கொள்ளை ஆசை

கையைக் கட்டி வாயைப் பொத்தி
ஆவி மீதூர வாரியணைத்து
இன்பத் தோணியில் ஏற்றியமர்த்தி
ஆனது ஆச்சு பொழைக்கிற வழியப் பாரென்று
வாழ்த்து முழக்கம் செய்தார்கள்.

ரதசப்தமி

இன்று காலை ஒரு வேலையாக அயோத்யா மண்டபம் பக்கம் போக வேண்டியிருந்ததது. வாசலில் ஒரு பெண் எருக்கம் இலைகளை கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தார். ஏழு இலைகள் பத்து ரூபாய். என்ன விஷயம் என்று கேட்டேன். ரதசப்தமி. பீஷ்மருக்காக தலை முழுகும் புண்ணியவான்களை நினைத்துக் கொண்டேன். இந்த தொன்மம் இன்னும் கதையாகவில்லை, ஒரு சிலர் விஷயத்திலாவது உயிருடன்தான் இருக்கிறது.

பீஷ்மரை கதையாய் நினைப்பவர்களுக்கு இப்படி தலை முழுகுவதெல்லாம் மூடநம்பிக்கை. பீஷ்மர் ஒரு அயோக்கியர் என்று எழுதி வாசித்து ரசித்து கொண்டாடுபவர்களுக்கு நாளை ரதசப்தமி மறைந்தால் ஒரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. கோயில் சிலைகளைக் கொள்ளையடித்து லாபம் பார்ப்பவர்கள் செய்வது ஒரு வகை வியாபாரம், தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்கள் பிறரின் நம்பிக்கைகளைத் தம் கதைகளின் உள்ளீடுகளாகப் பயன்படுத்திக் கொள்வது வேறொரு வகை வியாபாரம். தெய்வத்துக்கும் சிலைக்கும் உள்ள வேறுபாடுதான் தொன்மத்துக்கும் கதைக்கும் உள்ள வேறுபாடு. ஒன்றில் உயிர் இருக்கிறது, இன்னொன்றில் வாய்ப்பு இருக்கிறது, அவ்வளவுதான் விஷயம்.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது. கோயில் கோபுரங்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்கள் நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டுதானே செய்கிறார்கள்? தண்டனை குறித்த அச்சமில்லாத இடத்தில் குற்றம் நிகழ வாய்ப்பில்லை.