All posts by natbas

தெருவுக்கு தெரு ஒரு டாகோ கடை

நண்பர் சில நாட்களில் ஊருக்குச் செல்லவிருந்தார். அவரிடம் ஒரு புத்தகம் கொடுத்தனுப்ப வேண்டும். எனவே லோகு அன்றைக்கு மதியம் மூன்று மணிக்கே பஸ் பிடித்து அடையார் வந்திருந்தான். நண்பரிடம் வேறு பேசி வெகு நாளாகிறது. அடையார் போக ஒரு மணி நேரம் ஆனாலும்கூட இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒரு ஆறு மணி வாக்கில் கிளம்பினால் கூடுவாஞ்சேரியில் இருக்கும் ஒரு வெட்டிங் ரிசப்ஷன் ஏழு மணிக்கு அட்டெண்ட் செய்து விட்டு, அங்கிருந்து எட்டு அல்லது எட்டரைக்கு கிளம்பினால் பத்து மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்பது அவனது திட்டம்.

ஆனால் எதிர்பாராத விதமாக, நண்பரிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் நண்பர் அடையாரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு எப்படி போகலாம் என்று கூகுளாராய்ச்சி செய்ய ஆரம்பித்ததில் நாலே-கால் முதல் ஐந்து மணி வரை வெவ்வேறு சாத்தியங்களைப் பேசுவதில் போய் விட்டது. அதற்குள் கூடுவாஞ்சேரிக்குக்கும் அடையாறுக்கும் இடையே கடக்க முடியாத தொலைவு இருப்பது போன்ற ஒரு தீவாந்திர அச்சம் லோகுவுக்கு வந்து விட்டது. சரி, எப்படி இருந்தாலும் ரயில் வசதி இருக்கும், ஒன்றும் கவலையில்லை, என்று தீர்மானித்து பஸ்ஸில் கிண்டி சென்று அங்கிருந்து ரயில் பிடித்தால் கூடுவாஞ்சேரி போய் விடலாம் என்று முடிவானது. எப்படியும் ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று இணையத்தில் போட்டிருந்ததால் நண்பருக்கும் லோகு தாமதமாகப் போய் விடக்கூடாது என்று கவலை வந்து விட்டது. அப்போது மணி ஐந்து என்பதையும் இருவரும் போக்குவரத்து கவலைகளைத் தவிர எதையும் பரிமாறிக் கொள்ளவில்லை என்பதையும் பார்த்தால் நிலைமையின் தீவிரம் புரியும்.

இன்னது செய்வது என்று முடிவானதும், “இருங்க ஒரு டீ சாப்பிட்டுட்டு போலாம்,” என்று சொன்ன நண்பர் சமையலறைக்குள் காணாமல் போன சிறிது நேர அவகாசத்தில் நண்பரின் படுக்கையில் சிதறியிருந்த புத்தகங்களில் சிலவற்றை பார்வையால் அப்படியே முழுசாக விழுங்கினான் லோகு. அதில் ஒரு புத்தகத்தின் அட்டை அழகாக இருந்ததால் அதைக் கையில் எடுத்து புரட்டிப் பார்த்ததில் ஒரு பக்கத்தில் சிறுகதை வாசிப்பு பற்றி ஏதோ எழுதியிருந்ததைப் பார்த்ததும் அந்தக் கட்டுரை அவனை உள்ளிழுத்துக் கொண்டது.

