ரோய்சின் கெல்லி- உயிர்த்தெழுதல்

செய்திகள் சொல்லாதவை – 6 

இது கார்டியனில் வந்த சற்றே நீண்ட கவிதை. இவ்வாரக் கவிதை என்று ஈஸ்டரையொட்டி போட்டிருக்கிறார்கள்.

காதல் கவிதைதான். படித்தவுடன் புரியவில்லை, அப்புறம் கீழே விளக்கம் எழுதியிருக்கிறார்கள், அதைக் கொண்டு இது இது இன்னது என்று புரிந்து கொண்டேன்.

ஈஸ்டரைப் போலவே இதுவும் ஒரு அதிசயம் நிகழ்வதைப் பற்றிய கவிதை. சொற்களின் அதிசயம், கிளர்ந்து எழும் நினைவுகளின் அதிசயம், அன்பு நிகழ்த்தும் ரசவாதம்.

கவிதை சாதாரணமாக துவங்குகிறது – முன்னாள் காதலன் (இது கவிதையில் நேரடியாகச் சொல்லப்படவில்லை, குறிப்பில் அப்படி சொல்கிறார்கள்), எதிர்ப்படுகிறான். கையில் ஒரு பூங்கொத்து வைத்திருக்கிறான். அதைச் சொல்லிவிட்டு, இரண்டாம் வரியில், “never knowing that you’ve just performed a miracle,” என்று சொல்கிறார் கெல்லி. அவருக்குள் அது என்ன அதிசயம் நிகழ்ந்தது என்பதுதான் கவிதை.

அந்தப் பூக்கள் அவனது காதலிக்காக இருக்குமா என்று கேட்டுக் கொள்கிறார். இங்கு ஒரு பின்கதை இருக்க வேண்டும். காதலி ஒரு சாக்லேட் முட்டையாக அவனுக்கு காத்திருக்கிறாள், என்று நினைத்துப் பார்க்கிறாள். அடுத்து வருவது வினோதமாக இருக்கிறது, உனது சாக்லேட் மேலோட்டினை உடைப்பேன் என்கிறார், நானும் சாக்லேட்டால் செய்யப்பட்டவளாக இருந்தால் என்னில் சில பகுதிகளை உடைத்து உங்கள் இருவருக்கும் தருவேன் என்று சொல்கிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது? ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இனிய நெருக்கம் உருவாகவில்லை- அவன் தன் கூட்டை விட்டு வெளியே வரவில்லை, அவளுக்கு தான் இனிமையானவளா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவனது புதிய உறவும் இது போல் தோல்வியடையக் கூடாது என்று விரும்புகிறாள்.

அடுத்து வருவது கொஞ்சம் கவித்துவமாக இருக்கிறது- “Once, I gave my words for garden/ and water and moonlit and love/ to a man who kissed me.” இத்தனையும் அவனுக்கே உரித்தாக்கி விட்டாள். அவன் போனதும் அத்தனையும் காணாமல் போய் விட்டது: “After he rolled/ a stone over my heart and shut me off/ from the world, I had no words left/ to describe the dark dream that followed.” அவள் இழந்தது சொற்களை அல்ல, அவற்றின் உணர்வுகளை.

சரி, இப்போது உன்னைப் பார்த்து விட்டேன். சொற்கள் உயிர் பெற்று விட்டன- மறுபடியும் ரோஜா ரோஜாவாகி விட்டது, அது மட்டுமல்ல, அதன் மொத்த குணங்களும் திரண்டு உயிர் பெற்றுவிட்டது, ஒரு கருப்பு வெள்ளை படத்துக்கு வண்ணம் சேர்வது போல். “Now a rose is once again/ not only rose but also soft and red/ and thorn and bee and honey.” நீ மலர் மட்டுமல்ல, முள்ளும் தேனும் வண்டும் என்பதெல்லாம் வேற லெவல் கற்பனை, அதையெல்லாம் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கவிதைக்கே உயிர் வந்து விட்டது. அதோ பாடிக் கொண்டிருக்கும் பறவை வெறும் பறவையல்ல, அது இசைக்கப்படும் பாடல், மரம், உயரத்தில் உள்ள கூடு, நீல வண்ண முட்டை. “Now a bird is singing song and tree/ and nest in a high place and blue speckled egg.” இரண்டு பறவைகள் சேர்ந்தது கூடு கட்டி குஞ்சு பொறிப்பது நினைவுக்கு வருகிறது, இல்லையா? நீயே வார்த்தைகளில் ஒளிர்கிறாய் என்கிறார் கெல்லி, அவை உன்னில் மேலும் கீழும் நகர்கின்றன, உயிர் இருப்பது போல்.

சந்தேகமென்ன, சொற்கள் உயிர் பெற்றுவிட்டன. அவை கெல்லியிடம் இனிமையைக் கொண்டு வருகின்றன. “The words bring themselves to me/ and tell my tongue sweetness over and over.”

இந்தச் சொற்களைக் கொண்டு உன் திருமணத்தின் போது நான் ஒரு அதிசயம் நிகழ்த்துவேன் என்கிறார் அவர். “With them,/ I’ll turn water to wine at your wedding.”

இந்த அதிசயம் இன்னொரு நாள் நிகழப் போகிறது என்று நான் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதே நிகழ்கிறது இந்த அதிசயம், எந்தச் சொற்கள் அவனோடு இருக்கும்போது உயிர் பெற்றனவோ, அவனில்லாது இருளில் ஆழ்த்தினவோ, அவனைக் கண்டதும் இனிக்கச் செய்தனவோ, அந்தச் சொற்கள் அவளுள் உயிர் பெற்றமையால், அவர்கள் இணைவதும் மணம் செய்து கொள்வதும் ஆசீர்வதிக்கப்படுகிறது. இன்னொரு நாளுக்காக அல்ல, இப்போதே.

கவிதை சொல்வது போல், “The words are everything”- சொற்கள் வாழ்விக்கும். அவை உயிர் பெறுகையில், அதிசயங்கள் நிகழ்த்தும். இது எழுத்துக்காரர்களுக்குதான் சாத்தியப்படும் ரசவாதம் என்பதல்ல, நேசத்தால் மட்டுமே நிகழும் ரசவாதம். இந்தக் கவிதையைப் படிக்கும் நம்மையும் இந்த அதிசயம் ஆசீர்வதிக்கிறது.

உயிர்த்தெழுதலை நினைவுபடுத்தும் வகையில், ‘ஈஸ்டர்,’ என்று கவிதைக்கு பெயர் வைத்ததும் பொருத்தம்தானே?

இங்கிருக்கிறது பாருங்கள்- The Guardian

ஒளிப்பட உதவி – Roisin Kelly

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.