லாக் டவுன்

உலக விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதால் கொரானா பீதி பிப்ரவரி மாத மத்தியிலேயே லோகுவுக்கு தொற்றிக் கொண்டு விட்டது. “சீக்கிரம் லாக் டவுன் பண்ணனும்,” என்று பரபரப்பாக அவன் தன் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான். “இன்னும் ஏன் செய்யவில்லை, எதை எதிரபார்க்கிறார்கள்?” என்றெல்லாம் கேட்டும், இன்ன இன்ன காரணங்களினால் லாக் டவுன் செய்வது ஒன்றுதான் இந்தியா போன்ற ஏழை தேசத்துக்கு ஒரே வழி என்றெல்லாம் எழுதி எழுதி ஓய்ந்து விட்டான். அவன் நண்பர்களும் பதில் எழுதி ஒன்றும் பிரயோசனமில்லை என்று அவனைப் புறக்கணிக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள்.

அப்புறம் மார்ச் மாதத்தில் சில புத்திசாலி நண்பர்கள் அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு அரிசி, உப்பு, புளி, எண்ணை வகையறாக்களை மூன்று மாத தேவைக்கு வாங்கி வைத்துக் கொண்டு அவரவர் வளைகளுக்குள் பதுங்க ஆரம்பித்தார்கள். நியாயமாகப் பார்த்தால் லோகுவும் அந்த மாதிரி லீவு போட்டிருக்க வேண்டியவன்தான், ஆனால் பிழையான, மிகையான, ஆதாரங்களற்ற  கடமை உணர்ச்சி அவனை ஆபீசுக்கு உந்திச் சென்றது. அப்போதும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் லீவு போட்டு கொரானா சங்கிலியின் கண்ணியை வெட்ட தன்னாலான பங்களிப்பு செய்வதாக முடிவு செய்திருந்தான். “மக்கள் நடமாட்டம் அம்பது பர்சண்ட் குறைஞ்சா போதும் ஸார், அது எக்ஸ்பொனன்ஷியலா வேலை செஞ்சு தொற்றுப் பரவறதை எண்பது பர்சண்ட் குறைச்சிரும்,” என்ற வினோத கணக்கெல்லாம் போட்டான். யார் யார் எப்போது என்னென்ன வேலை செய்ய அனுமதிக்கலாம் என்ற விபர பட்டியலே தயார் செய்து வைத்திருந்தான்.

ஒரு வழியாக லாக் டவுன் உத்திரவானதும் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. இனி பாதுகாப்பாக இருக்கலாம், என்று அரசாங்கத்துக்கு நன்றி சொன்னான். அவன் கொஞ்சம் எதிர்பாராத வகையில் வெளியூரிலிருந்து பெருநகரங்களுக்கு வந்து வேலை செய்த கூலித் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே கிராமங்களுக்கு திரும்பும் காட்சியைப் பார்த்தபோது, “நாம்தான் எலைட்டு,” என்று தான் சொல்லி வந்தது உறுதிப்பட்டதைக் கண்கூடாகக் கண்டான். லாக் டவுனுக்கு பிரார்த்தித்த அத்தனை நாட்களில் அவன் அவர்களைப் பற்றி ஒரு கணம் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவர்களில் ஒரு சிலர் வழியில் நெஞ்சு வலியால் செத்துப் போனதுகூட தவிர்க்க முடியாத விலை-நன்மை பரிமாற்றம் என்று நினைத்துக் கொண்டான். பாவம்தான், ஆனால் என்ன செய்வது?

அப்புறம் ஒரு மூன்றே நாட்கள் ஆகியிருந்தபோது ஏதோ வேலையாய் இருந்த லோகு வீட்டு வாசலில் காலிங் பெல் ஒலிக்கக் கேட்டு வாசல் கதவைத் திறந்தபோது ஒரு நாற்பது ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மோவாய் முதல் கண் வரை முகத்தை முந்தானையில் போர்த்துக் கொண்டு, “பிள்ளைங்களுக்கு சாப்பிட ஒண்ணுமேயில்ல, ஏதாவது கொடுங்க,” என்று கேட்டுக் கொண்டு நிற்பதைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்தவன் கூடவே ஐம்பது ரூபாயும் சேர்த்துக் கொடுத்தான். அந்த அம்மா எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டபோது அவரது விரல் நுனி அவன் விரல் மீது பட்டது. ஞாபகமாக கை கழுவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் இந்த அம்மா தினமும் வந்து நின்றால் என்ன செய்வது என்ற கவலை வந்தது. ஒரு நாளைக்கு நூறு ரூபாய் என்றால்கூட மாசம் மூவாயிரம்தானே, என்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான். அந்த அம்மா ஏதோ தர்ம தேவதை போலவும், அவனது பாபங்களை வாங்கிக் கொள்ள வந்தது போலவும், இனி அவனுக்கு எந்த கெடுதலும் நடக்காது என்றும் நினைத்து தான் ஒன்றும் ஏமாறவில்லை என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

ஆனால் அதற்குப்பின் அந்த அம்மா வரவேயில்லை. அவர் இன்று வருவாரா இன்று வருவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் அந்த அம்மாவின் உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டபோது அன்றைக்கு அந்த அம்மா முகத்தை முந்தானையால் பாதி மறைத்துக் கொண்டிருந்தது கொரானா தனக்குப் பரவி விடும் என்ற பயத்தால் அல்ல, பிச்சை கேட்க வெட்கப்பட்டுக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்தார் என்பதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்டான். அவர் மறுபடியும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை அவன் அப்போதே உணர்ந்தான், ஏதாவது வழி பார்த்துக் கொண்டிருப்பார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.