கட்டுரை எழுதியவர் ஏதோ ஒரு பதிப்பகத்துக்காக அந்த ஆண்டின் முப்பது சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மூன்று மாதங்கள், அதாவது, தொண்ணூறு நாட்களில் இருநூறு சிறுகதைகள் படித்து அதில் முப்பது சிறந்த சிறுகதைகள் எவை என்று முடிவு செய்ய வேண்டும். கர்ம சிரத்தையாக தினம் இவ்வளவு சிறுகதைகள் என்று வாசிக்க ஆரம்பிப்பவரின் வாழ்வில் வழக்கம் போல புயல் வீசத் துவங்கி விடுகிறது. யார் யாருக்கோ உடல் நலமில்லாமல் போகிறது, யார் யாரோ சாகிறார்கள், எங்கெங்கோ பயணம் மேற்கொள்கிறார். அத்தனைக்கும் நடுவில் அவர் சிறுகதைகள் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஒன்று, ஒன்றல்ல, இரண்டு உறைக்கிறது. ஒன்று, வாசகன் என்பவன் எழுத்தாளரைப் போல் இலக்கியத்துக்கு என்று தனி இடமோ முழு இடமோ அளிக்காதவன்- அவன் வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது ஏதோ கிடைக்கும் அவகாசத்தில் அல்லது அவசியத்தில் புனைவின் பக்கம் ஒதுங்குகிறான். உதாரணத்துக்கு, கட்டுரையாசிரியர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் விபத்துக்குள்ளாகக்கூடும் என்று ஒரு எச்சரிக்கை வரும்போது அவர் சிறுகதை படித்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சிறுகதை எப்படிப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்? வாழ்வின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்ச வேண்டாமா? இந்தக் கேள்வியின் அவசரத்தை- “உய்யடா உய்யடா உய்!”- ஆமோதிக்கும் லோகு, சிறிது வெளிச்சமெல்லாம் யாருக்கு வேண்டும், என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இரண்டாவதாக, உலகத்தில் எத்தனை எத்தனை கிளாசிக்குகள் படிக்க அவகாசமில்லாமல் காத்துக் கொண்டிருக்கின்றன, இதில் அற்ப விஷயங்களைப் பற்றிய சிறுகதைகள் – எவ்வளவு நன்றாக எழுதப்பட்டிருந்தாலும்-, மகத்தான, இதுவரை சொல்லப்படாத உண்மையைப் பேசாத கதைகள் (ஒரு கதை என்ன சொல்கிறது என்பதை கட்டுரையாசிரியர் ஒற்றை வரியில் சுருக்கி வைத்துக் கொள்வாராம்), இவற்றைக் கட்டிக் கொண்டு எதற்காக அழ வேண்டும், என்றெல்லாம் ஒரு மயான வைராக்கியத்துடன் எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும் லோகுவின் மனசாட்சி சிறிது புரண்டு கொடுக்க ஆரம்பித்தது.

ஒன்றுமில்லாத இந்த நீண்ட கதையை சுருங்கக் கத்தரிப்பதானால், லோகு நண்பரிடமிருந்து விடை பெற்று அடையாரிலிருந்து சைதாபேட்டைக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது (பயணத் திட்டம் மாறியிருந்தது), அன்று மதியம் அவன் அடையாறு வந்து கொண்டிருக்கும்போது பஸ்ஸில் அவன் அமர்ந்திருந்த இடத்துக்குப் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் போனில் பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.

அந்தப் பெண், முதல் போனில், “ஜோதா அக்பர் எல்லாம் எடுத்த டைரக்டரா இந்தப் படம் எடுத்தார்ன்னு ஆயிடுச்சுக்கா, லைட்டே இல்லை, எவ்வளவு வெளிச்சத்தில் கலர் கலரா எடுப்பார், இந்தப் படம் ஒரே இருட்டு, வெளக்கு வெளிச்சத்தில் எடுத்த மாதிரி இருக்கு…” என்று நுட்பமாக திரை விமரிசனம் செய்தார். அடுத்த போனில், “ஸாரி ஆண்ட்டி, போன் பேசிட்டிருந்தேன், உங்க கால் வந்தது. எடுக்க முடியல, என்ன விஷயம்?” என்று கேட்டுவிட்டு, “இல்ல ஆண்ட்டி போன வாரம்தான் எங்க அக்கா ரேஷன்ல வாங்கின சக்கரை கொடுத்து அனுப்பினாங்க, இதுவே போதும்ன்னு நினைக்கறேன். நான்அடுத்த மாசம் உங்ககிட்ட வாங்கிக்கட்டா?” என்று கேட்டார். அது முடிந்ததும் மூன்றாவது போனில் பேசும்போது வேறு பல விஷயங்களைப் பேசிவிட்டு, “இல்லப்பா, இப்பல்லாம் நாங்க காலைலே டெய்லி ப்ரஞ்ச்தான் சாப்பிடறோம்… டாகோ.. அதாம்பா மெக்சிகன் புட்… ஒண்ணுமில்லப்பா, டாகோ ஷெல் வாங்கி அதில தக்காளி, வெங்காயம், கொண்டக்கடல போட்டா போதும், டேஸ்ட்டா இருக்கும்… டாகோ ஷெல் மக்காச் சோளம்ப்பா… பேக் செய்யணும், நல்லா இருக்கும், பசங்க அதான் நெதமும் கேக்குதுங்க…” என்று பேசிக் கொண்டே போனார். என்னடா இது இட்டிலிக்கு வந்த சோதனை, என்று லோகு நினைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கும் ஒரு போன் வந்தது. அதைப் பேசி முடிப்பதற்குள் பினனால் உட்கார்ந்திருந்த பெண் இறங்கிப் போய் விட்டார்.

