டான் அல்பர்கொட்டி – நீர் மிதித்தல்

செய்திகள் சொல்லாதவை – 4

அவ்வளவு பிரமாதமான கவிதை என்று சொல்ல முடியாது, ஆனால் ஒருவருக்கு இது அர்த்தப்பட்டிருக்கிறது- ஜோடி காண்டோர் என்பவர், “இந்த மருந்து அளித்தவருக்கு நன்றி,” என்று இந்தக் கவிதையைச் சுட்டி டிவிட் செய்திருந்தார்.

திமிங்கலத்தின் வயிற்றில் சிக்கிக் கொண்ட ஜோனாவின் கதை தெரிந்தவர்கள் இதை அறிவார்கள்: ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்குள்ள மக்களைத் திருந்தச் சொல்லி காப்பாற்று, என்று கடவுள் சொல்வதைச் செய்ய விரும்பாத ஜோனா அவர் சொன்ன திசைக்கு எதிர்த்திசையில் பயணம் கிளம்புகிறான்- அந்த ஊர் மக்கள் அவனுக்கு ஆகாதவர்கள். அவன் ஏறிய கப்பல் புயலில் சிக்கிக் கொள்கிறது, இவனால்தான் எல்லாம் என்று கப்பலில் இருப்பவர்கள் ஜோனாவை கடலில் வீசுகிறார்கள். அவன் தண்ணீருக்கும் மூழ்கி செத்து விடாதபடிக்கு கடவுள் ஒரு திமிங்கலத்தை அனுப்புகிறார். அது அவனை விழுங்குகிறது, மூன்று பகல்கள் மூன்று இரவுகள் அதனுள் பிரார்த்தனை செய்யும் ஜோனா மூன்றாவது நாள் முடிந்ததும் கடற்கரையோரம் துப்பப்பட்டு உயிர் பிழைக்கிறான்.

இது போல் நாமும் ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வோம்? எங்கேயும் போக முடியாது, இத்தனை நாள் செய்த எதையும் செய்யவும் முடியாது. நமக்கோ கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது, மூன்று பகல் மூன்று இரவு பிரார்த்தனை செய்து வெளியே வருவதெல்லாம் நம்ப முடியாத காரியம்.

“Things to Do in the Belly of the Whale” என்ற கவிதையில் Dan Albergotti சொல்லும் பட்டியலை நம்மூர் கவிஞர்களும் எளிதாக எழுதி விட முடியும். சுவற்றை அள, விலா எலும்புகளை எண்ணு, நீண்ட நாட்கள் கழிவதை குறித்து வைத்துக் கொள், வானம் தெரிகிறதா என்று பார், உடைந்த படகுகளில் சிறு நெருப்புக்கள் பற்ற வை,பழைய நண்பர்களை அழை, தொலைதூர குரல்களின் எதிரொலிகள் கேட்கிறதா பார் என்றெல்லாம் போகிறது. இதை எல்லாம் அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி தொகுத்துக் கொள்ள முடியும்.

ஆனால், கவிதையின் முடிவில் வரும் வரிகள் விசேஷமானவை:

Think of all
the things you did and could have done. Remember
treading water in the center of the still night sea, your toes
pointing again and again down, down into the black depths.

நீ செய்தது, செய்திருக்கக்கூடியாது எல்லாவற்றையும் நினைத்துப் பார். அமைதியான இரவுக் கடலின் மத்தியில் நீ நீர் மிதித்துக் கொண்டிருப்பதை ஞாபகப்படுத்திக் கொள், உனது பாதத்தின் விரல்கள் மீண்டும் மீண்டும் கீழ்நோக்கிச் சுட்டுகின்றன, கீழே, ஆழங்களின் உள்ளே.

Treading water என்பதை நீர் மிதித்துக் கொண்டிருப்பது என்று சொல்வது மோசமான தமிழாக்கம்.

ஆங்கிலத்தில் அதற்கு

  • – maintain an upright position in deep water by moving the feet with a walking movement and the hands with a downward circular motion.
    — “they were at the deep end of the pool and trod water to keep afloat”
    – fail to make progress.
    — “men who are treading water in their careers”

என்று இரண்டு அர்த்தம் போட்டிருக்கிறான்.

ஆங்கில கவிதை இரண்டு தளத்திலும் வேலை செய்கிறது, தமிழ் விளக்கம் இரண்டு தளத்திலும் தோற்கிறது.

ஆனால், ஆங்கில கவிதை வரிகளை புரிந்து கொள்ள முடிகிறது, இல்லையா? ஆழமான நீரில் நேராய் நின்று கொண்டு, நடப்பது போல கால்களை நகர்த்துவது, கைகளை மேலிருந்து கீழ்நோக்கி வட்டமாய் சுழற்றுவது, எந்த முன்னேற்றமும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பது: உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பது என்று சொல்லலாம்.

“Remember/ treading water in the center of the still night sea” என்பதோ, அடுத்து வரும், “your toes/ pointing again and again down, down into the black depths,” என்பதோ அப்படி ஒன்றும் பிரமாதமான வரிகள் அல்ல. ஏன் ஜோடி காண்டோர் மருந்து என்று சொல்கிறார்? திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருப்பவன் என்னவும் செய்யலாம். ஆனால் அவன் சலனமற்ற இருட்கடலில் மூழ்கிப் போய் விடவில்லை, வியர்த்தம் என்றாலும் தன் முயற்சிகளைக் கைவிடவில்லை, அவன் நேராய் நின்று கொண்டிருக்கிறான், மிகவும் ஆழமான, கருமையான ஆழங்களைத் தன் பாதங்கள் துழாவினாலும் தொடர்ந்து நீந்துகிறான்.

