விதையும் முளையும்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’, ‘தன் வினை தன்னைச் சுடும்’ போன்ற பழமொழிகளை நாம் மறந்திருக்க மாட்டோம். வழிமுறை, செயல்வகை, கருவி, Means, என்ன என்பதுதான் முக்கியமே தவிர, நோக்கம், லட்சியம், குறிக்கோள், முடிவு, Ends, என்ன என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று காந்தி சொல்வது அந்த மாதிரிதான். Means, Ends, இரண்டுக்கும் இடையிலுள்ள தொடர்பு துண்டிக்கப்பட முடியாதது என்று அவர் சொல்வதைத்தான் நாம் தாத்தா காலத்திலிருந்து ‘விதையொன்று போட்டால் சுரையொன்றோ முளைக்கும்?’ என்று கேட்கிறோம் (என்றும் சொல்லலாம்).

நம் லட்சியம் உயர்ந்ததாக இருக்கிறது, நல்லது நினைத்துதான் ஒன்று செய்கிறோம் என்பதற்காக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் அல்லது சம்பந்தப்பட்டவர்களை மீறி ஒன்று செய்யும்போது அப்புறம் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள் என்றோ நம் விருப்பு வெறுப்புகளை மீறி தன்னிச்சையாக முடிவெடுக்க மாட்டார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. அப்படியே எதிர்பார்த்தாலும் அது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அப்புறம், ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற பழமொழிக்கு ஸ்விட்ச் ஓவர் செய்ய வேண்டியதாக இருக்கும்.

அப்படியே நாம் நினைத்த மாதிரி நல்லது நடந்து விட்டாலும் செய்தது எல்லாம் சரியாகி விடும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் அமைதி திரும்பி விட்டது என்பது இலங்கை அரசின் போர்க்கால உத்திகளை நியாயப்படுத்துமா? அவர்களுக்கு அப்போது வேறு வழியில்லை என்று நினைத்தாலும்கூட நம் அரசு பிறரிடம் அந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்றுதான் நினைப்போம். விளைவுகள் எப்படி இருந்தாலும் செயலின் தன்மை மாறுவதில்லை.

அப்படியெல்லாம் கிடையாது, ‘போரிலும் காதலிலும் எதுவும் நியாயம்,’ என்ற பழமொழியை இங்கே ஏன் அப்ளை செய்யக்கூடாது என்று கேட்கலாம். “எந்த அரசாக இருந்தாலும் ஒரு எல்லையைத் தாண்டினால் அடக்குமுறையைக் கையாளத்தான் வேண்டும். நூத்து நாப்பத்து நாலு போடாத ஊர் எது?”ஆமாம், சரிதான். ஆனால் இங்கே நான் சுட்டுவது ஒரு இலட்சியத்தை அல்ல, நடைமுறையை. நூத்து நாப்பத்து நாலு, அடக்குமுறை என்பதெல்லாம் ஒரு நடைமுறை, கருவி. அது சரியான நடவடிக்கையா, அதைப் பயன்படுத்துவது நியாயமா என்றெல்லாம் பார்க்கலாமே தவிர நூத்து நாப்பத்து நாலு நம் ஆதர்ச ராஜ்யத்தில் இருக்குமா இல்லையா என்பதல்ல கேள்வி. ஏதோ ஒரு அவசியச் சூழலில் நரமாமிசம் உண்பது தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால் அது நரமாமிச உணவுக்கு லைசன்ஸ் தந்தது போலாகாது. அதை உண்டு பிழைத்த பின்னும் சீரணிக்க முடியாத விஷயமாகத்தான் இருக்கும். அதற்கென்ன அவசியம் என்ற கேள்வியை யாரால் தவிர்க்க முடியும்?

நேற்று means over the ends என்பதற்கு ஆதரவாக காந்தி என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடுவதற்காக கூகுள் செய்தபோது இந்த கட்டுரை கிடைத்தது- ‘Gandhi on the Primacy of Means over Ends, Peter Levine‘ . சில விஷயங்களை நன்றாகச் சொல்லியிருக்கிறார். நீதி என்பது (தர்மம் என்ற அர்த்தத்தில் இதைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்) ஏன் அரசியல் நடவடிக்கைகளின் முழுமுதல் முடிவாக இருக்க முடியாது என்பதை யோசிக்கிறார் அவர். அப்போது, கருணா மான்டேனா என்பவர் நீதியல்ல, லட்சியத்தை எப்படி அடைவது என்பதுதான் சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது என்று சொல்வதை சுட்டுகிறார் லெவின். கட்சி அரசியலையும் தேர்தல்களையும், வேலை நிறுத்தங்களையும், புறக்கணிப்புகளையும், தனி நபர் படுகொலைகளையும், புரட்சிகளையும் இன்னும் பல விஷயங்களையும் எப்போது, எப்படி முயற்சிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் உலக அளவில் நிகழ்ந்த காலகட்டத்தில் அதில் பங்கேற்றவர்களில் ஒருவர்தான் காந்தி என்கிறார் மான்டேனா. நியாயமான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் நீதியை நிலைநாட்டவும் வல்ல சரியான வழிமுறை, உத்தி எது என்று தீர்மானிக்கவே அரசியல் இருக்கிறது, நீதியை வரையறை செய்வதான பாவனைகளுக்கு அல்ல, என்று காந்தி வெளிப்படையாகவே சொல்கிறார்.