பேசுவது நம்மூர் மாதிரி இருக்கிறது, பேசும் விஷயம் ரொம்ப சோபிஸ்ட்டிகேடட்டாக இருக்கிறது, முகம் எப்படி இருக்கும், என்ன டிரஸ்ஸில் இருப்பாள், என்றெல்லாம் லோகுவுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நேர் பின்னால் திரும்பிப் பார்த்தால் நன்றாக இருக்காது, இறங்கும்போது ஓரப் பார்வையில் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த லோகு, போன் பேசும் சுவாரசியத்தில் அந்தப் பெண் இறங்கிவிட்டதை கவனிக்கத் தவறி விட்டான். சிறிது நேரம் கழித்து, பின்னால் பேச்சுக் குரல் எதுவும் இல்லையே, என்று மெல்லத் திரும்பிப் பார்த்தவன், பின்னிருக்கை காலியாக இருப்பதைப் பார்த்தபோதுதான் தான் தவற விட்டு விட்டது புரிந்தது. அதற்கப்புறம் அவன் தூங்கியும் போய் விட்டான்.

இதையெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கும்போதே சைதாப்பேட்டை ஸ்டாப்பிங் வந்து விட்டது. லோகு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த சந்துக்குள் புகுந்து ஸ்டேஷனை நோக்கி நடந்தான். வழியில் சைதை வணிகர் சங்க திருமண மண்டப வாசலில் ஈ, காக்கா இல்லை- மானிய விலையில் அங்கு விற்பனையாகும் டிபன் ஐட்டங்களை ஒரு கூட்டம் நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் அன்று விசேஷம் என்று கவுண்ட்டரை மூடி விட்டார்கள் போல, உள்ளே நிறைய சேர் எல்லாம் போட்டு வைத்து ஆட்கள் வரக் காத்திருப்பது தெரிந்தது. பஜார் ரோடு திரும்பும் மூலையில் இருக்கும் சப்பாத்தி கடையில்கூட யாரும் இல்லை- ஒரு பெரிய தட்டில் சோலா பூரிகள் காற்றெல்லாம் வெளியேறி தளர்ந்து கிடந்தன.

Advertisements

இன்று திரும்பிப் பார்க்கும்போது…

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது- ‘காலிக்கூட்டம்‘ என்று ஒரு பதிவு எழுதி அதை அப்புறம் நீக்கினேன். காலிக்கூட்டம் என்று சொன்னது கடும் சொல்தான், ஒருவர், இருவர் என்றில்லாமல் எல்லாரையும் நோக்கிச் சொன்னதாய் பொருள் தந்துவிட்டது. இப்போதும் அதற்காக வருந்துகிறேன் என்பதால் நீக்கியது சரிதான் என்று நினைக்கிறேன்.

