கடைசி வரை செல்பவர்கள் இல்லை, ஏதோ ஒரு நாள் ரெண்டு நாளில் சமாதானமாகப் போய் விடுபவர்கள். அதனால்தான் ஏதோ ஒரு இடத்தில் லாஜிக் பேசுவதை நிறுத்தி விட்டு எது மாரலாக சரி என்று சொல்ல முடியும் என்று பார்க்கச் சொல்வது. நாமும் அவர்களைப் போல் தீவிரமாக இருந்தால் ஒரு குடும்பம் இருக்காது.

காந்தி என்ன சொல்கிறார் பாருங்கள், இதில் லாஜிக் எத்தனை இடத்தில் அடி வாங்குகிறது, அதனால் அவர் சொல்வது சரியில்லை என்றாகி விடுமா, எப்போதும் அவர் மாரல்லி எது கரெக்ட்டோ அதைத்தான் சொல்லப் பார்க்கிறார்.

என்னளவில், செயல்வகை உணர்ந்தால் போதும். எனது வாழ்க்கைத் தத்துவத்தில் செயல்வகை, செல்லிடம் என்ற பதங்கள் இடம் மாற்றி பயன்படுத்தத்தக்கவை. – யங் இந்தியா, 26.12.24, பக். 424

செயல்வகையை ஒரு விதையுடன் ஒப்பிடலாம், செல்லிடத்தை ஒரு மரத்துடன். வித்துக்கும் தருவுக்கும் இடையுள்ள பிரிக்க முடியாத அதே தொடர்புதான் செயல்வகைக்கும் செல்லிடத்துக்கும் உள்ளது – ஹிந்த் ஸ்வராஜ், (1952), பக். 71.

‘என்ன இருந்தாலும் செயல்வகை என்பது செயல்வகைதான்’ என்று சொல்கிறார்கள். நான், “என்ன இருந்தாலும் செயல்வகைதான் எல்லாம்,” என்று சொல்வேன். படைத்தவன் செயல்வகையை நம் சக்தியில் (அதுவும் மிகவும் குறுகிய அளவில்) வைத்திருக்கிறான், செல்லிடம் நம் கையில் இல்லை. நாம் எந்த அளவு இலட்சியத்தை அடைகிறோம் என்பது நம் செயல்வகை எப்படி  இருக்குமோ அந்த அளவுதான் இருக்கும். இந்த விதிக்கு விலக்கேதும் இல்லை – யங் இந்தியா, 17.7.24, பக். 236.

முறையாக நடந்து கொள்வது என்பது யூக்லிடின் நேர்க்கோடு போன்றதல்ல. அது ஒரு அழகிய மரம் போன்றது. அதன் லட்சக்கணக்கான இலைகளில் எதுவும் மற்றது போலிருக்காது. எல்லாம் ஒரே விதையிலிருந்து வந்திருந்தாலும், எல்லாம் ஒரே மரத்துக்கு உரியதென்றாலும், ஒரு மரத்தின் எந்த பகுதியிலும் ஜியோமிதி வரைபடத்தின் சீரான தன்மையைக்  காண முடியாது. ஆனபோதும் விதை, கிளைகள், இலைகள், எல்லாமே ஒன்றுதான் என்பது நமக்கு தெரியும். முழுக்க பூத்து மலர்ந்திருக்கும் ஒரு மரத்தின் அழகிலோ மகோன்னதத்திலோ எந்த ஒரு புள்ளியிலும் ஜியோமிதி வரைபடத்தை ஒப்பிட முடியாது என்பதையும் நாமறிவோம். – யங் இந்தியா, 14.8.24, பக். 267.

சிலேட்டுப் பலகை இல்லாத ஒரு செவ்வகச் சட்டகத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சட்டகத்தைச் சிறிது முரட்டுத்தனமாக கையாண்டாலும் அதன் செங்கோணத்தை குறுங்கோணமாகவும் விரிகோணமாகவும் மாற்றிவிடும். அதே சட்டகத்தின் ஒரு முனையைச் சரியான வகையில் கையாண்டால் மற்ற மூன்று முனைகளும் தாமாகவே செங்கோணங்களாக மாறிவிடும். – ஹரிஜன், 30.11.47, பக். 447.

செயல்வகை தூய்மையாக இல்லாதபோது அதன் பலனும் தூய்மையான செல்லிடம்  அளிக்காது… பொய்யைக் கொண்டு மெய்யை அடைய முடியாது. நேர்மையான நடத்தை மட்டுமே உண்மையை அடைய முடியும். அகிம்சையும் உண்மையும் இரட்டைகள்தானே? ஆணித்தரமாக ‘இல்லை’ என்றே சொல்வேன். அகிம்சை உண்மையுள் அடக்கம், உண்மை அகிம்சையுள் அடக்கம். எனவேதான் அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லப்படுகிறது. ஒன்றை மற்றதிலிருந்து பிரிக்க முடியாது. நாணயத்தின் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் பாருங்கள். வெவ்வேறு எழுத்துகள் கொண்ட சொற்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் மதிப்பு அதேதான். அருளப்பட்ட இந்த நிலை பூரண தூய்மை இன்றி அடைய முடியாதது. உடலிலும் உள்ளத்திலும் அசுத்தத்துக்கு இடம் கொடுக்கும்போது உங்களிடத்தில் பொய்மையும் வன்முறையும் தோன்றுகின்றன- ஹரிஜன், 13.7.47, பக். 232.

