சொல்வனம் 225 – ரொபர்டோ பொலான்யோ சிறப்பிதழ்

சர்வதேச இலக்கிய நட்சத்திரங்களைப் பேசுவதிலும் அவர்கள் எழுதுவதை வாசிப்பதிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசு ஒடுக்குமுறை, வன்முறை, ஊழல், ராணுவ ஆட்சியை விமரிசித்த புரட்சி எழுத்தாளர்களின் வசீகரம் தனி ரகம். அவர்களை எல்லாம் ரசித்து விதந்தோதி உச்சு கொட்டி பரிதாபப்பட்டாலும்கூட, தனி மனித அராஜகங்களுக்கு எதிராகவே ஒன்றும் சொல்ல முடியாதவர்கள் நம்மில் பலர், மக்களாட்சியும் அரசியலமைப்புச் சட்டமும் அளிக்கும் உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அநீதிக்கு எதிராய் குரல் எழுப்புபவர்களைக்கூட ஆதரிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர், நாளை இதற்கெல்லாம் ஆபத்து வந்தால் எத்தனை குரல்கள் மௌனமாகும் அல்லது சின்னஞ்சிறு கதைகள் பல பேசிச் செல்லும் என்ற கேள்விகள் சங்கடமானவை. கடவுளே, உயிருக்கு உத்திரவாதம் இருந்தாலும்கூட இந்த மாதிரி எல்லாம் உண்மையைச் சொல்வதா அல்லது பிழைப்பையும் நிம்மதியையும் காப்பாற்றிக் கொள்வதா என்ற தர்மசங்கடமான நிலைமையை ஒரு நாளும் கொடுத்து விடாதே, என்று வேண்டிக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம் – இத்தகைய சோதனைகளில் வெற்றி பெறுபவர்களைவிட, என்னையும் சேர்த்து சோரம் போகிறவார்களே அதிகம் இருப்போம். இப்போதே அடிப்படை உரிமைகள் பற்றி பேச்சு கொடுத்தால் தனிப்பட்ட உரையாடல்களில்கூட  மௌனம்தான் பதிலாக கிடைக்கிறது. நாம் எங்கே… தென்னமெரிக்க இலக்கியங்கள் ஒரு எச்சரிக்கை அளிப்பதென்றால் சரி, இணை வைத்துப் பேசும் நிலை எப்போதும் வர வேண்டாம்.

அதுவரை நம் கொண்டாட்டங்கள் தொடரட்டும்- சொல்வனம் 225 ரொபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் 

“எல்லாரும் சேர்ந்து ஒரு யூதாஸின் மரத்தை வளர்த்திருக்கிறார்கள் என உரோசியாவுக்குத் தோன்றுகிறது. மறைந்த ஃபேர்வெல், போர்ஹே, பெரூதா, பவுண்ட், ஹோமர், சாஃபோ கட்டிவைத்த மரம், யூதாஸ் தாங்கொண்ணா பச்சாதாபத்தோடு தொங்கிய மரமாக ஆனது. அதனை பயத்தாலும், அக்கறையின்மையாலும், கலக்கத்தாலும் நீரூற்றி விருட்சமாக ஆக்கி வைத்துள்ளனர்.

“ஒரு மதியம் நான் தேநீர் குடித்தபின் பாடிக்கொண்டிருந்தேன். யூதாஸ் மரம். என்ன அர்த்தம் கொடுக்கிறது: அது சீலேவே தான். முழு நாடும் யூதாஸ் மரமாக ஆகி நிற்கிறது. இலைகளற்று, இறப்பின் களையில், இருப்பினும் 40 இன்ச்சுகள் வளர்ந்த புழுக்கள் நெளியும் கருப்பு நிற நிலத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.”

இது இப்படித்தான் முடியும் எனத் தெரிந்தவர்களும் அரசுக்கு பயந்து வாய் மூடி இருந்துவிட்டனர். பின்னர் ஒரு நாள் மரியாவின் பங்களாவுக்கு உரோசியோ செல்கிறார். பழுப்பேறிய சுவர்கள், கனத்த திரைச் சீலைகள் தொங்கி சாளரங்களை மூடியிருந்தன, தோட்டத்தின் பாதையும், கதவுகளும் அடைத்து கிடந்தன. ஆம், இப்படித்தான் இலக்கியம் எங்கும் வளர்கிறது – பயத்துடன், கனவுகளற்று, புழுக்கள் நீண்ட மண்ணின் நீரை உண்டு, இருளில் விசும்பல்களாக.”
இருளின் விசும்பல்கள், By Night in Chile, ரா. கிரிதரன்

இது போல் இன்னும் நிறைய இருக்கின்றன, படித்துப் பாருங்கள், பாடுபட்டுச் செய்திருக்கிறார்கள்.

