வரலாற்றின் ஒரே படிப்பினை

(ஆர்னோல்ட் டாய்ன்பீக்காக)

ஒவ்வொரு பருவமும் மழை பெய்தால்தான் உண்டு
வெள்ளம், ஒவ்வொரு நாளும் வெயிலடித்தால்தான் உலரும்
துணி, எத்தனை உண்டாலும் செரித்தபின் உண்டாகும்
பசி, பொழுதுக்கு உறங்கினாலும் வேளைக்கு வந்தால்தான்
தூக்கம்-

ஒவ்வொரு தலைமுறையும் உணர்ந்தாக வேண்டும் தன்
பாடம், வரலாறு வெற்றுக் கற்பனை, ஒழுகுதல் இல்லை
எனலால், அறங்களும் ஒழுக்கங்களும் அர்த்தமற்றவை, காலம்
மனிதன் முன் செல்லும் நிழல், தரிசனமல்ல
இருண்மை-

மானுட மனம் கற்றதைக் காணா மயக்கில்
திகைக்கும், கண்டதைக் கற்றதாய்த் தேரும், கண்முன்
இருள், திரும்பிய பார்வையில் அச்சத்தின் தோற்றங்கள்,
ஆசையின் உருவெளிக் காட்சிகள், தன்னைத் தொலைத்து
தேடித் திரியும் கால்கள் விட்டுச் செல்வதில்லை
யாருக்கும் உதவும் தடம்.

நகரத்தின் நடைபாதைக் கற்களுக்கிடையில் எங்கும்
முளைவிட்டுக் காத்திருக்கிறது காடு.

Advertisements

அன்பின் ஏகவாதம்

சிலிர்ப்பாய், எதிர்பார்ப்பாய், இழப்பாய், நிறைவாய்,
துணையாய், அளிப்பாய், தனிமையாய், வலியாய்,
எப்படித் தோன்றினாலும் அடிப்படையில் அறக்
கடப்பாடின்றி வேறில்லை.

நேற்று புதிதாய் பிறந்தோம்

நீ நேற்று, புதன் கிழமை,
காலை எழுந்திருந்தபோது
திங்கட்கிழமை போலிருந்தது நினைவிருக்கிறதா
இல்லாத இரண்டு நாட்கள்
தொலைந்து போனது குறித்து
வருத்தப்பட்டது நினைவிருக்கிறதா
ஒரு ரகசியத்தைக் காப்பதுபோல் அந்த உணர்வை
யாருக்கும் தெரியாமல் சுவைத்துக் கொண்டு
கரையக் கரைய நீட்டிக்கச் செய்தாயே
நினைவிருக்கிறதா-
அப்புறம் இரவில் தூங்கப்போகும்போது
ஒவ்வொரு நாளும் இது போல்
இரண்டு நாட்களை இழந்து எழுந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாய்
நினைவிருக்கிறதா-
ஆனால் இன்று காலை
மூன்று மணிக்கு எழுந்து மொபைல் பார்த்தபோது
காலம் ஒரு பெருஞ்சுமையாய் உன் தோளில்
ஏறி உட்கார்ந்து கொண்டதே,
அது எப்போதும் உன்னை விட்டு நீங்கவில்லை
நீ தொலைத்ததாய் நினைத்து மகிழ்ந்த
அந்த இரு நாட்கள் கனவும்கூட இல்லை,
இல்லாத நாட்கள் தொலைக்கப்படவில்லை
எல்லாம் சரிதான்
தொலைத்து விட்ட உணர்வுதான் இருந்ததே,
அதுவாவது இருந்திருக்கக்கூடாதா,
அல்லது அது எப்படி இருந்தது
என்பது மட்டுமாவது நினைவில்
இருந்திருக்கக்கூடாதா