இங்கு லெவின் காந்தி தன் தத்துவத்தை அரசியலில் கையாண்டதைச் சுட்டுகிறார். “என்ன இருந்தாலும் வழிமுறைதான் எல்லாம்,” என்று காந்தி எப்போது சொல்கிறார்? 1924ஆம் ஆண்டு ‘அப்பீல் டு தி நேஷன்’ என்று இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்போது அவர் அதைச் சொல்கிறார். அவர்கள் என்ன சொன்னார்கள்? ‘இந்திய ஐக்கிய மாநில கூட்டாட்சிக் குடியரசு’ என்ற புதிய, சுதந்திர தேசம் உடனே உருவாக வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள் (‘ஃபெடரேட்டட் ரிபப்ளிக் ஆஃப் தி யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’). இது இந்திய மக்களின் விழைவுகளுக்கு நியாயம் செய்வதாக இருக்கும். இதை அடைய, காங்கிரஸ் கொள்கையிலிருந்து ‘அமைதியான, நேர்மையான முறையில்’ (‘by peaceful and legitimate means’) என்ற சொற்களை நீக்க வேண்டும். அப்போதுதான் பலதரப்பட்ட கருத்து கொண்டவர்களும் சுதந்திர போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.

‘விடுதலை’ என்ற கருத்துருவ நியாயம் எது, எப்படி இருக்கும் என்ற வடிவத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியாது என்பது காந்தியின் பதில் என்கிறார் லெவின். ‘எந்த ஒரு கணத்திலும் இந்திய மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த நிலை’ தான் எல்லாருக்கும் பொருந்தும் வரைமுறையாக இருக்கும் என்றார் அவர். மேலும், ஸ்வராஜ்யத்தை அடையும் வழி நல்லதாக இருக்க வேண்டும். ‘எவ்வழியோ அவ்வழியே முடிவும். வன்முறையைக் கொண்டு அடையப்பட்ட ஸ்வராஜ்யம் வன்முறை மிகுந்த ஸ்வராஜ்யத்தை அளிக்கும். அது உலகுக்கும் இந்தியாவுக்குமே ஒரு அச்சுறுத்தலாக இருக்கும்,’ என்றார் அவர். வன்முறை வெல்கிறது என்றால் அமைதி திரும்பியவுடன் அது நீங்காது. அமைதியின் மீது வன்முறையின் ஒடுக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இது குறித்து லெவின் சொல்வதை அப்படியே மொழியாக்கம் செய்கிறேன்:

“விளைவுகளை விட செயல்களில் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கு மான்டேனாவை துணைக்கு சேர்த்துக் கொண்டு நான் பின்வரும் காந்திய காரணங்களைச் சுட்டுகிறேன். மனிதர்களின் அறிதிறன் எல்லைக்குட்பட்டது. இன்றைய சூழலுக்கு வெகு தொலைவிலுள்ள நீதி அவர்களுக்கு புலப்படாது. மனிதர்களின் உள்நோக்கங்கள் குறைபட்டவை. பல்வேறு திரிபு மற்றும் நாசகார உந்துதல்களுக்கு பலியாகக்கூடியவை. எனவே, நாம் நம் உந்துதல்களை தீய வழியில் செல்வதற்கு மாறாக ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்தும் அரசியல் முறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீதி குறித்து (அல்லது தேசீய விடுதலை போன்ற அதன் கூறுகளில் எது குறித்தும்) மிகவும் கூர்மையான வரைமுறையை உருவாக்கிக் கொள்வது அழிவு உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு சலுகை அளிப்பதாக ஆகிவிடும். பின்விளைவுகள் எப்போதும் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் கடினமானவை, பல்வகைப்பட்ட தன்மைகள் கொண்ட முடிவை தேடிச் செல்வது முட்டாள்தனமானது. இறுதியில், நாம் அரசியலில் எப்படி பங்கேற்கிறோம் என்பது அரசியல் உலகைக் கட்டமைக்க உதவுகிறது. வினையாற்றும்போது நாம் ஒரு முடிவை அடைகிறோம் என்பது மட்டுமல்ல (பெரும்பாலும் அது எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது); நாம் செயல் புரிவதைக் கொண்டே அக்கணத்தில் ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்கி விடுகிறோம்”.

முடிவில் எது நியாயம், எது நீதி என்பதல்ல காந்தியின் கேள்வி. யார் நீதி வழங்குகிறார்கள், எப்படி நீதி வழங்குகிறார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கிறது என்கிறார் லெவின். ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அது சரியா தவறா என்று மயிர் பிளக்கும் விவாதங்கள் நடத்தலாம். அதனால் மட்டும் ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் யார் யாரை விவாதத்தில் சேர்த்துக் கொள்கிறோம், யாருக்குச் செவி சாய்க்கிறோம், யாரைப் புறக்கணிக்கிறோம், மொத்தத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் விஷயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.