ஜான் ஆஷ்பெரி- மீளப் பேசுதல்

செய்திகள் சொல்லாதவை – 11

“வாழ்வில் நேரடி அறிவிப்புகள் எதுவும் இருப்பதாய் நான் கண்டதில்லை. அறிவு அல்லது உணர்வு எனக்கு எவ்வாறு வருகிறதோ, அதைப் போல் அல்லது அதை நகல் செய்யும் வகையில் என் கவிதை உள்ளது- தட்டுத் தடுமாறி, திசையின்றி வளர்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை கச்சிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட கவிதைகள் பிரதிபலிக்காது என்று நினைக்கிறேன். என் கவிதை துண்டிக்கப்பட்ட தன்மை கொண்டது, ஆனால் வாழ்வும் அப்படிதான் இருக்கிறது,” என்று சொன்ன ஜான் ஆஷ்பெரி ‘செய்திகள் சொல்லாதவை,’ என்ற இந்த தொடர் குறிப்புகளில் இடம் பெறத் தக்கவர்தான், இல்லையா?

நான் ஜான் ஆஷ்பெரியையும் அதிகம் படித்ததில்லை, அங்கங்கே சில தொகை நூல்களில், மேற்கோள்களில், விமரிசனங்களில் தென்பட்டது என்ற அளவில்தான் 100க்கு 99.90 எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் இருக்கின்றன, அதற்காக முழுசா புரிந்து கொள்ளாமல் யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன! “புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்,” என்று யதார்த்த அனுபவம், அது மனதில் நினைவாவது, அதன்பின் புனைவாய் வெளிப்படுவது என்ற உருமாற்றத்தில் ஒரு சமநிலைப்பட்ட மெய்ம்மை காண முயற்சிக்கிறோம் என்றால் வாசக அனுபவம் என்பது பெரும்பாலும் வாசிப்பு சார்ந்ததாகிறது. இது எழுத்தாளனை இல்லாமல் செய்வதில்லை, கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக் கொண்டு படிக்கலாம், புரிந்து கொள்ளலாம் என்று சலுகை கிடைக்கிறது. எனவே ஆஷ்பெரி என்ன சொன்னாலும் சரி, நமக்கு என்ன பிடிபடுகிறது என்று பார்க்கலாம். அது சரியாக இருந்தால் நல்லது, ஆனால் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நம் அனுபவத்துக்கு எந்த அளவில் உண்மையாக தெரிகிறது, அதில் கூடுதலாக என்ன கொண்டு வந்து சேர்க்கிறது என்பது போதும். முழுமையான விசாரணையை, எதிர்கொள்ளலை (engagement!) நிகழ்த்த முடியாத சோம்பலுக்கு சமாதானமாய் அமையும் குறுக்கு வழிதான் இது, இல்லை என்று சொல்லவில்லை.

‘Late Echo’ என்ற இந்தக் கவிதை சொல்வதற்கு எதுவும் மிச்சமில்லை என்று ஆரம்பிக்கிறது. நமது பித்தோடும் நமக்குப் பிடித்த மலரோடும் நாம் தனித்து விடப்பட்டோம். அப்படிச் சொல்லலாம், அல்லது, பழைய விஷயங்களை பழைய மாதிரியே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பது அவசியப்படுகிறது, என்று சொல்லலாம். அப்போதுதான் நேசம் சாவாதிருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக மாறுபட்ட வண்ணம் கொள்ளும். தேனடைகளையும் எரும்புகளையும் எக்காலமும் மீள் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அந்த நாளின் சாயம் நூற்றுக்கணக்கான தடவைகள் அவற்றின் மீது தெளிக்கப்பட வேண்டும், கோடை முதல் இலையுதிர்காலம் வரை இப்படிச் செய்யும்போது அது மிகவும் நிதானமான நடனமாக வேகம் குறையும், உயிரோடு இருக்கும், குத்திட்டு அமர்ந்து ஓய்வெடுக்கும்.

இதெல்லாம் எதற்கு என்ற கேள்வி வருகிறது.

அப்போதுதான் நம் வாழ்வின் நிரந்தர நிலையாகிப் போன கவனமின்மை சமாதான உணர்வு கொண்டு நம் மீது தரிக்கும்.

கடைசி மூன்று வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் தருகிறேன்-

“And with one eye on those long tan plush shadows
That speak so deeply into our unprepared knowledge
Of ourselves, the talking engines of our day.”

ஆஷ்பெரி ரொம்ப புதிர்த்தனமான கவிஞர் என்று சொல்கிறார்கள். இங்கே அந்த புதிர்த்தன்மையைப் பார்க்கிறோம். இதற்கு விடை காண முடியாது என்றாலும் ஒன்று புரிகிறது. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப பார்க்கும்போது, பேசும்போது, ஏதோ ஒரு வகையில் கவனம் திசை திரும்புகிறது, அறியாமை தன்னிச்சையாய் விழித்துக் கொள்கிறது, அந்த இடைவெளியின் நிழல்களில் புதிய அறிதல் புலப்படுகிறது. வேதாந்த மரபுக்குப் போய் சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பதில் வேண்டுமானால் ஒரு இணைப் பார்வை எடுத்துக் கொள்ளலாம்.

கவிதை இங்கிருக்கிறது, எளிமையான கவிதைதான், வார்த்தைகளில் ஒரு அழகும் இருக்கிறது.

புகைப்பட உதவி : Jacket 2 (இங்கு ஆஷ்பெரி தன் கவிதைகளில் ஒன்று பற்றி சற்று விரிவாகப் பேசுகிறார், இது அவரது மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவக்கூடும்)