பலம்

பலவீனமான செம்மறியாடு
நான்;
இருள்
வெயில்
மழை
பனி
என் மந்தை என்னை விட்டு
விலகியதேயில்லை.

திக்கொன்றாகச்சிதறி
எல்லோரும்
ஓடிய ஒரு தருணத்தில்

எதிர்கொண்டேன்
கழுத்தில் பதிந்தன
புலியின் பற்கள்!

வலிக்கவேயில்லை!

Advertisements

விடுதலை

இரவு
மிக மெல்ல  மெல்ல
ஊர்ந்துதான்
வந்தது.
வெளிச்சம் விசிறப்படுகிறபோது
அற்றுப்போவதும்,
இருள் சுதாரிக்கிறபொழுதுகளில்
உயிர்கொண்டெழுந்து
நகர்வதுமாயிருந்தது உடல்;
வெளிச்சம் இருப்புக்கு
ஆகாதெனப்பட்டவை
நீண்ட நாட்கள்……

அவை
கடந்தபின்னரான
ஒரு நாளில்தான்
வெளிச்சமே இருப்பு
ஆனது எனக்கு!

நிகழ்தகவு

நிகழக்கூடிய
சாத்தியங்களின்
சரடுகள்
அதிவேகநெடுஞ்சாலைகளில்
சர்ப்பங்களாய்
நெளிகின்றன.
சாலை கடந்தவை
ஓரங்களில்
பளபளக்கின்றன.

கடக்கமுடியாதவை இறைந்துகிடக்கின்ற
காலத்தின் மீதுதான்
என் வண்டி அதிவேகமாய்
பயணிக்கிறது.
கடந்துகொண்டிருப்பவைகள்
சில உழக்கப்படுகின்றன,
தவிர்க்கமுடிவதில்லை.

நிகழவேண்டியிருக்கிறது
சாத்தியம்!