ஜோனா திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து வெளியே வந்தான், இல்லையா? அது போல ஒரு நாள் வெளியே வர முடியும் நம்பிக்கை நமக்கு இருந்தால் இப்போது நாம் செய்யும் முயற்சிகள் வீண் போல தெரிந்தாலும், ஒரு முன்னேற்றமும் இல்லாதது போல இருந்தாலும், இதுவும் அர்த்தமுள்ள செயல்தான் என்றாகும். முட்டுச் சந்தில் நின்று கொண்டிருப்பவனது உழைப்பின் வேதனைக்கு, முயற்சிகள் அளிக்கும் வலிக்கு, இந்தக் கவிதை அளிக்கும் சித்திரம் ஒரு மருந்தாகலாம்.

***

ஒரு உடன் நிகழ்வாக, அல்லது தெய்வாதீனச் செயலாக, நண்பர் பாஸ்கர் லக்ஷ்மன் ஒரு சுட்டி அனுப்பியிருக்கிறார்- ‘A Matter Of Common Decency’: What Literature Can Teach Us About Epidemics, Melissa Block. அதில் ஆல்பர் காம்யூவின் ‘The Plague‘ என்ற நாவல் பற்றி ஒரு குறிப்பு இருக்கிறது: ஐரோப்பாவில் திடீரென்று மிக அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த நாவலைப் பேசாத செய்தித்தாளே அல்ஜீரியாவில் இல்லை, என்று சொல்கிறார் யேல் பல்கலையில் பிரஞ்சு இலக்கியம் கற்பிக்கும் ஆலிஸ் காப்லன். “இந்தக் காலத்தில் நீ அவசியம் படிக்க வேண்டியது என்ன தெரியுமா? அவசியம் ‘தி பிளேக்’ படிக்க வேண்டும், என்று பிரஞ்சு பத்திரிக்கைகளில் சொல்கிறார்கள். இது என்னமோ இந்த நாவலே ஒரு தடுப்பு மருந்து என்பது போல் இருக்கிறது- நாம் அனுபவப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி யோசிக்க உதவும் நாவல் மட்டுமல்ல, இது நம்மை குணப்படுத்திக் கொள்ள உதவும் விஷயம் என்கிற மாதிரி,” என்கிறார் அவர்.

NPR தளத்திலிருந்து அடுத்த இரு பத்திகளை நேரடியாக மொழியாக்கம் செய்கிறேன்:

“பிளேக்கை போர் பற்றிய உவமைக் கதையாக பயன்படுத்திக் கொண்டார்  காம்யூ: பிரான்ஸ் மீதான நாஜி ஆக்கிரமிப்பு பற்றியும் அதற்கு எதிரான விடாப்பிடியான போராட்டங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க அதை எழுதினார் அவர். இது போல் பிளேக்குக்கு எதிராக விடாப்பிடியாக தொடர்ந்து போராடுவதை அவரது பாத்திரம் டாக்டர் ரீயூ இப்படி விவரிக்கிறார்: “இதில் எல்லாம் நாயகத்தன்மை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. சாதாரண டீசன்ஸி சம்பந்தப்பட்ட விஷயம்தான் இது.. மற்றவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் என் விஷயத்தில், நான் என் வேலையைச் செய்வது முக்கியம்.”

“பிளேக்குக்கு எதிரான டாக்டர் ரீயூவின் போராட்டத்தில் பிரதிமைப்படுத்தப்படும் “சாதாரண டீசன்ஸி” இப்போது விசேஷமான வகையில் ஒத்திசைக்கிறது. “நமது சுகாதாரப் பணி ஊழியர்களைப் பார்க்கும்போது நமக்கு இந்த நினைப்பு வருகிறது,” என்கிறார் காப்லன். “மரணத்துக்கும் இழப்புக்கும் இடையே நேசமும் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் இருப்பது- இது காம்யூவுக்கு மிகவும் அர்த்தமுள்ள விஷயமாக இருந்தது,” என்கிறார் அவர். “அவர் போராடுவதைப் பற்றி பேசினார், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதைப் பேசினார்.””

***

முதலிலேயே இந்த என்பிஆர் கட்டுரையைப் படித்திருந்தால் வேறு மாதிரி எழுதியிருப்பேன். உண்மையில், எனக்கு ஏன் ஜோடி காண்டோர் இந்தக் கவிதையை மருந்து என்று சொல்கிறார் என்பது பிடிபடவில்லை. எழுதும்போதுதான் அதைப் பற்றி யோசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். பாஸ்கர் லக்ஷ்மன் அனுப்பியுள்ள கட்டுரை காம்யூவைப் பேசும்போது இந்த விஷயத்தை மிக எளிமையாகவும் தெளிவாகவும் புரிய வைக்கிறது. அதை முதலில் படித்திருந்தால் இந்தப் பதிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

என்றாலும் பரவாயில்லை, கொரொனா காலம் நாம் நினைத்தது எல்லாம் உண்மைதான் என்று உறுதிப்படுத்துவதற்காக வரவில்லை, தெரிந்த விஷயத்தைப் பற்றியே ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது, என்பதைச் சொல்ல வந்திருக்கிறது. காலம்தோறும் அளிக்கப்பட்டு வந்த இந்தச் செய்தியைப் புறக்கணிப்பவர்கள் கொடுக்கக்கூடிய விலை மிக அதிகம் என்பதை இப்போது உயிரைக் கொடுத்து உணர்கிறோம்.

கவிதை இங்கிருக்கிறது: Austin Kleon 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.