“செயல் புரிய மட்டுமே உனக்கு உரிமையுண்டு, ஒரு போதும் அதன் பலனுக்கல்ல,” என்பது கீதையின் ஆப்த வாக்கியங்களில் ஒன்று. – ஹரிஜன், 18.8.40, பக். 254.

எல்லாம் வல்லவனின் ஆக்ஞைக்கு கட்டுப்பட்ட கருவிகள் மட்டுமே நாம். எனவே, எது நம்மை முன்கொண்டு செல்லும், எது நமக்கு தடையாய் அமையும் என்பது பற்றி ஓரளவுக்கு மேல் அறியாதவர்களாக இருக்கிறோம். எனவே நாம் செயல்வகை குறித்த அறிவுடன் நிறைவு கொள்ள வேண்டியதுதான். அவை தூய்மையாக இருந்தால், செல்லிடம் தன் பாட்டைப் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எந்த அச்சமுமில்லாமல் விட்டு விடலாம்.- வாய்ஸ் ஆஃப் ட்ரூத், (1950), பக். 318

இலட்சியம் என்னதென்றும் அதன் சிறப்பு இன்னதென்றும் எவ்வளவு தெளிவாக வரையறுத்தாலும், அதன் செயல்வகை என்னவென்று அறிந்து செயல்படுத்த தவறினால், அது நம்மை அங்கு கொண்டு செல்ல முடியாது. எனவே செயல்வகை பெருக்கிக் கொள்ளுதல், அதை மேம்பட்ட வகையில் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதில்தான் நான் விசேஷ கவனம் செலுத்துகிறேன். அதைப் பார்த்துக் கொண்டால் போதும், லட்சியத்தை அடைவது உறுதி என்பதை  நான் அறிவேன். நம் செயல்வகை எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அதே அளவுக்கு லட்சியத்தை நோக்கிய நம் முன்னேற்றமும் இருக்கும் என்றும் எனக்கு தோன்றுகிறது.

இந்தப் பாதை நீண்டதாகத் தோன்றலாம், ஒரு வேளை மிக நீளமானதாகவும் இருக்கலாம். ஆனால் இதுதான் மிகக் குறுகிய பாதை என்று தீர்மானமாக நம்புகிறேன்.- செலக்சன்ஸ் ஃப்ரம் காந்தி, (1957), பக். 36-37.

நியாயமான நோக்கங்களுக்கு நான் எவ்வளவு இணக்கமாக இருந்தாலும், அவற்றை நான் எவ்வளவு பாராட்டினாலும், இலட்சியங்களில் மிக உன்னத இலட்சியத்துக்கு பயன்பட்டாலும்கூட வன்முறை எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். எனது நம்பிக்கை ஒரு இனிய மயக்கமாகத்தான் இருக்கட்டும், அந்த நம்பிக்கை வசீகரமானது என்பதையாவது நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்- யங் இந்தியா, 11.12.14, பக். 406.

ஒருவன் செயல்வகையில் கவனம் செலுத்தினால் போதும், செல்லிடம் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். அகிம்சையே செயல்வகை, ஒவ்வொரு தேசத்துக்கும் செல்லிடம் பூரண சுதந்திரம் – ஹரிஜன், 11.2.39, பக். 8.

கத்தியைக் கொண்டு அடையப்பட்டது கத்தியைக் கொண்டே இழக்கப்படும் என்ற பழமொழியில் நான் கொண்டுள்ள நம்பிக்கை அழிக்க முடியாதது- ஹரிஜன், 2.9.39, பக். 260.

பற்றின்மை என்று சொல்லும்போது நான் உங்கள் நோக்கங்கள் தூய்மையாகவும் உங்கள் செயல்வகை சரியானதாகவும் இருக்கும்வரை உங்கள் செயலால் விளையும் பலன் விருப்பத்துக்கு உகந்ததாக இருக்குமா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது என்று சொல்கிறேன். நீங்கள் செயல்வகையில் கவனம் வைத்து மற்றவற்றை அவனிடம் விட்டு விட்டால் முடிவில் எல்லாம் சரியாக வரும் என்பதுதான் உண்மையில் பொருள்.- ஹரிஜன், 7.4.46, பக். 72.

வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் இல்லை. நம் பங்கை நன்றாகச் செய்தால் போதும்… நம் கடன் பணி செய்து கிடப்பது. இறுதியில், எல்லாம் அவன் சித்தம்- ஹரிஜன், 12.1.47, பக். 490.

நன்றி: THE SELECTED WORKS OF MAHATMA GANDHI, Vol-5 : Voice of Truth, Chapter-7: Means and Ends 

 

3 thoughts on “செயல்வகையும் செல்லிடமும் – எம். கே. காந்தி

    1. அப்படியும் சொல்லலாம். உண்மையில் எனக்கு இந்த means and ends என்பதற்கு எல்லா இடத்திலும் சரியான அர்த்தம் தரும் தமிழ்ச் சொல் தெரியவில்லை.

      இதையும் நேரம் கொடுத்து படிச்சதுக்கு நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.