அந்தப் பதிவுக்கு உடனடி எதிர்வினையாக பிரபல எழுத்தாளர் என்னைப் பற்றிய தன் முடிவை எழுதியிருந்தார். அதையடுத்து இன்னொரு பதிவில் சாதியாளர்கள், மதவாதிகள் நிறைய பேர் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், இது போன்ற குறுங்குழுச் செயல்பாடுகள் இலக்கியத்துக்கு எதிரானவை என்றும் எழுதி, இச்சூழலில் விவாதத்தைத் தொடர முடியாது என்பதால் சிறுகதை விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார் அவர் (நினைவிலிருந்து எழுதுகிறேன்). இளம் எழுத்தாளர்களுக்கு இது மிகப் பெரிய இழப்பு, சந்தேகமில்லை.

என் மின் அஞ்சல் முகவரி ஒன்று இந்தப் பக்கத்தில் இருக்கிறது, இந்த உரையாடல் குறித்து யாரும் அங்கு கடிதம் எழுதவில்லை. ஒரு நண்பர், “என்ன நடந்தது?” என்று கேட்டு மின் அஞ்சல் செய்தார், அவரை ஒரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். வேறொரு நண்பர், ‘வருத்தமான விஷயம் ஆனால் நீங்கள் வேகமாக இதைக் கடந்து செல்ல வேண்டும்,” என்று அஞ்சல் செய்திருந்தார், அவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன்,  மின் அஞ்சல்களில் நிறைய பேசியிருக்கிறேன். மூன்றாம் நண்பர், ஆறுதலாக நான்கு வரிகள் எழுதியிருந்தார், அவரை நான் சந்தித்ததில்லை, அவரோடு மின் அஞ்சலில் ஒரு பத்து முறைகூட உரையாடியிருக்க மாட்டேன். வாட்சப்பில் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார்- அவரை இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்திருக்கிறேன், அவருடன் அதே அளவு போன் பேசியிருக்கிறேன், வாட்சப்பில் அதுவரை அவரோடு உரையாடியது கிடையாது. இந்த நான்கு பேர் தவிர அன்றாடம் உரையாடும் பத்து பன்னிரெண்டு பேரில் இரண்டு பேர் மட்டும்தான், இதை விடக்கூடாது, தொடர்ந்து உங்கள் தரப்பைச் சொல்லுங்கள், என்று சொன்னார்கள். மற்றவர்கள், ஏன் இந்த தேவையில்லாத வேலை என்ற உணர்வில்தான் இருந்தார்கள். சிலர் நான் அப்படி எழுதியதை விரும்பவில்லை. இவர்கள் யாருமே என்னிடம் சாதி உணர்வுடனோ மத உணர்வுடனோ இது எதையும் பேசவில்லை, என்னை ஒரு தனி மனிதனாகவே அணுகினார்கள்.

ஆறுதல் சொல்லக்கூட என்னை தொடர்பு கொள்ளாதவர்கள் யாரெல்லாம் சாதி மத உணர்வுகளால் உந்தப்பட்டு வேறொரு இடத்துக்கு கடிதங்கள் எழுதியிருக்க முடியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் யார் அப்படிச் செய்திருப்பார்கள் என்று புரியவில்லை.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் சொன்னது எதுவும் அவ்வளவு பெரிய வருத்தமாக இல்லை (அதில் சில உண்மைகளும் இருக்கலாம்). மாறாய், தனி மனித கோபங்களைத் தீர்த்துக் கொள்ள ஏற்கனவே இருக்கும் சமூக பிளவுகளை பயன்படுத்திக் கொண்டதுதான் வருத்தமாக இருக்கிறது. இது போல் செய்வதால் இந்தப் பிளவுகள் இன்னும் ஆழமாகும் என்பதுதானே உண்மை? தனி மனித கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்ள சாதிச் சண்டை, மதக் கலவரங்களைப் பயன்படுத்திக் கொள்வது நெருப்புடன் விளையாடுவது போன்றதுதானே?

இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு யோசிக்கிற அளவுக்கு நாம் யாரும் பெரிய ஆட்களில்லை, எல்லாம் தேநீர்க்கரண்டியில் எழும் புயல்தான், என்று மனம் ஒரு பக்கம் சொல்கிறது. அதுதான் உண்மை, ஆனால் இன்னொரு பக்கம், இப்படிப்பட்ட மனநிலையை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.