தொன்ம பூமி

நண்பர் வெ. கணேஷ் விற்பனைத்துறையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்- காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் பரபரப்பை அவரிடம் எப்போதும் பார்க்கலாம் (கூடவே படபடப்பையும்).

அண்மையில் அவர், ‘இதை எழுதியிருக்கிறேன், பாருங்கள்’, என்று பிடிஎப் பைல் ஒன்றை அனுப்பினார். என்னிடம் உள்ள மொபைலில் பிடிஎப் படிப்பது கஷ்டம், எனவே, ‘சரி கொஞ்சம் நேரம் கழித்துப் படிக்கலாம்,” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, “இதை கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்,” என்று இன்னொரு கோப்பு.

ஆனால் நல்ல வேளை, இது வர்ட் பைல். உடனே திறந்து, சுவாரசியமான கதையாக இருக்கிறதே என்று படித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு மெஸ்சேஜ். “இதை என் பிளாக்கில் போஸ்ட் செய்து விட்டேன், இதோ லிங்க்”.

அவ்வளவு சீக்கிரம் நாம் யார் பிளாக்குக்கும் போய் ஹிட் கொடுத்து திருப்தி செய்வதில்லை என்பதால் அவர் அனுப்பிய வர்ட் பைலை மட்டும் படித்துவிட்டு, “பிரமாதம் ஸார்” என்று பதில் செய்தி அனுப்பினேன். உண்மையில் பிரமாதம்தான்- படித்துப் பாருங்கள், “ஆப்பிள் தோட்டம்“.

நவீன தொன்மங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை மட்டுமல்ல, அவை அறிந்தும் அறியாமலும் எவ்வளவு self-servingஆக இருக்கின்றன என்பதையும் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் கணேஷ். நண்பருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

சமகால விவாதங்கள்

(நண்பர் வரசித்தன் வருகையைச் சிறப்பித்து)

முன்னனுமானங்கள், சார்பு நிலைகள்,
அசட்டுப் பிடிவாதங்கள், தற்சார்புப் பிரகடனங்கள்-
தண்ணீர் படக்கூடாத சொகுசு மெத்தைகள்
காற்றில் உலர்த்தப்பட்டு நாற்றம் போனதும்
மடித்து வைக்கப்படுகின்றன, விரித்துப் படுக்க.

நினைவில் நின்றவை

நேற்று இரவு எதையோ பார்ப்பதற்காக போனபோது கிடைத்தது-

forbes-quote

இதை எல்லாம் வேண்டாம் என்றோ இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

இந்த நினைப்பில்தான் வாட்சப் பரிமாறல்கள் நடக்கின்றன என்று நினைக்கிறேன்.

oOo

மூன்று கதைகள் இருக்கின்றன. நடந்த கதை ஒன்று, நடக்கக்கூடிய கதை ஒன்று, நடந்திருக்கக்கூடிய கதை ஒன்று, என்று ஜார்ஜ் சாண்டர்ஸ் கூறியதாக ஒரு பேட்டியில் படித்தேன். இதில், என்ன நடந்திருக்கும் என்ற மூன்றாவது விஷயம்தான் புனைவுக்குரிய விஷயம் என்கிறார் அவர் (“I’ve heard this creative writing notion that there are stories about what happened, what could happen, and what should have happened. The third one, of course, is the province of fiction”) – Bomb Magazine.